2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வேடிக்கை மனிதரைப் போல் வீழ்வேனென நினைத்தாயோ?

Editorial   / 2019 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்கள் தலைமைத்துவத்துக்குத் தகுதியற்றவர்கள்; நீதி செலுத்த முடியாதவர்கள் என்பது, ஆணாதிக்கத்தின் குரல். இதற்கு இவர்கள் சொல்கின்ற எளிய காரணங்கள் தான், பெண்கள் இயல்பிலேயே மென்மையானவர்கள்; உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். இந்தக் கிணற்றுத் தவளைகளின் மழைப் பாடல்களுக்கெல்லாம் அஞ்சிக் கொண்டிருந்தால், காரியம் எதுவும் நடக்காது.  

பெண்கள் மென்மையானவர்களா, உணர்ச்சிவசப்படக்கூடியவர்களா என்ற வாதங்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு தன் வழியில் கிடக்கும் தடைக்கற்கள் அனைத்தையும் ஏறி மிதித்து முன்னேற அடிப்படையான விடயங்கள் குறித்துப் பார்ப்போம்.

1. எந்தவொரு செயலைச் செய்யும்போதும்  விமர்சனங்கள் எழுவது இயல்பு அதிலும் பெண்கள் என்றால் அவை இரு மடங்கு. எனவே, உங்கள் மீதான விமர்சனங்களைக் கடந்து வரவேண்டும். உடன்பாடு இல்லாத கருத்தோ, விமர்சனமோ முன்வைக்கப்படுகையில், துணிந்து மாற்றுக் கருத்தைச் சொல்லத் தயங்கக்கூடாது. அதேநேரம், நிராகரிப்புகளையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் வேண்டும்.

2. உங்களிடம் உள்ள திறமைகளை யாருக்காகவும் எவருக்காகவும் வெட்கம் என்ற உதவாத கூரையின் கீழ் மறைக்கவோ, ஒடுக்கவோ வேண்டாம். நம் திறமைகளை முதலில் அங்கிகரிக்கும் பொறுப்பு நம்மிடம் தான் உள்ளது. வெட்கம் எனும் தேவையற்ற சுமையைத் தூர எறியுங்கள்.

3. இலக்கை அடைவதற்கு தெளிவான சிந்தனை, சோர்வில்லாதச் செயலும் மிகவும் முக்கியமானது. இவை சரியாக இருப்பதில், நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் பெரிய பங்கு உண்டு. எனவே, பழகும் நபர்களைப் பற்றி நேர்மறையாகவோ, எதிர்மறையாகவே முடிவெடுக்காதீர்கள். அவர்களின் செயல்களை ஊன்றிக் கவனித்து, தெளிவாகப் புரிந்துகொண்டுப் பழகுங்கள்.

4. உங்களின் தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி பிறரிடம் பேசும்போதும், அது எவ்வளவு கொடுமையானதாகவோ, கவலைத் தரக்கூடியதாகவோ இருந்தாலும், உண்மையை மட்டுமே பதிவு செய்யுங்கள். ஏனெனில், இந்த உண்மைதான் உங்களின் மனவலிமையையும் தைரியத்தையும் அதிகரிக்கும்.

5. உங்களின் உள்ளுணர்வுக்கு மதிப்புக் கொடுங்கள். ஏனெனில், பெரும்பாலான சமயங்களில் அவை மிகச் சரியாகவே அமையும். ஒருவேளை உங்களின் உள்ளுணர்வும் நடப்பவையும் ஒரு சேர சரியாக அமைந்தால் உங்களுக்கே ஒரு தன்னம்பிக்கை பிறக்கும். அது நாம் எடுக்கும் முடிவுகள் சரிதான் என்ற மன தைரியத்தைக் கொடுக்கும்.

6. மன வலிமையோடு வாழ்வதென்பது, பிறரிடமிருந்து தன்னைத் துண்டித்துக்கொள்வதல்ல. பலரின் மத்தியிலும் நானும் ஒரு தனி இடத்தைப் பிடித்து காட்டுவேன் என்பதுதான். எனவே, ஒரு உதவி தேவைப்படும் நேரத்தில், ஒரு நண்பனிடமோ, சகோதரனிடமோ உதவிகள் கேட்பது தவறல்ல.

7. முதலில் உங்களை நேசிக்கப் பழகுங்கள். உடலை ஆரோக்கியமாக வைத்திருங்கள். அதற்கு எதிரான பழக்கங்களை விட்டொழியுங்கள். உடல் ஆரோக்கியமாக இருப்பது நம் கனவுகளை நாம் அடையவதற்கு முக்கியமாக உதவும். உடல் வலிமை என்பது, மன வலிமை சிறக்க மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

8. நீங்கள் உங்களின் கருத்துகளை எங்கே பதிவு செய்தாலும், அதன் உண்மைத்தன்மை கேள்விக்குட்படுத்த முடியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதையும் மீறி அதில் ஏதேனும் குறை கூறினால், அந்தக் குறை நியாயமானதாக இருப்பின், ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டாதீர்.

9. தனிமையில் பயணம் செய்யும் போது, உங்களைச் சுற்றி ஆண்கள் மட்டுமே இருந்தால் பயமோ, மிரட்சியோ கொள்ள வேண்டாம். அவர் ஓர் ஆண்; எதிர்பாலினம் மட்டுமே; அவருக்கு எந்த வகையிலும் நான் குறைந்தவள் அல்ல என்ற எண்ணத்தை முதலில் மனதில் ஏற்றிக்கொள்ளுங்கள்.

10. கணவன், குழந்தைகள் என எல்லாவற்றையும் தாண்டி, உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கென மட்டுமே சில ஆசைகள் இருக்கக்கூடும். அதை நிறைவேற்றிக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. இந்த ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதில்தான் உங்களின் மன வலிமை ஒளிந்து கொண்டிருக்கிறது.

எவரும் பிறக்கும்போதே மனவலிமையோடும் தைரியத்தோடும் பிறப்பதில்லை. பிறந்து, வளர்ந்து, வாழும் வாழ்கைச் சூழல்தான் அவற்றைத் தீர்மானிக்கின்றன. இது, ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் பொருந்தும். எனவே, தன்னம்பிக்கையும் மன வலிமையையும் வளர்த்துக்கொள்வது நம்முடைய பயிற்சிகளும் முயற்சிகளும்தான் என உணருங்கள். துணிச்சலோடு செயற்பட்டால் வெற்றி உங்களளுக்கு மிக அருகில்தான்.

இந்தப் பத்துக் குணங்களோடு, “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்; எட்டு மறிவினில் ஆணுக் கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி” என்று வீழாதிருங்கள்.

-மித்ரா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X