2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘இருப்பதையும் பறிக்கும் செய​ல்கள் முன்னெடுப்பு’

Ilango Bharathy   / 2021 ஜூன் 18 , மு.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வது நிறுத்தப்பட்டுள்ளமை ஒருபுறமிருக்க, இருப்பதையும் பறிக்கும் செயன்முறையை இந்த அரசாங்கம் மேற்கொள்கிறது எனக் குற்றஞ்சாட்டிய தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர் மனோ கணேசன்
எம்.பி., இது இந்திய அரசுடனான உறவு, அடுத்த செப்டம்பரில் வரும் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் வாய்மொழி அறிக்கை, ஜி.எஸ்.பி பிளஸ் விவகாரம் ஆகியவற்றில் பெரும்பாதிப்பை ஏற்படுத்துமென எதிர்வு கூறியுள்ளார்.

இந்த விவகாரத்துக்கு ​எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறியிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவைப் பாராட்டிய மனே கணேசன், கவலையைத் தெரிவித்து
கோரிக்கையொன்றையும் அவருக்கு முன்வைத்துள்ளார்.

மாகாண சபைகளுக்கு உரித்தான வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கம் சுவீகரிக்கும் தீர்மானத்தை அமைச்சரவை மேற்கொண்டமை 13ஆம் திருத்தத்தின்படி அரசியலமைப்புக்கு முரணானது என்பதை அமைச்சரவையில் சுட்டிக்காட்டினேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளமை பாராட்டுக்குரியது.

ஆனால், அதற்கான காரணமாக தமிழ் மக்கள் தனது கட்சிக்கு வாக்களித்து, தனக்கு அரசியல் பலத்தை தராமையே எனவும் அவர் மேலும் கூறியுள்ளமை கவலைக்குரியது. உண்மையில் ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் “அதிகார பரவலாக்கலுக்கு” எதிரான பெருந்தேசியவாத நிலைப்பாடே இதற்கு காரணம்.

எனவே, அமைச்சர் இதுபற்றி தனது அரசாங்கத்துக்குள்ளே விடாமல் போராட வேண்டும். அரசாங்கத்துக்குள்ளிருக்கும் ஏனைய தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள், இது தொடர்பில் அவருக்கு ஆதரவளிக்க வேண்டுமெனக் கோரியுள்ளார்.

“அமைச்சரவைத் தீர்மானத்தின்படி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளை, மத்திய அரசு சுவீகரிப்பது தொடர்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தின்படி, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல்  மாகாண வைத்தியசாலைகளும் பறிக்கப்படும்” என்றார். “எனவே, வடக்கில், கிழக்கில், மலையகத்தில் இருந்து தெரிவுசெய்யப்பட்டு, அரசாங்கத்துக்குள்ளே இருப்பவர்கள், தமிழ், முஸ்லிம் கட்சிகள் மற்றும் சமகாலத்தில் எதிரணியில் இருந்து அரசாங்கத்தின் பக்கம் சென்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எம்.பிக்களும் தமது எதிர்ப்புகளை காட்ட
வேண்டும்” எனக் கோரியுள்ளார்.   

13ஆம் திருத்தத்தை முழுமையாக அமுல் செயயும்படியே, இந்திய அரசாங்கம், ஐ.நா மனித உரிமை பேரவை, ஐரோப்பிய பாராளுமன்றம் என்பவை கோட்டாபய ராஜபக்‌ஷ அரசாங்கத்தை திரும்பத் திரும்பக் கூறுகின்றன என நினைவூட்டிய மனோ கணேசன், 13ஆம் திருத்தத்தை முழுக்க அமுல் செய்வதை நிறுத்தியது ஒருபுறமிருக்க, இப்போது இருப்பதையும் பறிக்கும் செயன்முறையை இந்த அரசாங்கம் மேற்கொள்கிறது எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 “இந்நாட்டில், அதிகாரப் பரவலுக்காக தமிழ் மக்கள் சிந்திய இரத்தம், கொடுத்த விலை என்பவை சில அமைச்சரவை தீர்மானங்களால் சுலபமாக பறி போகக் கூடாது. இந்த
உண்மை, அரசாங்கத்தில் இருக்கும் தமிழ், முஸ்லிம் முழு அமைச்சர்கள், அரை அமைச்சர்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள், எம்.பிக்கள் ஆகியோருக்குத் தெரிய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .