2024 மார்ச் 28, வியாழக்கிழமை

காலாவதியான மருந்துகள் மீட்பு

Niroshini   / 2021 ஒக்டோபர் 13 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - குடியிருப்புகுள வீதியில் அமைந்துள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் இருந்து, பெருமளவான காலாவதியான மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வவுனியாவைச் சேர்ந்த ஓட்டோ சாரதி ஒருவருக்கு, சுகவீனம் ஏற்பட்ட நிலையில், நேற்று (12), குறித்த வைத்தியசாலைக்குச் சென்று, மருந்து பெற்றுள்ளார்.

இந்நிலையில், அந்த மருந்தை நேற்றைய தினம் இரவு, அவர் பயன்படுத்திய நிலையில், சுகவீனம் அதிகரித்ததுடன், உடலில் சில மாற்றங்களையும் அவதானித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த மருந்துகளை சோதித்து பார்த்த போது, அவை, ஒரு மாதத்துக்கு முன்பாகவே காலாவதியாகி உள்ளதை அவதானித்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர், இன்றைய தினம் (13) காலை, குறித்த வைத்தியசாலைக்குச் சென்ற அவர், அங்கு கடமையில் இருந்தவர்களிடம் விடயத்தைத் தெரியப்படுத்தியதுடன், தர்க்கத்திலும் ஈடுபட்டிருந்தார்.

இதனையடுத்து, அங்கிருந்த பணியாளர் காலாவதியான மருந்தை மூன்று மாதங்களுக்குப் பயன்படுத்தலாம் என தெரிவித்ததாக, பாதிக்கப்பட்டவர் கூறினார்.

இதை தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக, மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.

சம்பவ இடத்துக்குச் சென்ற பாவனையாளர் அதிகாரசபையின் அதிகாரிகள், விசாரணைகளை முன்னெடுத்ததுடன், காலாவதியான சில மருந்துகளையும் மீட்டனர்.

மேலும், குறித்த வைத்தியசாலைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம், பொதுமக்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், இவ்வாறான அலட்சியமான சம்பவங்களால் ஏற்படும் பாதிப்புகள் மேலும் தொடராமல் இருப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்தனர்.   

இந்நிலையில், இது தொடர்பில குறித்த தனியார் வைத்தியசாலையின் உரிமையாளரான வைத்தியரிடம் கேட்டபோது, தமது வைத்தியசாலை இந்தத் தவறை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X