2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சீன முதலீடுகளுக்கு நேபாளத்தில் எதிர்ப்பு

Editorial   / 2021 நவம்பர் 15 , பி.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெய்ஜிங்: 

நேபாளத்தில் சீனா மேற்கொள்ளும் முதலீடுகள் உள்ளூர் மக்களின் எதிர்ப்பை சந்தித்துள்ளதோடு, உட்கட்டமைப்பு  விருத்திகள் தொடர்பான பெய்ஜிங்கின் வாக்குறுதிகள் உள்ளூர் நலன்களைப் பாதிக்கும் என்றும், அவை சீனாவுக்கு மட்டுமே பயனளிக்கக் கூடியவை என்றும் ஒரு செய்தி அறிக்கை கூறுகிறது.

தி சிங்கப்பூர் போஸ்ட் பத்திரிகை தனது செய்திகளில், நேபாளத்தின் டார்ச்சுலா மாவட்டத்தில் சீனா நிர்மாணிக்கும்  30 மெகாவாட் திறன் கொண்ட சமேலியா நீர்மின்சாரத் திட்டம் எதிர் கொள்ளும் சவால்கள், திட்டத்தை நிறைவேற்றுவதில் ஏற்படும் தாமதம் போன்றவற்றால் அந்நாடு பெரும் நிதி நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

2010 இல் மூன்று வருட இலக்கைக் கொண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம் நிறைவடைய 10 ஆண்டுகள் சென்றன. அத்தோடு நேபாள ரூ.6 மில்லியனாக மதிப்பிடப்பட்ட சமேலியா திட்டம் நிறைவடைந்த போது ரூ.16 மில்லியனாக உயர்ந்தது. இதனால் இந்த நீர் மின்சார திட்டத்தின் கட்டுமான ஒப்பந்ததாரர்களான சீனா கெசௌபா குழுமம்    (CGGC) நேபாளத்தில் பல சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது" என்று சிங்கப்பூர் போஸ்ட் மேலும் தெரிவித்துள்ளது.

அதேவேளை தனியார் துறை நிறுவனங்கள் ஒரு மெகாவாட் மின்னுற்பத்திக்காக நேபாள ரூ. 180 மில்லியன் செலவில் நீர் மின்சார திட்டங்களை உருவாக்கி வருகின்றன. ஆனால் சீன நிறுவனமான CGGC மூன்று மடங்கு அதிகமாக, அதாவது சமேலியா திட்டத்துக்கு ஒரு மெகாவாட் மின்னுற்பத்திக்காக நேபாள ரூ. 540 மில்லியன் கோரியுள்ளது என்று அந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது.

ஏற்கனவே 2017 ஆம் ஆண்டில் இதுபோன்ற புத் கந்தகி என்ற ஒரு நீர் மின்னுற்பத்தி திட்டம் 44.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் சீனாவின் கெசௌபா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் இரத்து செய்யப்பட்டது. ஆனால் 2018 இல் KP ஒலி அரசாங்கம் அதை மீண்டும் மேற்படி சீன ஒப்பந்தக்காரர்களிடமே ஒப்படைத்தது. இந்த திட்டத்தால் கிட்டத்தட்ட 40,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் சீனா செயல்படுத்தும் திட்டங்கள், கடன் சுமைகளில் சிக்கியுள்ள குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டும் நாடுகள் மீது தனது பொருளாதாரப் பிடியை இறுக்குவதற்கான சீனாவின் முயற்சிகளுக்கு ஒரு அப்பட்டமான உதாரணம் என்றும் சீனாவுக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில் இருப்பதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .