2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் புதிய அமைச்சரவைக்குள்ள பொறுப்பு

ச. சந்திரசேகர்   / 2020 ஓகஸ்ட் 16 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்து, புதிய பிரதமரும் அமைச்சரவையும் பதவி ஏற்றாயிற்று. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எய்தியுள்ள வெற்றியினூடாக, பொது மக்கள் பெருமளவு எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர் என்பதை உணர முடிகின்றது.   

கடந்த நாடாளுமன்றத்தில் காணப்பட்ட சுமார் அறுபத்தாறு அங்கத்தவர்கள், இம்முறை தெரிவாகியிருக்கவில்லை. இது மொத்த நாடாளுமன்ற அங்கத்தவர்களில் சுமார் மூன்றில் ஒரு பங்காகும். இதனூடாக புதிதாக நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள அங்கத்தவர்களுக்கு தெளிவான செய்தி ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. பொது மக்களின் நலன் கருதி செயலாற்றாதவர்கள் குறுகிய காலத்துக்கே அவர்களை பிரதிநிதிப்படுத்த முடியும். பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, அபிவிருத்தி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பொதுஜன பெரமுன அரசாங்கம் நிறுவப்பட்டுள்ளது. இவற்றை நிறைவேற்றுவதற்கான காலம் இனிவரும் காலமாகும்.   

இந்த உறுதிமொழிகளில் பொருளாதார வளர்ச்சி என்பது, மிகவும் சவால்கள் நிறைந்ததாக அமைந்துள்ளது. தொகைமதிப்பு, புள்ளிவிவரங்கள் திணைக்களத்தின் தரவுகளின் பிரகாரம், 2020 முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 1.6 சதவீதம் சரிவை பதிவு செய்திருந்தது. முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியில் இந்தப் பெறுமதி 3.7 சதவீதம் வளர்ச்சியடைந்திருந்தது. இந்நிலையில், நாட்டில் கொவிட்-19 முடக்க நிலை

ஏற்படுவதற்கு முன்னதாகவே பொருளாதார வளர்ச்சி எதிர்மறையான பெறுமதியைப் பதிவு செய்துள்ளமையானது மிகவும் கவலையளிக்கும் விடயமாக அமைந்துள்ளது.   
பொருளாதாரத்தின் நான்கு பிரதான உள்ளம்சங்களான விவசாயம், தொழிற்றுறை, சேவைகள், தயாரிப்புகள் மீது வரிக்குறைப்பு நிவாரணங்கள் போன்றன அடங்கியுள்ளன. இவை முதலாம் காலாண்டில் மொத்தத் தேசிய உற்பத்தியில் தமது பங்களிப்பை முறையே 7.3%, 28.4%, 58.3%, 6% பங்களிப்பை பதிவு செய்திருந்தன.   

எவ்வாறாயினும், கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக, பொருளாதாரத்தின் பல துறைகள் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருந்தன. இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்திருந்தது என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதனடிப்படையில், முதல் காலாண்டில் மதிப்பிடப்பட்ட மொத்த தேசிய உற்பத்தி விவசாயம், தொழிற்றுறை செயற்பாடுகளில் 5.6%, 7.8% பெறுமதியை வீழ்ச்சியாக பதிவு செய்திருந்ததுடன், சேவைகள் துறை மாத்திரம் 3.1% வளர்ச்சியைப் பதிவு செய்திருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.   

இரண்டாம் காலாண்டின் தரவுகள் இதனை விட மோசமானதாக அமைந்திருக்கும் என்பதை அனுமானிக்க முடிகின்றது. கடந்த வார முற்பகுதியில் Moody’s முதலீட்டு சேவைகள் நிறுவனத்தின் துணை நிறுவனமான ICRA லங்கா தரப்படுத்தல் முகவர் நிறுவனம் வெளியிட்டிருந்த வருட மத்திய மீளாய்வின் பிரகாரம், முதல் காலாண்டு பொருளாதார வீழ்ச்சி 0.2% வீழ்ச்சியை பதிவு செய்யும் என்பதுடன், இரண்டாம் காலாண்டில் இந்தப் பெறுமதி 6.9% எனும் பாரதூரமான பெறுமதியைப் பதிவு செய்யும் என மதிப்பிட்டுள்ளது.   

2020ஆம் ஆண்டுக்கான எதிர்வுகூறல்களில் சீராக்கங்களை மேற்கொள்வதற்கு முன்னதாக முதல் காலாண்டு வளர்ச்சி பெறுபேறுகளை தாம் எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கி அண்மையில் அறிவித்திருந்தது. இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கையில், இந்த ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 1.5 சதவீத அதிகரிப்பை பதிவு செய்யும் என மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனாலும், பிந்திய தரவுகளின் அடிப்படையில், இந்த வளர்ச்சியை எய்துவது என்பது எட்டாக்கனியாக அமைந்துள்ளது.   

நாட்டின் மொத்த சனத்தொகையில் சுமார் 28 சதவீதமானோரைக் கொண்ட விவசாயத்துறையில் தாக்கம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதுடன், நாட்டின் பொருளாதாரத்தை சமநிலைப்படுத்த அரசாங்கத்தின் தலையீடு தெளிவான தேவையாக அமைந்துள்ளது. ஊக்குவிப்பு நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க வேண்டிய அழுத்தம் அரசாங்கத்தின் மீது காணப்படும்

நிலையில், நிதித் துண்டுவிழும் தொகையை கட்டுப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ள நிலையில், இந்த ஆண்டு இப்பெறுமதி 9% ஐ எய்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் காரணமாக, பயனற்ற முயற்சிகளில் அரசாங்கத்தால் பணத்தை பாய்ச்ச முடியாது. ஒக்டோபர் மாதத்தில் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை மீளச் செலுத்த வேண்டியுள்ளதுடன், இந்த ஆண்டும், அடுத்த ஆண்டும் பெருமளவு கடன்களை மீளச் செலுத்த வேண்டிய நிலைக்கு இலங்கை முகங்கொடுத்துள்ள நிலையில், நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்பட்டில் நிலையாக பேணுவதற்கு மாற்று வழிமுறைகளை இனங்காண வேண்டிய நிலைக்கும் முகங்கொடுத்துள்ளது.   

உள்நாட்டு தொழில்துறைகளை ஊக்குவிப்பதனூடாக குறுங்கால அடிப்படையில் வளர்ச்சியை பதிவு செய்யக்கூடியதாக இருக்கும். ஆனாலும் பெருவாரியான ஏற்றுமதி, முதலீடுகளின்றி, நிலைபேறான வளர்ச்சியை ஈட்டுவதற்கு இலங்கை பெரும் சவால்களுக்கு முகங்கொடுக்கும். எதிர்வரும் புதிய நாடாளுமன்ற அமர்வுகளின் போது, ஜனநாயக செயன்முறைகளை பின்பற்றுவதை உறுதி செய்வதுடன், நாட்டில் காணப்படும் பொருளாதார சார் பிரச்சினைகளை சீர் செய்வது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். அதற்குரிய அத்தியாவசியமான காலமாக இனிவரும் காலம் அமைந்திருக்கும்.   

பொருளாதார நெருக்கடி, கொவிட்-19 நெருக்கடி போன்றன காணப்படும் போதிலும், பல மாவட்டங்களில் எதிர்பார்த்ததை விட அதிகளவானோர் தமது வாக்குகளை பயன்படுத்தியிருந்தனர். இதனூடாக நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி, புதிய மறுமலர்ச்சியை எதிர்பார்க்கின்றனர் என்பது தெளிவாகின்றது. எனவே, புதிதாக நியமனம் பெற்றுள்ள அமைச்சரவை அங்கத்தவர்கள் தமது பொதுப் பணிகளையும், நாட்டுக்காக தமது அர்ப்பணிப்புகளையும் வெளிப்படுத்த வேண்டும் என்பது வாக்களித்த பொது மக்களின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. மொட்டு மலர்ந்துள்ள நிலையில், மக்களின் நம்பிக்கைகளும் கைகூடும் என எதிர்பார்க்கின்றோம்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X