2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

நெடுந்தீவில் பாரம்பரிய விளையாட்டில் வெற்றி பெற்றோருக்கு பரிசில் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 ஜூலை 23 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


நெடுந்தீவு மக்களால் நடாத்தப்பட்ட பாரம்பரிய விளையாட்டுக்களின் இறுதிநாள் நிகழ்வில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா பரிசில்களை வழங்கி கௌரவித்தார்.

நெடுந்தீவு மகாவித்தியாலய மைதானத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்   ஆலோசனைக்கும் நெறிப்படுத்தலுக்கும் அமைய நேற்று திங்கட்கிழமை மற்றும் இன்று செவ்வாய்க்கிழமை ஆகிய தினங்களில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்பட்டன.

இதில் பாரம்பரிய விளையாட்டுக்களான கீறிஸ் மரம் ஏறுதல், கயிறு இழுத்தல், குதிரை பந்தயம், யானைக்கு கண்வைத்தல், கபடி ஆகிய போட்டிகளின் இறுதிப் போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

போட்டிகளில் பங்குபற்றிய  வெற்றிபெற்ற வீர, வீராங்கனைகள் மற்றும் கழகங்களைச் சேர்ந்தோருக்கு  அமைச்சர் அவர்கள்;, தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

இதன்போது, மக்களின் ஒருமைப்பாட்டையும், நல்லுறவையும் வலுப்படுத்தும் நோக்கில் இப்பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

இதில் இறுதிப் போட்டிகளுக்கு தெரிவாகி வெற்றிபெற்ற கழகங்கள் மற்றும் வீர, வீராங்கனைகளுக்கு அமைச்சர் அவர்கள் வெற்றிக் கிண்ணங்களையும், பரிசில்களையும் வழங்கி கௌரவித்த அதேவேளை, ஏனைய போட்டிகளில் வெற்றிபெற்ற கழகங்கள் மற்றும் வீர வீராங்கனைகளுக்கு ஈ.பி.டி.பி நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்), நெடுந்தீவு பிரதேச செயலர் சிறி, ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன், நெடுந்தீவு பிரதேசசபை தவிசாளர் டானியல் றெக்சியன் உள்ளிட்டோர் வழங்கி வைத்தனர்.

அத்துடன் இந்நிகழ்வில்,  அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தயானந்தா, நெடுந்தீவு வைத்திய அதிகாரி மற்றும் இராணுவ, பொலிஸ், கடற்படை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X