-குணசேகரன் சுரேன்
தேசிய மட்ட ஜோன் டார்பட் மெய்வல்லுநர் போட்டியில் இரண்டு தங்கம் நான்கு வெள்ளி, நான்கு வெண்கலம் உட்பட மொத்தமாக பத்து பதக்கங்களை யாழ்ப்பாண மாவட்டம் பெற்றுக்கொண்டுள்ளது.
இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஜோன் டார்பட் என அழைக்கப்படும் 83ஆவது தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டிகள் கொழும்பு சுகதாஸ விளையாட்டரங்கில் கடந்த 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் நேற்று 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரையும் நடைபெற்றது.

கடந்த காலங்களில் இருந்து யாழ். மாவட்டம் சார்பாக அளவெட்டி அருணோதயா மற்றும் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி ஆகிய அணிகள் தேசிய மட்ட ரீதியில் குறிப்பாக கோலூன்றிப் பாய்தலில் பிரகாசித்த வண்ணம் இருக்கின்றன.
தேசிய மட்டப் போட்டிகளில் யாழ். மாவட்டத்திற்கு தங்கப்பதக்கம், வெள்ளி என்பன கோலூன்றிப் பாய்தலில் உறுதியாக கிடைக்கும் என்ற நிலையினை இவ்விரு பாடசாலைகளும் ஏற்படுத்தி வருகின்றன.
இம்முறை நடைபெற்ற போட்டிகளில் இரண்டு தங்கம் நான்கு வெள்ளி, நான்கு வெண்கலம் உட்பட மொத்தமாக பத்து பதக்கங்களை யாழ்ப்பாண மாவட்டம் பெற்றுக்கொண்டுள்ளது. பெறப்பட்ட இரண்டு தங்க பதக்கங்களும் கோலூன்றிப் பாய்தலில் அருணோதயக் கல்லூரி வீரர்கள் பெற்றுக்கொண்டதாகும்.
அளவெட்டி அருணோதயக் கல்லூரி அணி இரண்டு தங்கப்பதக்கம் ஒரு வெள்ளிப்பதக்கம், மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கம் உட்பட ஜந்து பதக்கங்களையும், தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி இரண்டு வெள்ளி, இரண்டு வெண்கலப் பதக்கங்கள் அடங்கலாக நான்கு பதக்கங்களையும், யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணி ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டன.