-கு.சுரேன்
இலங்கை துடுப்பாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட துடுப்பாட்டக் கழகங்களின் பிரிவு – 3 அணிகளுக்கிடையில் 50 பந்துபரிமாற்றங்கள் மட்டுப்படுத்தப்பட்ட துடுப்பாட்டப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
ஸ்கந்தவரோதயக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் கிறாஸ்கோப்பர் அணியினை எதிர்த்து மானிப்பாய் பரிஷ் அணி மோதியது.
நாணயச் சுழற்சியில் வென்ற மானிப்பாய் பரிஷ் அணி 38 பந்துபரிமாற்றங்களை எதிர்கொண்டு 195 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது. அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில் வினோத் 51 ஓட்டங்களையும், ஹரிகரன் 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் கிறாஸ்கோப்பர் அணி சார்பாக, ஜனந்தன் 4 இலக்குகளையும், அஜித் 3 இலக்குகளையும் கைப்பற்றினர்.
196 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய கிறாஸ்கோப்பர் அணி, துடுப்பாட்டத்தில் சொதப்பி அடுத்தடுத்து இலக்குகளை இழந்து வந்தது. இறுதியில் 35.5 பந்துபரிமாற்றங்களில் 127 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது.
துடுப்பாட்டத்தில் கஜன் 40 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் மானிப்பாய் பரிஷ் அணி சார்பாக வினோத் 3 இலக்குகளையும், ஹரிகரன், கிசோ, துவாரகன் தலா 2 இலக்குகளையும் கைப்பற்றினர்.