2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

திட்டமிடல், அனுபவங்களால் புட்டினை வென்ற பைடன்

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 19 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

- முருகவேல் சண்முகன்

சர்வதேச உலகில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும், ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கும் இடையிலான சந்திப்பானது சுவிற்ஸர்லாந்தில் கடந்த புதன்கிழமை அரங்கேறியிருந்தது.

கடந்த 1999ஆம் ஆண்டு முதலில் ஜனாதிபதியான புட்டின் சந்திக்கும் ஐந்தாவது ஐ. அமெரிக்க ஜனாதிபதி பைடன் ஆவார். ஐ. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகள் பில் கிளின்டன், ஜோர்ஜ் டபிள்யூ புஷ், பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரை ஜனாதிபதி புட்டின் சந்தித்துள்ளார். இதில், முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவை 2009ஆம் ஆண்டு சந்திக்கும்போது பிரதமராகவே புட்டின் இருந்தபோதும், அப்போதும் ரஷ்யாவின் மெய்நிகரான தலைவராக புட்டினே கருதப்பட்டிருந்தார்.

இந்நிலையில், தான் இதுவரை சந்தித்த ஐ. அமெரிக்க ஜனாதிபதிகளில் பழுத்த அனுபமுடையவரை எதிர்கொண்ட ஜனாதிபதி புட்டின், முன்னையவர்களை சந்திக்கும்போது இலகு நிலையில் காட்டிக் கொண்ட நிலையில், இம்முறை தொழில் முறையில் ஜனாதிபதி என்ற நிலையை ஆரம்பத்திலேயே வெளிக்காட்ட வேண்டியிருந்தது.

பதவிக் காலத்தின் ஆரம்பத்திலேயே ரஷ்ய ஜனாதிபதியைச் சந்திக்கிறார் என ஐ. அமெரிக்காவில் ஜனாதிபதி பைடனுக்கு விமர்சனங்கள் இருந்திருந்தன. இந்நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு ஜனாதிபதி புட்டினை, முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் சந்தித்தபோது கிடைத்த அனுபவங்களே இம்முறை சந்திப்பை வெற்றிகரமாக மாற்றுவதற்கான திட்டமிடலுக்கான ஆரம்பப் புள்ளியாய் இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பின்லாந்தில் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி புட்டினும், அப்போது ஜனாதிபதியாகவிருந்த ட்ரம்ப்பும் ஒன்றாக சந்திப்பின் பின்னர் செய்தியாளர் மாநாட்டை எதிர்கொண்டிருந்தனர்.

அப்போது, கடந்த 2016ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தலையீட்டுக்காக ஜனாதிபதி புட்டினை முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் சாடியிருக்கவில்லை என்பது பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், இம்முறை சந்திப்பானது மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டு திட்டமிடப்பட்டிருந்தது. இச்சந்திப்பு அழைப்பானது ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் விடுக்கப்பட்டதானது, ஜனாதிபதி புட்டினுக்கு ஒரு அங்கிகாரத்தை வழங்கியிருந்தபோதும் ஏனைய விடயங்கள் ஜனாதிபதி பைடனுக்கு சாதகமானதாகவே இடம்பெற்றிருந்தது.

வழமையாக தான் சந்திப்போரை ஜனாதிபதி புட்டின் காக்க வைத்த சம்பவங்கள் கடந்த காலங்களில் இடம்பெற்ற நிலையில், இம்முறை சந்திப்புக்காக முதலாவதாக ஜனாதிபதி புட்டினே சென்றடைந்திருந்தார்.

ஜனாதிபதி புட்டினை சுவிற்ஸர்லாந்து ஜனாதிபதி வரவேற்றதையடுத்த 15 நிமிடங்களிலேயே ஜனாதிபதி பைடனின் வாகனத் தொடரணி சந்திப்பு இடத்துக்கு வந்திருந்தது.

இதேவேளை, ஐ. அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான உறவுகள், எப்போதுமில்லாதளவுக்கு மோசமடைந்துள்ள நிலையில் இச்சந்திப்பிலிருந்து பாரிய திருப்பங்கள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தாது என்ற உருவகத்தில் இருந்தே திட்டமிடலாளர்கள் பாரிய வெற்றியைப் பெற்றிருந்தார்கள் எனக் கூற முடியும்.

சந்திப்பின்போது இணையவழித் தாக்குதல்கள், ஆயுதக் கட்டுப்பாடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவும், ஐ. அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டனுக்கு ரஷ்யத் தூதுவரை அடுத்த வாரம் அனுப்பவும், ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவுக்கு ஐ. அமெரிக்கத் தூதுவரை அடுத்த வாரம் அனுப்பவுமே பிரதானமாக இணங்கப்பட்டிருந்தது.

இதில், தனது எண்ணெய் விநியோகக் கட்டமைப்புகள் மீது கடந்த மாதம் இணையவழித் தாக்குதலை ஐ. அமெரிக்கா எதிர்கொண்டு விநியோகங்களில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், ரஷ்ய எண்ணெய் விநியோகக் கட்டமைப்பு மீது இணையவழித் தாக்குதல் நடந்தால் எப்பிடியிருக்கும் என ஜனாதிபதி புட்டினை ஜனாதிபதி பைடன் அச்சுறுத்தியிருந்தார்.

இதை அச்சுறுத்தல் என எடுக்க வேண்டாம் என ஜனாதிபதி பைடன் தெரிவித்தபோதும், நீ அடித்தால் நானும் திருப்பி அடிப்பேன் என்ற வகையிலேயே இதை பாலர் வகுப்பு பிள்ளையும் எடுத்துக் கொள்ளும்.

எவ்வாறெனினும், ரஷ்யா மீதான இணையவழித் தாக்குதலானது நடைமுறையில் பாரிய எதிர்வினையை ஆற்றும் என்ற அச்சத்தில் இதுவரையில் அத்தெரிவுக்கு மேற்குலகம் சென்றதாக பதிவில்லை.

இதேவேளை, உணவு, எண்ணெய், பாதுகாப்பு கட்டமைப்புகள் உள்ளடங்கலாக 16 கட்டமைப்புகள் என்பன இணையவழித் தாக்குதலுக்கு அப்பாற்பட்டவை என பட்டியல் ஒன்றை ஜனாதிபதி புட்டினிடம் ஜனாதிபதி பைடன் கையளித்ததாகக் கூறப்படுகிறது.

இதே பாணியில் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்குடனான கடந்த 2015ஆம் ஆண்டு சந்திப்பு ஒன்றின்போது பட்டியல் ஒன்றை முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவும் கையளித்திருந்தபோதும் இவை எவ்வளவுக்கு நடைமுறைக்கு சாத்தியம் என்பது கேள்விக்குறியே ஆகும்.

இந்நிலையில், ஜனாதிபதி பைடனின் நீண்ட கால வெளிநாட்டுக் கொள்கையான நேரடியாக நபர்களைச் சந்தித்துக் கலந்துரையாடுவது பிரச்சினைகளுக்குத் தீர்வை அளிக்கும் என்பதை மீண்டும் ஒருமுறை ஜனாதிபதி புட்டின் உடனான சந்திப்பின் பின்னரும் ஜனாதிபதி பைடன் சிலாகித்திருந்தார். ஆக, ஜனாதிபதி பைடனின் தனிப்பட்ட கருதுகோளின் அடிப்படையிலும் அவருக்கு வெற்றியாகவே காணப்படுகின்றது.

இதேவேளை, சந்திப்பின் பின்னர் முதலில் ஜனாதிபதி புட்டினே செய்தியாளர்களைச் சந்தித்ததுடன், அதன் பின்னரே ஜனாதிபதி பைடன் செய்தியாளர்களைச் சந்தித்திருந்தார். ஆகவே, முதலில் ஜனாதிபதி புட்டின் உரைத்த கருத்துகளுக்கு மறுத்துரைக்க ஜனாதிபதி பைடனுக்கு சந்தர்ப்பம் காணப்பட்டிருந்தது.

இதுதவிர, ஜனாதிபதி புட்டினின் சந்திப்பில் ரஷ்யா அல்லாத வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டிருந்தபோதும், ஜனாதிபதி பைடனின் சந்திப்பில் ரஷ்ய ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ஒபாமா ரஷ்யாவை பிராந்திய வல்லரசு என கிறீமியா பிரச்சினையின்போது வர்ணித்திருந்த நிலையில், தற்போது உலக வல்லரசாகவே ரஷ்யாவை ஜனாதிபதி பைடன் குறிப்பிட்டிருந்தமையானது உள்நாட்டில் ஜனாதிபதி புட்டின் பிரபலத்தன்மை அதிகரிப்புக்கு வழி வகுக்கலாம்.

இதேவேளை, ஜனாதிபதி பைடனை கட்டமைப்பு ரீதியானவர் என்றும், ஒரே மொழியில் பேசியதாகவும் ஜனாதிபதி புட்டின் குறிப்பிட்டிருந்தபோதும், இரண்டு நாடுகளின் நலன்கள் குறித்த சந்திப்பே இது என அவர் தெரிவித்ததே வெளியிடை ஆகும்.

இதையே “இது நம்பிக்கை பற்றியது அல்ல, இது சுய விருப்பம் மற்றும் சுய விருப்பத்தை ஆராய்தல்” என தனது மொழியில் ஜனாதிபதி பைடன் குறிப்பிட்டிருந்தார்.

ஆக, சந்திப்பானது இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்தா விட்டாலும், அண்மைய எதிர்காலத்தில் மேலும் மோசமடையாமல் தடுக்கலாம் என நம்பலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .