2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஒன்லைன் வகுப்பு எனும் வன்முறை

Editorial   / 2020 ஜூன் 10 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பள்ளிக்கூடம் எனும் ஒரு தலம்/ தளம், மாணவர்களிடத்து உடல், மன, அறிவு ரீதியாக ஏற்படுத்தக் கூடிய மாற்றங்கள் மற்றும் வளர்ச்சிகள் குறித்து நாம் அனைவரும் அறிவோம். ஸ்மார்ட் ஃபோன்களின் வரவுக்குப் பின்பு, அதிவேக இணையத்தின் வழியாக மனிதர்கள் இந்த உலகுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டாலும், மனிதனுக்கும் சக மனிதர்களுக்கும் இடையிலான தொடர்புகள் அருகி வருகின்றன. இதன் காரணமாக, உடல் மற்றும் மன ரீதியிலான நோய்களும் பெருகி வருகின்றன.

இந்நிலையில், தற்போதைய உலகளாவிய நோய்த்தொற்றுப் பிரச்சினை காரணமாக, பள்ளிகள் முன்னெடுக்கும் நிகழ்நிலை வகுப்புகள் எனும் இணையவழி வகுப்புகள், கண்டிப்பாக பள்ளி வகுப்புகளுக்கு மாற்றாக அமையவே முடியாது.

லொக்டவுன் சமயத்தில் நடத்தப்படும் இணைய வகுப்புகள், மாணவர்களுக்கு மட்டுமல்ல பெற்றோர்களுக்கும் பொருளாதார, உடல் மன ரீதியிலான பெருஞ்சுமை.

பெற்றோருக்கு:

1. முதலில் பிள்ளைகள் தமது இணைய வகுப்பில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளைப் பெற்றோர் செய்ய வேண்டும். பணிக்குச் செல்லும் பெற்றோர், தங்களது ஸ்மார்ட் போன்களை எடுத்துச்செல்ல வேண்டிய பல்வேறு தேவைகள் இருக்கின்றன. ஆகவே, மற்றொரு ஸ்மார்ட்ஃபோன், லெப்டாப் அல்லது டெஸ்க்டொப்பை ஏற்பாடு செய்யவேண்டும்.

2. ஒரு வீட்டில் இரண்டு அல்லது மூன்று பிள்ளைகள் படிக்கிறார்களென்றால், மூவருக்கும் உபகரணங்கள் வாங்க வேண்டும். எத்தனைப் பெற்றோருக்கு அது சாத்தியப்படும்?

3. அடுத்து, அந்த டிஜிட்டல் சாதனங்களுக்கு இணைய வசதி ஏற்படுத்தித் தரவேண்டும். அதற்காக, ஏற்கெனவே பிராட்பேண்ட் வசதி உள்ளவர்கள் தங்களது இணையச் சேவையின் பிளானை, அதிக வேகத்துக்கு உயர்த்த, அதிக தொகையிலான திட்டத்துக்கு மாறவேண்டும். மொபைலில் இன்டர்நெட் பயன்படுத்துவோர், தங்கள் டேட்டா பெக்கேஜை அதிகமாக்க வேண்டும். இது கூடுதல்

பொருளாதாரச் சுமை

4. ஐந்தாம் வகுப்புக்குக் கீழ் உள்ள பிள்ளைகளுக்கு, கண்டிப்பாக பெற்றோரின் உதவி தேவைப்படும். அவர்கள் சரியாக வகுப்பில் தொடர்ந்து அமரவும் தொடர்பைச் சரியாக ஏற்படுத்தித் தரவும், ஆசிரியர்கள் அனுப்பும் பாடங்களைத் திறந்து பார்க்கவும், அதை முடித்து அனுப்பவும் பெற்றோரின் உதவி தேவை. இருவருமே பணிக்குச் செல்லும் பெற்றோர்களால் அதைச் செய்ய முடியாது.

அவ்வாறான சூழலில், பல பள்ளிகள் அவர்களுக்கு ஒரு துணையை ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்துகிறது.

சில பள்ளிகள், பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை யூடியூப்பில் ஏற்றிவிடுகிறார்கள். உடனிருக்க முடியாத அல்லது வீட்டின் மற்றோரு சிறிய வகுப்புப் பிள்ளைகளுக்கு ஸ்மார்ட்ஃபோன் வாங்க முடியாத பெற்றோர், மாலை வேளையில் வீடு திரும்பியதும், அவர்களின் நேரலை வகுப்புகளைக் கிளவுடில் இருந்தும் யூடியூபிலிருந்தும் அவற்றை மாணவர்களுக்குப் போட்டுக் காட்டி, நம்மை விளக்கச் சொல்கிறார்கள்.

மாணவர்களுக்கு:

1. தொடர்ந்து பல மணிநேரம் மின் திரைகளைப் பார்ப்பதும் அதன்முன் அமர்ந்திருப்பதும், உடல் சோர்வு, கண் பிரச்சினைகள், முதுகு வலி, கழுத்து வலி போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.

2. பிள்ளைகளிடையே இனி இவ்வழக்கம் பல நடத்தை மாற்றங்கள் (behavioral changes) மற்றும் அணுகுமுறை மாற்றங்களை (attitude changes) ஏற்படுத்தும்.

3. பணிக்குச் செல்லும் பெற்றோர், டீன்-ஏஜ் பிள்ளைகளிடம் இணையச் சேவையுடன்கூடிய ஸ்மார்ட் ஃபோன்களைக் கொடுத்துவிட்டுச் செல்வது, அத்தனை உவப்பான செயற்பாடாக இருக்காது. அவர்கள், பிரவுசரில் எந்தத் தளத்தை திறந்து பார்க்கிறார்கள், எந்தச் செயலியைத் தரவிறக்கம் செய்து விளையாடுகிறார்கள் என்பதைக் கண்காணிப்பதும் கடினமாகிறது. மேலும், இலவசச் செயலிகளிடையிலும் தளங்களினிடையிலும் எட்டிப் பார்க்கும் பெரியவர்களுக்கான விளம்பரங்களும், ரம்மி விளையாடுவதற்கான அழைப்பும் அத்தனை பாதுகாப்பானதல்ல.

4. பள்ளிக்குச் சென்று சக மாணவர்களுடனும் நண்பர்களுடனும் உரையாடி, விளையாடி மகிழ்ந்துச் செலவிடும் நேரத்தை, தற்போது முழுவதுமாக இழக்கிறார்கள். அதன் காரணமான மன அழுத்தங்களும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

5. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், மற்ற தனியார்ப் பள்ளியில் படிக்கும் மாணவர்களைக் கண்டு ஏற்கெனவே ஏக்கத்துடன் இருந்துவரும் நிலையில், இனி பின்தங்கி நிற்கும் நிலையும் ஏற்படும். இதன் காரணமாக, அவர்களுக்குத் தான் கூடுதல் மன அழுத்தம்.

ஏற்கெனவே நம் நாட்டில், மத, சாதி வேற்றுமைகள் காரணமாகப் பொருளாதாரத்திலும் சமூகத்திலும் பின்தங்கி நிற்கும் மக்கள் ஓரளவு முன்னேறுவதற்கான ஒரே வழியாக இருந்து வருவது கல்வி மட்டுமே. அதிலும், பல்வேறு பிரிவினைகள். இதுவே மிகப்பெரிய அநீதி.

இன்று, வசதியற்ற அரசுப்பள்ளி மாணவர்கள் எவ்விதக் கல்வியும் பெறாமல் வீடுகளில் முடங்கியும் தங்கள் பெற்றோருடன் சென்று நிலத்திலும் களத்திலும் கூலி வேலைகளில் உதவியும்வரும் நிலையில், வசதிபடைத்த தனியார் பள்ளி மாணவர்கள் மட்டும், தங்களது இவ்வாண்டுப் பாடங்களை இணையவழி படித்துத் தேர்வுகளுக்கு தயார்படுத்திக் கொள்வது எவ்வகையில் நியாயம்?
இணைய வகுப்புகள் எனும் வன்முறை, மாணவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையாகவே அமைந்துள்ளது. இதன் பின்விளைவுகள் அறியாது ஆதரிக்கும் பெற்றோர்கள், இது குறித்து ஆராய்ந்து உணரவேண்டும். என் பிள்ளைகளின் கல்வி மட்டுமே முக்கியம், அதன் பின்விளைவுகள் குறித்துக் கவலையில்லை, வசதியற்ற பிள்ளைகள் படிக்காமல் போனால் அது என் குற்றமில்லை, மத்தியதரப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க இயலாவிட்டால், அது என் பிரச்சினை இல்லை என்று எண்ணும் பெற்றோர்கள், கண்டிப்பாக அதற்குரிய விலை கொடுக்க வேண்டி வரும்.

-அனிதா என். ஜெயராம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .