2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மையவாடி பகுதியில் மைதானம்: ’ஆராயுமாறு கோரிக்கை விடுத்துள்ளேன்’

Niroshini   / 2021 செப்டெம்பர் 22 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலாபத்துறை, புதுவெளி பகுதியில் உள்ள முஸ்லிம் மையவாடி பகுதியில், தற்போது கரப்பந்தாட்ட மைதானம் அமைப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் ஆராய்ந்து, துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக, மன்னார் மாவட்டச் செயலாளர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் தெரிவித்தார்.

முசலி மஸ்ஜிதுத் தக்வா ஜும் ஆப் பள்ளிவாசலுக்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் காணியில் பாலர் பாடசாலை, பள்ளிவாசல், மையவாடி போன்றவை அமைந்துள்ளது.

எனினும், மையவாடிக்கென ஒதுக்கப்பட்ட காணிக்குள் கரப்பந்தாட்ட மைதானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதோடு, ஆரம்ப கட்ட பணிகள் இடம்பெற்று வருகின்றன.

குறித்த விளையாட்டு மைதானம் அமைக்கும் நடவடிக்கைக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள போதும், உரிய அதிகாரிகள் குறித்த விளையாட்டு மைதானத்தை குறித்த மையவாடி பகுதியில் அமைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

எனவே, மையவாடி பகுதியில் குறித்த விளையாட்டு மைதானம் அமைக்கப்படுவதை நிறுத்தி, வேறோர் இடத்தில் அமைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம் என, முசலி மஸ்ஜிதுத் தக்வா ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகம், மாவட்டச் செயலாளரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக மன்னார் மாவட்டச் செயலாளரை தொடர்பு கொண்டு வினவிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், குறித்த விடயம் தொடர்பாக முசலி மஸ்ஜிதுத் தக்வா ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத்தால் தனது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் மையவாடி பகுதியில் அமைக்கப்படவுள்ள கரப்பந்தாட்ட மைதான பணியை நிறுத்தி வேறோர் இடத்தில் அமைக்க கோரிக்கை விடுத்திருந்தனர் எனவும் கூறினார்.

இந்நிலையில், இவ்விடயம் தொடர்பாக முசலி பிரதேசச் செயலாளரின் கவனத்துக்கு   கொண்டு வந்ததோடு, அது தொடர்பில் ஆராய்ந்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என, அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .