2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நீர், சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கு அமெ.டொ. 40 மில். மேலதிக நிதியுதவி

S.Sekar   / 2021 ஜூன் 14 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் ஏழு மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் நீர் விநியோகம், கழிவறை மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக மேலதிக 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் சபை அனுமதியளித்துள்ளது. நீர் விநியோகம் மற்றும் கழிவறை வசதிகள் மேம்படுத்தல் திட்டம் (WASSIP) ஊடாக இந்த உதவியை வழங்க முன்வந்துள்ளது.


நாட்டின் மேல், தென் மற்றும் வட மாகாணங்களில் இந்த வசதிகள் மேம்படுத்தப்படுவதற்கு இந்த நிதி உதவி வழங்கப்படும். இந்தத் திட்டத்தினூடாக பதுளை, நுவரெலியா, கேகாலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, இரத்தினபுரி மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 310,000 பேரை சென்றடைய முடிந்துள்ளது. இந்தத் திட்டத்தினூடாக சுமார் 80 நீர் விநியோக கட்டமைப்புகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், 18000 க்கும் அதிகமான கழிவறைகள் மற்றும் 30 பாடசாலைகளுக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

1998 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் பின்தங்கிய, கிராமிய மற்றும் பெருந்தோட்ட பகுதிகளில் பாதுகாப்பான குடிநீர் மற்றும் கழிவறை வசதிகளை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் மூன்றாவது நீர் சார்ந்த திட்டமாக WASSIP அமைந்துள்ளது. அடுத்த நான்கு ஆண்டில் இலங்கையின் 4.7 மில்லியன் மக்களை உள்வாங்குவதற்கு இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அனைவருக்கும் நீர்” எனும் திட்டத்துக்கு இந்த மேலதிக நிதி உதவியாக அமைந்திருக்கும்.

இந்தத் திட்டத்தினூடாக நீர் விநியோக கட்டமைப்பு, ஏற்கனவே காணப்படும் நீர் விநியோக கட்டமைப்புகளை மறுசீரமைப்பு செய்தல், வீடுகள் மற்றும் பாடசாலைகளுக்கு கழிவறை வசதிகள் மற்றும் கழிவுநீர் வடிகட்டல் பகுதிகள் போன்றவற்றுக்கு நிதியளிப்பு வழங்கப்படும். நிலைபேறாண்மையை உறுதி செய்வதற்கு, கட்டமைப்புகளை இயக்குவதற்கு உள்ளூர் சமூக அடிப்படையிலான நிறுவனங்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. செயற்பாடுகள், பராமரிப்பு மற்றும் மீளமைப்பு செலவுகளை ஈடு செய்வதற்காக ஒவ்வொரு குடியிருப்பாளரும் கட்டணத்தை செலுத்துவதற்கு உடன்பட்டுள்ளனர்.

40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் உதவியாக வழங்கப்பட்டுள்ளதுடன், 18 வருடங்களில் முதிர்ச்சியடையும். இதில் ஐந்தாண்டுகள் காலக்கெடுவும் அடங்கியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .