2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

நேர்கொண்ட பார்வை

Editorial   / 2019 ஓகஸ்ட் 30 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் மிகவும் விரும்பிப் பார்த்த திரைப்படம் நேர்கொண்ட பார்வை.  நவீன பெண்கள் எதிர்கொள்ள நேரிடும் பாலியல் சிக்கல்களை இப்படம் வெவ்வேறு கோணங்களில் ஆழமாக அலசியுள்ளது. பெண் வெளிப்படுத்தும் ‘மறுப்பை’, ஆண் எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும், ‘ஒப்புதல்’ (consent) என்பதை, எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பது குறித்த தெளிவை, இந்தத் திரைப்படம் அழுத்தம் திருத்தமாகப் பேசுகிறது.

ஒரு பெண் ‘வேண்டாம்’ என்று தெரிவிப்பதைப் புரிந்துகொள்ளும் நுண்ணுணர்வுடன் ஆண் வளர்க்கப்படுவதில்லை.

பெண் தனது மறுப்பை வெளிப்படுத்தச் செய்யும் அத்தனை செயல்களையும், அவள் பாசாங்கு செய்வதாகத் தவறுதலாகப் புரிந்துகொள்வதுதான் பொதுவாகவே ஆண்களின் இயல்பு. அப்படிப் புரிந்துகொள்ளும்படியாகத்தான் அவர்கள் வளர்க்கப்படுகின்றார்கள். ‘பெண் மனம் ஆழம்’, ‘பெண் முரண்களின் மூட்டை’ என்றெல்லாம் காலங்காலமாகப் பெண்ணைப் புரிந்துகொள்ள மறுக்கும் ஆண் மய்யச் சமூகமானது, பெண்ணைப் புரிந்து கொள்ள முடியாத புதிராகவே சித்திரித்துப் பழகிவிட்டது.

'பெண்ணின் மௌனம் சம்மதம்” “பெண் இல்லை என்று சொன்னால், ஆமாம் என்று அர்த்தம்’, ‘வேணாம் என்று சொன்னால், வேண்டும் என்று அர்த்தம்’- இப்படி முட்டாள்தனமான கற்பிதங்கள் வேறு.  இந்தக் கற்பிதங்களைத் தான் இத்தனை காலம் தமிழ் சினிமாக்களும் பிதற்றிக்கொண்டிருந்தன. இவற்றுக்கு நடுவே, “ஒரு பெண் ‘நோ’என்று சொன்னால், அதற்கு அர்த்தம் ‘நோ’தான்” என்று அஜித் போன்ற வணிக ரீதியான பெருவெற்றிகண்ட “மாஸ்” ஹீரோவிடமிருந்து வசனம் வருவதென்பது தமிழ்ச் சினிமா பாவ விமோசனம் தேடும் அற்புதத் தருணம் என்றே கொள்ளலாம்.

சொல்லப்போனால், பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இந்திய சினிமா அவ்வப்போது குரல் கொடுத்துவந்திருக்கிறது. ஆனால், பாலியல் ஒப்புதல்/மறுப்பு என்ற தளத்தில் இந்திய வெகுஜனத் திரைப்பட உலகிலிருந்து ஒலித்த முதல் குரல், 2016இல் வெளியான ‘பிங்க்’ என்ற இந்தித் திரைப்படம். அதன் தமிழ் மறுஉருவாக்கமாக வெளிவந்த ‘நேர்கொண்ட பார்வை’ மூலக் கதையின் அடர்த்தி குறையாமல் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டிருப்பது தமிழ்ச் சினிமாவில் நிகழ்ந்திருக்கும் புதிய திறப்பு. முன்பின் தெரியாத பெண், தோழி, காதலி, பாலியல் தொழிலாளி ஏன் மனைவியே ஆனாலும், ஒரு பெண் ‘நோ’ என்று சொன்னால், அதற்கு அர்த்தம் ‘நோ’தான் என்பதை சமூகத்துக்கான திரைக்கதை என்றே கொண்டாடலாம்.

உடை, சமூக அந்தஸ்து, சம்பந்தப்பட்ட ஆணும் பெண்ணும் சந்தித்துக்கொள்ளும் இடம், தோழனுடன் செல்லுதல், முந்தைய பாலியல் உறவுநிலை இவற்றில் எதை வைத்தும் ஒரு பெண் பாலியல் உறவுக்கு உடன்படத் தயாராக இருப்பதாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. நவீன பெண்களுக்கு இப்படியான சிக்கல் என்றால், மறுமுனையில் ‘குடும்பப் பெண்’ என்ற சட்டகத்துக்குள் திணிக்கப்படும் பெண்கள் தங்களுடைய பாலியல் விருப்பத்தை ஒருபோதும் வெளிப்படுத்த மாட்டார்கள். ஆகையால், அவர்கள் ‘வேண்டும்’ என்பதை ‘வேண்டாம்’ என்பதன் மூலமாகத்தான் வெளிப்படுத்துவார்கள் என்று நம்பப்படுகிறது. ஆக, ஒருபுறம் எதையுமே சொல்லவில்லை என்றாலும் நடை, உடை, பாவனை மூலமாகப் பாலியல் உறவுக்குப் பச்சைக்கொடி காட்டும் நவீனப் பெண். மறுபுறம், ‘வேண்டாம்’ என்று சொல்வதன் மூலமாக ‘வேண்டும்’ என்று மறைமுகமாகச் சுட்டிக்காட்டும் பாரம்பரியப் பெண். இந்த இரண்டு வகை பெண்கள் மட்டுமே இருப்பதாகத்தான் ஆண் மய்ய சமூகம் புரிந்துகொண்டிருக்கிறது. ஆனால், பெண்ணின் பாலியல் ஒப்புதலைச் செயல், நடத்தை மூலமாகப் புரிந்துகொள்ள ஆண்கள் பழக வேண்டியுள்ளதை நேர்கொண்ட பார்வை பதிவு செய்திருக்கிறது. இதில் நடத்தை என்பது மனதளவில் தான் தயார் என்பதை விருப்பமாக வெளிப்படுத்துவது. செயல்வழியாக ஒப்புதலை வெளிப்படுத்துவது என்பது ‘தலையசைத்தல்’, ‘ஓகே’, ‘சரி’ என்ற சைகை, வார்த்தைகளில் வெளிப்படலாம். சில நெருக்கடியான சூழலில் ‘சரி’ என்று சொல்வதுகூட சம்மதம் ஆகிவிடாது. அதேபோல, ஒப்புதலோடு தொடங்கும் செயல் ஒருகட்டத்தில் அசௌகரியமாக மாற விலகிப்போகக்கூடும். ஆக, ஒப்புதலாக இருப்பதுகூட வேறுகட்டத்தில் மறுப்பாக மாறலாம். இவை எல்லாவற்றையும் சம்பந்தப்பட்ட இருவர் பரஸ்பரம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். சில சந்தர்ப்பங்களில் நாகரீகம் கருதி பெண் ”நோ” என்று நேரடியாகச் சொல்வதற்குப் பதில் வேறு வழிகளில் வெளிப்படுத்தவும் முடியும்.

பெண்ணுக்கான சுதந்திரத்தின் எல்லை என்பதையே ஆண் மய்ய சமூகம் இன்னும் தீர்மானித்து முடிக்கவில்லை. பாலியல் கல்விக்கு இன்னும் ஆதரவான நிலை உருவாகவில்லை. இப்படி எல்லாமே இல்லை என்றிருக்கும் சமூக அமைப்பைக் கேள்விக்குட்படுத்தி, செவிட்டில் அடித்துச் சிந்திக்க வைக்கும் சினிமாக்கள் அவ்வப்போதுதான் வருகின்றன.  பெண்ணின் எல்லா எல்லைகளையும் தீர்மானிப்பவர்களாகத் தங்களையே வலிந்து நிறுத்திக் கொள்வதையே ஆணியம் விரும்புகின்றது. பெண்ணின் செயல்களையும், அவள் பேசுகின்ற பேசாத சொற்களுக்குமான அகராதிகளையும் சுமந்து திரிகின்ற ஆண்கள், பெண்ணின் மௌனத்தைச் சம்மதமாகப் பாவித்துக்கொள்ளுதல், மறுப்பையே ஏற்பாகக் கற்பனை செய்துகொள்ளுதல் ஆகிய கற்பனைகள் இனியேனும் கலையவேண்டும்.

இதற்கு அப்பால் சென்று சிந்திப்போமென்றால், நம் பிள்ளைகளுக்கு “நோ” சொல்வதற்குக் கற்றுத் தருவதும் இந்தக் காலத் தேவைகளில் ஒன்று என்பது புரியும். நல்ல தொடுகை, கெட்ட தொடுகை பற்றி நம் பிள்ளைகளுக்குக் குழந்தைப் பராயத்தில் சொல்லித்தரவேண்டும் என்பதில் பெரும்பாலான பெற்றோர்கள் உடன்படுகின்ற ஆரோக்கியமான சூழல் உருவாகி வருகின்றது. குழந்தைகளைப் பாலியல் வன்புணர்வுகளிலிருந்து காப்பாற்ற வேண்டும்,  அவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவது கடமை என்று கருதுகின்ற எந்தவொரு பெற்றோரும் குழந்தைகளுக்குப் பாலியல் கல்வி புகட்டுவதை மறுக்கவே மாட்டார்கள். பாலியல் கல்வி என்றால் அது புணர்தல் பற்றியது, ஆணுறை பாவிப்பதையும் கருத்தடை மாத்திரை எடுக்கவும் சொல்லித் தருவது என்று முட்டாள்தனமாகப் புரிந்து கொண்டு, பாலியல் கல்வியையும் குடும்பக் கட்டுப்பாட்டையும் குழப்பித் திரியும் அரைவேக்காடுகள்தான் பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை இணைப்பதற்கு மறுப்புத் தெரிவிக்கின்றன.  

தன்னில் படும் தொடுகை ”கெட்டது”  கெட்ட நோக்கத்துடனானது என்பதைச் சொல்லித் தராமல், ஒரு பிள்ளை எப்படித் தெரிந்து கொள்ளும்? கெட்ட தொடுகையின் விளைவுகள் தெரியாமல் எப்படி ஒரு குழந்தை அதனை மறுக்கும்? தன்னைத் தொடும் விரல்களும், தன்னில் விழும் பார்வையும் கெட்டது - கெட்ட நோக்கத்துடனானது என்று உணரும் மறு நொடியே ”நோ” என்ற மறுப்பை உரத்தோ, உரத்துச் சொல்லாமலோ வெளிப்படுத்திவிட்டுக் கடந்துவரப் பிள்ளைகளுக்குக் கற்றுத்தருவது காலத்தின் தேவையாயிருக்கிறது. 

”நோ” என்பதை ”நோ” என்று நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல உறுதியாகச் சொல்வதுதான் பெண்ணுக்கு அழகு. மௌனமாக இருந்து ஆணே தீர்மானித்துக் கொள்ளட்டும் என்ற காவியக் கால நிலையிலிருந்து நம் காலத்தை மீட்க வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .