2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

குடும்பத்தின் அபிவிருத்திக்கு நம்பிக்கையின்பால் கிடைக்கும் பலம், சக்தி

Editorial   / 2019 ஓகஸ்ட் 16 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழ்க்கையை வெற்றிகொள்வதற்கு, நம்பிக்கை என்பது அத்தியாவசியமாகிறது. ​அதேபோன்று, திருமண வாழ்க்கை என்பதும், இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே நிலைபெறுகிறது. அவ்வாறானதொரு நம்பிக்கை சீர்குலைந்துவிடுமாயின், அந்த வாழ்க்கை சூன்யமாகிவிடும்.   

ஆரம்ப காலங்களில், குடும்பத்தின் கணவன் - மனைவி உறவென்பது, மிகவும் கௌரவமிக்க பதவிநிலைகளாகவே பார்க்கப்பட்டது. யதார்த்தத்துடன் வாழ்ந்த அக்கால மக்களின் தேவைகளும் மிகவும் வரையறுக்கப்பட்ட நிலையிலேயே காணப்பட்டதால், ஏமாற்றுதல் ஏமாற்றப்படுதல் என்பதற்கு இடமிருக்கவில்லை.

இருப்பினும் இப்போது, தொழில்நுட்பத்துடன் கூடிய வளர்ச்சி, மனித வாழ்க்கைக்கு வரையறுக்க முடியாத தேவைகளின் அவசியத்தை வலியுறுத்தத் தொடங்கியுள்ளன. வெளிநாடுகளில் கடைப்பிடிக்கப்படும் கலாசாரங்கள், இலங்கைக்குள்ளும் கடைப்பிடிக்கத் தொடங்கப்பட்டதால், எம்மக்கள் வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.

இதற்கு முதற்காரணம் தொலைக்காட்சி என்றே கூறலாம். அதனூடாகக் காணும் காட்சிகள், கதாபாத்திரங்களாக, எம்மக்களும் மாறத் தொடங்கியதால், சமூகத்துடனான தொடர்பாடல், பாரிய மாற்றம் காணப்பட்டுள்ளது. இன்று இந்தக் குடும்ப வாழ்க்கை மீதான நம்பிக்கை குறைவதற்கும், இந்தச் சமூகத் தொடர்பே காரணமாகி இருக்கின்றது.

அத்தியாவசியமானதும் அவசியமானதுமான விடயங்கள் சமூகத்தோடு வந்துசேரும் போது, வீட்டின் தலைவனாகக் கருதப்படும் கணவரின் சம்பாத்தியம் மட்டுமே, அந்தக் குடும்பத்தைக் கொண்டு நடத்துவதற்குப் போதுமானதாக இல்லை. இதனால், கணவனும் மனைவியும் சம்பாதித்தே ஆகவேண்டும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது, இருவருக்குமான வேலைப்பளுவையும் அதிகரித்துள்ளது.

இதனால், இருவருக்குமிடையில் சிறிய பிரச்சினையொன்று ஏற்பட்டவுடன், அதற்கு விடைதேட, பேஸ்புக் பக்கத்தை நோக்கிப் பயணிக்கின்றனர். அந்தப் பேஸ்புக் ஊடாக ஏற்படுத்திக்கொண்ட நட்பிடமிருந்து, தமது பிரச்சினைக்குத் தீர்வுகாண முற்படுகின்றனர். இதற்குக் காரணம், ஒருவருக்கு ஒருவர் சலித்தவர் இல்லை என்ற எண்ணம், அவர்கள் மனங்களில் குடி​கொண்டு உள்ளமையே ஆகும்.

நாம் என்னதான் உரிமைகள் பற்றிப் பேசினாலும், கலாசார ரீதியில் பின்னிப் பிணைக்கப்பட்ட சமூகக் கட்டமைப்புடைய நாட்டிலேயே வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். இதனால், மேற்கத்தேய நாடுகளின் கலாசாரமும் பண்பாடுகளும், எங்களுக்கு எவ்வகையிலும் பொருந்துவதில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

நம்பிக்கையின்பால் கட்டியெழுப்பப்பட்ட குடும்பமொன்றுக்​கே, இந்தச் சமூகம் இன்னமும் கௌரவத்தை வழங்குகின்றது. இந்த இடத்திலிருந்து தான், நாம் எமது குடும்பம் குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.

இருவருக்கு இடையிலான தொடர்பொன்று, ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசுவதாலேயே ஏற்படுத்தப்படுகின்றது. இதுவே, நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான வழியுமாகும். அடிக்கடி உங்களுக்கு உங்கள் துணை நினைவுக்கு வருவதை, அவரு(ளு)க்கு அறியப்படுத்துங்கள், நீங்கள் சாப்பிடப்போகுமுன், சாப்பிட்டீர்களா என்று ஒரு வார்த்தை கேளுங்கள். அலுவலகத்தில் எத்தனை வேலைகள் இருந்தாலும், துணையுடன் பேசுவதற்காக, ஓரிரு நிமிடங்களையேனும் ஒதுக்கிக்கொள்ளுங்கள். குடும்பச் சவால்களை எதிர்கொள்வதற்கு, நம்பிக்கையே சிறந்த ஆசிர்வாதமாகும். அவ்வாறு நம்பிக்கையால் கட்டியெழுப்பப்பட்ட குடும்பத்தவர்களின் முகங்களில், எப்போதும் ஒரு புத்துணர்ச்சியும் மலர்ச்சியும் காணப்படும். அதுவே, அந்தக் குடும்பத்தின் வெற்றியுமாகும்.

அனூஷா கோகுல பெர்ணான்டோ
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .