2025 நவம்பர் 02, ஞாயிற்றுக்கிழமை

துரதிர்ஷ்டமான மூன்றாவது குடிமகன்

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 30 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

முருகானந்தன் தவம் 

இலங்கையின் 10ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராகவிருக்கும் ஜே .வி.பி.-தேசியமக்கள் சக்தி அரசை சேர்ந்த ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக “பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராகப் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எந்தக் காரணமும் இன்றி சபாநாயகர் நிராகரித்தார் .

இதன் மூலம் அவர் பாராளுமன்றத்தை வழிதவறச் செய்தார். இதனால், சபாநாயகர் மீதான நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது.இவ்வாறான சபாநாயகரின் பக்கச்சார்பான செயற்பாடுகள் தொடர்பாகவும் பல விடயங்கள் இருப்பதன் காரணமாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் சபாநாயகர் மீது நம்பிக்கையிழந்துள்ளனர்’’ என்று தெரிவித்து அவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதற்குப் பிரதான எதிர்க்கட்சியான சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்து வருகின்றது.

பாராளுமன்றத்தில் ஜே.வி.பி. அரசுக்கு 159 எம்.பிக்கள் இருக்கின்ற நிலையில், சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்தால் அது மிக இலகுவாக தோற்கடிக்கப்படும் என்பது பிரதான எதிர்க்கட்சிக்கு நன்கு தெரிந்திருந்தாலும் சபாநாயகர் நம்பிக்கைக்குரியவர் அல்ல, அவர் பக்கச்சார்பாக செயற்படும் ஒருவர்.எதிர்க்கட்சிகளுக்கு அநீதி செய்யும் ஒருவர், அரச தரப்புக்காக எதிர்க்கட்சிகளின் சிறப்புரிமைகளை மறுத்துச் செயற்படுவர்,

பாராளுமன்றத்தைத் தவறாக வழிநடத்துபவர் என்பதனை வெளிப்படுத்தும் ஒரு முயற்சியாகவே இந்த நமபிக்கையில்லாப் பிரேரணையை விரைவில் கையளிக்கவுள்ளனர். இந்த நமபிக்கையில்லாப்  பிரேரணைக்கு ஏனைய எதிர்க்கட்சிகளும் தமது பூரண ஆதரவைத் தெரிவித்துள்ளன.

இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாக 2024இல் சபாநாயகராகவிருந்த மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராகவே நம்பிக்கையில்லா பிரேரணை  கொண்டுவரப்பட்டது.

2024 ஜனவரி மாதம் சர்ச்சைக்குரிய ஒன்லைன் பாதுகாப்பு சட்டமூலம்  தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டமூலம்  கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் என எதிர்க்கட்சிகளும், சர்வதேச உரிமைகள் அமைப்புகள் குற்றம் சாட்டின. மேலும் இந்த சட்டம் அரசியலமைப்புக்கு முரணானது எனத்  தெரிவித்த உயர்நீதிமன்றம் அதில் திருத்தங்களைக் கொண்டுவரவும் பரிந்துரைத்தது.

ஆனால் எந்தவித திருத்தங்களும் செய்யப்படாமல் ஜனவரி 24ஆம் திகதி பாராளுமன்றத்தில்  அந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனே பாரபட்சமாக நடந்து கொண்டதாகக் குற்றஞ் சாட்டி அவருக்கு எதிராக   எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வந்தனர்.

பிரதான எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, இலங்கை சுதந்திரக் கட்சி, இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு  வரப்பட்டது. 

 இது 2024 19, 20, 21ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுக்கப்பட்டு  21ஆம் திகதி வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது   நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக 117 வாக்குகளும், ஆதரவாக 75  வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில்,  42 மேலதிக வாக்குகளால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.

இதன்பின்னர் தற்போதைய 10ஆவது பாராளுமன்றத்தில் ஜே.வி.பி.-தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் சபாநாயகராக நியமிக்கப்பட்ட  அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வர எதிர்க்கட்சிகள் தீர்மானித்தன. 

சபாநாயகரான அசோக சபுமல் ரன்வலவின் போலி கலாநிதி பட்டம் மற்றும் பல்வேறு போலி பட்டங்களைக்  காட்டி மக்களை ஏமாற்றி விட்டதாகவும் பாராளுமன்றத்துக்கு நாட்டுக்கும் பொய்யான தகவல்களை வழங்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டியே இந்த நம்பிக்கையில்லாப்  பிரேரணையை எதிர்க்கட்சிகள் கொண்டுவரத் தீர்மானித்து அதற்கான நடவடிக்கையில் இறங்கிய நிலையில், சபாநாயகரான அசோக சபுமல் ரன்வல சபாநாயகர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தார்   2020 ஒகஸ்ட் 20ஆம் திகதி சபாநாயகராகப் பதவியேற்ற இவர்   2024 செப்டெம்பர் 24 வரையான ஒரு மாத காலம் மட்டுமே சபாநாயகராகப் பதவி வகித்தார்.

இந்நிலையிலேயே தற்போது ஜே.வி.பி.-தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் 2ஆவது சபாநாயகராகவிருக்கும் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர  எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவும் சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும் சர்வாதிகாரத்தனமாகவும் எதிர்க்கட்சியினரின் சிறப்புரிமைகளை மறுத்தும் பக்கசார்பாகவும் செயற்பட்டு வருவதாக கடும் குற்றச்சாட்டுக்கள் எதிர்க்கட்சிகளினால் மட்டுமன்றி பல்வேறு தரப்புக்களினாலும் முன்வைக்கப்பட்டு வரும் நிலையிலேயே சபாநாயகருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சிகள் கொண்டு வரவுள்ளன.

இலங்கையின் முதலாவது பாராளுமன்றம் 1978-1988 காலப்பகுதியை கொண்டிருந்த நிலையில்,  இந்த முதலாவது பாராளுமன்றத்தின் சபாநாயகராகக்  கலாநிதி ஆனந்த திஸ்ஸ த அல்விஸ்  07 செப்டெம்பர் 1978 முதல்  13 செப்டெம்பர் 1978 என்ற குறுகிய நாட்கள் பதவி வகித்த நிலையில் இராஜினாமா செய்தார். 

ஆனந்த திஸ்ஸ த அல்விஸின்   இராஜினாமாவையடுத்து,  பாக்கீர் மாக்கார்  21 செப்டெம்பர் 1978இல்  சபாநாயகராகத் தெரிவு  30 ஒகஸ்ட் 1983  வரை பதவி  வகித்தார். இந்நிலையில்,  பாக்கீர் மாக்காரும்  இராஜினாமா செய்ததையடுத்து, ஈ.எல்.சேனநாயக்க 06 செப்டெம்பர் சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டு 
20 டிசெம்பர் 1988 வரை சபாநாயகராகப் பதவி வகித்தார்.

முதலாவது பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தில் 3 சபாநாயகர் பதவி வகித்தமை ஒரு வரலாற்றுப் பதிவாகவே இருக்கின்றது.1989 - 1994 வரையான 2ஆவது  பாராளுமன்றத்தின் சபாநாயகராக  எம். எச்.மொஹமட் 09 மார்ச் 1989 முதல்  24 ஜூன் 1994 வரையும் 1994-2000 வரையிலான 3ஆவது   பாராளுமன்றத்தின்

சபாநாயகராக கே.பீ.ரத்நாயக்க 25 ஒகஸ்ட்  1994  முதல்  10 ஒக்டோபர் 2000 வரையும் 2000 - 2001 வரையிலான 4ஆவது  பாராளுமன்றத்தின் சபாநாயகராக அனுர பண்டாரநாயக்க 18 ஒக்டோபர் 2000 - 10 ஒக்டோபர் 2001வரையும் 2001 - 2004 வரையான 5ஆவது  பாராளுமன்றத்தின் சபாநாயகராக ஜோசப் மைக்கல் பெரேரா 19 டிசெம்பர் 2001 - 07 பெப்ரவரி 2004 வரையும்2004 - 2010 வரையான 6ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக டப்ள்யூ. ஜே.எம்.லொக்குபண்டார 22 ஏப்ரல்
 2004.09.20 ஏப்ரல் 2010 வரையும் 

2010-2015 வரையான 7ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக 
சமல் ராஜபக்‌ஷ 22 ஏப்ரல் 2010 - 26 ஜூன்  2015 வரையும் 2015-2020 வரையான 8ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக கரு ஜயசூரிய 01 செப்டெம்பர் 2015 - 02 மார்ச் 2020 வரையும் 2020 - 2024 வரையான 9ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன 2020 ஆகஸ்ட் 20 - 2024 செப்டெம்பர் 24 வரையும் 2024 ஆம் ஆண்டின் 10ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக அசோக சபுமல் ரன்வல 2020 ஒகஸ்ட் 20 முதல்  2024 செப்டெம்பர் 24வரையான ஒரு மாத காலம் மட்டுமே சபாநாயகராகப் பதவி வகித்து இராஜினாமா செய்த நிலையில்,  
ஜகத் விக்ரமரத்ன 2024 டிசெம்பர் 17 முதல்  இன்று வரை சபாநாயகராகவுள்ளார்.

முதல் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் தொடக்கம் 10ஆவது பாராளுமன்றத்தின் தற்போதைய ஆயுட் காலம் வரை 13 பேர் சபாநாயகர்களாகப் பதவி  வகித்த நிலையில், 4ஆவது பாராளுமன்றத்தில் 18 ஒக்டோபர் 2000 முதல் 10 ஒக்டோபர் 2001 வரை சபாநாயகராகவிருந்த  அநுர பண்டாரநாயக்க சபாநாயகர் பதவிக்கு ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்ட

ஓர் எதிர்க்கட்சி  எம்.பி. என்ற பெருமையையும் 6 ஆவது பாராளுமன்றத்தில் 22 ஏப்ரல் 2004  முதல்  20 ஏப்ரல் 2010 வரை சபாநாயகராகவிருந்த  
டப்ள்யூ. ஜே.எம்.லொக்குபண்டார ஐ.தே.முவை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பியாகவிருந்த நிலையில், சபாநாயகர் பதவிக்குப் போட்டியிட்டு   ஐ.ம.சு.மு. சபாநாயகர் வேட்பாளரான டி. யூ.டப்ளியூ.குணசேககர 109  வாக்குகளைப் பெற்ற நிலையில், 110 வாக்குகளைப் பெற்று சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சியிலிருந்து தெரிவு செய்யப்பட்டவர் என்ற பெருமையைப் பெற்றார். 

சபாநாயகர் என்பவர் பாராளுமன்றத்தின் தலைவராவார். தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அந்த பாராளுமன்றத்தை  நடத்துவதற்கு அவரே முழு அதிகாரம் பெற்றவர்.

நாட்டின் மூன்றாவது குடிமகன், எந்த ஒரு சட்டமூலமும் அது அரசாங்க சட்டமூலமாக  இருந்தாலும் தனி நபர் சட்டமூலமாக  இருந்தாலும் சரி அவருடைய அனுமதி பெற்றே கொண்டு வர முடியும் .உறுப்பினர்கள் கேள்விகள் எழுப்புவதற்குக் கூட  அவருடைய அனுமதி பெற்றே எழுப்ப முடியும் .

எந்த ஒரு சட்டமூலமும்  வெற்றி பெற்றதாகவோ தோல்வி அடைந்ததாகவோ அவரே 
அறிவிக்க வேண்டும்.வாக்கெடுப்பை 
அவரே நடத்த வேண்டும்.பொதுவாக அவருடைய பாராளுமன்ற  நடவடிக்கைகளில் எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது.

நாட்டில் ஜனாதிபதி, பிரதமர் இல்லாத நிலை ஏற்படுமிடத்து சபாநாயகரே  நாட்டின் தலைவராக இருப்பார். இவ்வாறான 
அதிகாரம் மிக்க சபாநாயகர் பதவியில் இருப்பவர் எப்போதும் அரச, எதிர்க்கட்சிகளை சமமாக நடத்துபவராக, நியாயம், நீதிக்கு கட்டுப்பட்டவராக . பாராளுமன்ற சம்பிரதாயங்களை  
மதிப்பவராக இருக்க வேண்டும் .

ஆனால், அவ்வாறானதொரு சபாநாயகரை இலங்கை பாராளுமன்றத்தில் பார்க்க முடியாமையே இலங்கையர்களின் துரதிர்ஷ்டமாகவுள்ளது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X