2025 ஜூலை 19, சனிக்கிழமை

பொருளாதார நெருக்கடியின் பின்னரான இலங்கை பசுமைப் புரட்சியை நோக்கி

R.Tharaniya   / 2025 ஜூலை 18 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ

1965இல் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் மக்களின் நலன்களின் மேல் அக்கறை செலுத்தவில்லை. வேலையின்மை பாரிய பிரச்சினையாக இருந்தது.

இந்தக் காலகட்டத்தில் வேலையின்மையைப் பல ஆய்வாளர்கள் பெரும்பாலும் 1940களின் பிற்பகுதியில் ஏற்பட்ட மக்கள்தொகை அதிகரிப்பின் காரணமாகவே இப்பிரச்சினை 1960களின் நடுப்பகுதியில் உருவெடுத்தது என்று கூறினார்கள்.

அதையே அரசாங்கமும் சொன்னது. ஆனால், உண்மை என்னவென்றால், மக்கள்தொகை அழுத்தம் வேலையின்மைக்கு ஒரு முதன்மைக் காரணம் அல்ல. அதிக மக்கள்தொகை அழுத்தம் உள்ள நாடுகள் அனைவருக்கும் சில வேலைகளை எவ்வாறு வழங்குவது என்பதைக் கற்றுக்கொள்கின்றன.

ஆனால், இலங்கையின் ஆட்சியாளர்கள் அதைக் கற்றுக் கொள்ளவில்லை. இலங்கையின் வேலையின்மை நிலைமைக்கான உண்மையான விளக்கம், 1960களின் பொருளாதார தேக்க நிலை காரணமாக ஏற்பட்ட நெருக்கடியே, ஏனெனில் தவறான பொருளாதாரக் கொள்கைகள் பொருளாதார வளர்ச்சிக்கு மூலதனத்தை (உள்ளூர் அல்லது வெளிநாட்டு) மட்டுமே சார்ந்திருந்தன.

விவசாயம், நிலம் போன்றவற்றிலும் ஒரு சிலரின் செழிப்பு மூலம் பொருளாதார வளர்ச்சிக்கான முயற்சிகளில்; அரசாங்கம் ஈடுபட்டது.  கிராமப்புற வறுமையை ஆளும் வர்க்கங்கள் அலட்சியம் செய்தன. 

பழைமையான முறைகளைப் பயன்படுத்தி குத்தகை நிலங்களில் விவசாயிகள் விவசாயம் செய்வது தொடர்ந்து நடந்தது. கிராமப்புற மக்கள்தொகைக்கும் பயிர்செய்யப்பட்ட பரப்பிற்கும் இடையிலான விகிதம் 1946இல் 1.34ஆக இருந்தது, 1962இல் 1.81ஆகவும், 1969இல் 2.02 ஆகவும் அதிகரித்தது.

கிராமப்புற வாழ்க்கையின் கட்டமைப்பு அதன் கடுமையான வறுமை, பொருளாதார பாதுகாப்பின்மை மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளுடன் படித்த இளைஞர்களுக்கு நேர்மறையான கிளர்ச்சியை ஏற்படுத்தியது. அடிப்படையில், படித்த இளைஞர்களை நகர்ப்புற வேலையற்றவர்களாக மாற்றுவதற்கு விவசாயத்தை மாற்றத் தவறியதே காரணமாகும்.

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் (1965-70) ‘நில இராணுவம்' என்று அழைக்கப்பட்டதை உருவாக்குவதன் மூலம் வேலையின்மை பிரச்சினையை சமாளிக்க முயன்றது.

இது மீண்டும் சாதாரண மக்களின் பிரச்சினைகளுடன் எந்த தொடர்பும் இல்லாத ஆட்சியாளர்களின் கற்பனைகளிலிருந்து உருவான சாதனங்களில் ஒன்றாகும். இந்தத் திட்டத்தைப் பிரதமர் டட்லி சேனாநாயக்க முன்மொழிந்தார்.

1960களின் நடுப்பகுதியில் ஏற்பட்ட உலகளாவிய உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் விதமாக, 1966 டிசம்பரில் அரசாங்கம்,ஏப்ரல் 1960 முதல் 25 காசுகள் மானிய விலையில் விற்கப்பட்டு வாரத்திற்கு இரண்டு முறை வழங்கப்பட்டு வந்த இலவச அரிசி ரேஷனை வாரத்திற்கு ஒன்றாகக் குறைத்தது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தாம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வாரத்திற்கு இருதடவை வழங்கும் நடைமுறையை மீண்டும் கொண்டுவருவதாக உறுதியளித்தன.

தொடர்ச்சியான அந்நியச் செலாவணி மற்றும் கடன் மீளச்செலுத்தல் நெருக்கடியால் உந்தப்பட்டு, அரசாங்கம் விவசாயத்தில் இறக்குமதி மாற்றீட்டை அதன் அடிப்படை பொருளாதாரக் கொள்கையாக ஏற்றுக்கொண்டது. இதை அடைய, அது 1966-1970 விவசாய மேம்பாட்டு முன்மொழிவுகள் என்ற துறைசார் திட்டத்தை வகுத்தது. 

நெல் உற்பத்திக்கான குறிப்பிட்ட முதலீடு மற்றும் உற்பத்தி இலக்குகளைக் கொண்ட வருடாந்த செயல்படுத்தல் திட்டங்கள் இந்த முன்மொழிவுகளைத் தொடர்ந்து வந்தன.

1964ஆம் ஆண்டு 50 மில்லியன் புஷல்களாக இருந்த நெல் உற்பத்தியை 70 மில்லியனாக அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட விவசாய மேம்பாட்டு முன்மொழிவுகள், 5 ஆண்டுகளில் 40% அதிகரிப்பை இலட்சியமாகக் கொண்டிருந்தன.

அப்போது நாடு அரிசி தேவைகளில் 70% தன்னிறைவு பெறும். இந்த திட்டங்கள் முதன்மையாக விவசாயம் செய்யப்படும் நிலங்களின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதை நம்பியிருந்தன. 

விவசாய அபிவிருத்திக்கான முன்மொழிவுகள், தீவிர விவசாயத்தின் புதிய அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டவை, இவை ஆறு விடயங்களில் குறிப்பாகக் கவனம் செலுத்தின. 

இவை அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வடிவமைக்கப்பட்டுள்ளன: (1)அதிக மகசூல் தரும் விதை வகைகள், (2)இரசாயன உரங்கள், (3)டிராக்டர்கள் மற்றும் பிற விவசாய இயந்திரங்கள், (4)வேளாண்-வேதியியல் பயன்பாடு, (5)அதிகரித்த விரிவாக்க சேவைகள் மற்றும் (6)விவசாயக் கடன். இவை ஒவ்வொன்றையும் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.

(1) அதிக மகசூல் தரும் விதை வகைகள்: முக்கிய முன்மொழிவுகளில் ஒன்று,  விதை நெல் திட்டமாகும். இது மேம்படுத்தப்பட்ட, உரங்களுக்கு ஏற்ற வகைகளின் போதுமான சான்றளிக்கப்பட்ட விதைகளை விநியோகிப்பதில் இருந்தது.

இந்த விதையின் விநியோகத்தை 80,000 இலிருந்து 200,000 புஷல்களாக அதிகரிப்பதே இலக்காக இருந்தது. மேம்படுத்தப்பட்ட விதையின் மரபணு திறன் மட்டும் 10% முதல் 15% வரை இருந்தது.

உரம், உறுதியான நீர் வழங்கல் மற்றும் பொருத்தமான காலநிலை நிலைமைகளுடன் இணைந்து பயன்படுத்தப்பட்டால், விளைச்சல் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பல்வேறு உயர் விளைச்சல் தரும் நெல் வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

ஒரு புறம் இவை நல்ல விளைச்சலைக் கொடுத்தாலும் நீண்டகால நோக்கில் இவை இலங்கையின் விவசாய நிலங்களையும் நெற்பயிர்ச் செய்கையையும் அழித்தன.
(1)H7 என்ற நெல் வகை 1964இல் அறிமுகப்படுத்தப்பட்டது, H8 1966இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

1968-69 மகா பருவத்தில், மொத்த நெல் பரப்பளவில் 73% மேம்படுத்தப்பட்ட ர் வகை நெற்கள் பயிர்செய்யப்பட்டன. ‘அதிசய அரிசி' என்று அழைக்கப்படும் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிக மகசூல் தரும் IR8, பின்னர் 1968 சிறுபோகப் பருவத்தில் 10,000 புஷல் விதை நெல் இறக்குமதியுடன் அறிமுகப்படுத்தப்பட்டது.

இது தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டது. 1969ஆம் ஆண்டில் சுமார் 19,000 ஏக்கர் பரப்பளவிலும், 1970ஆம் ஆண்டில் 65,100 ஏக்கர் பரப்பளவிலும் IR8 பயிரிடப்பட்டது.

ஆனால், அதிக அளவு நைட்ரஜன் உரங்களுடன் அது பராமரிக்கப்பட்டதால் அதன் அதிக மகசூல் திறன் இருந்தபோதிலும், உள்ளூர் நிலைமைகளின் கீழ் IR8 மோசமான முளைப்பு மற்றும் பூச்சிகளின் தாக்குதலுக்கு ஆளாகி, ஒப்பீட்டளவில் குறைந்த தரமான அரிசியைக் கொடுத்தது.

எனவே விவசாயத்தை தன்னிறைவுடைய செய்யும் முயற்சிகள் பாரிய பின்னடைவை எதிர்நோக்கின. (1) (2) இரசாயன உரங்கள்: இந்தக் காலகட்டத்தில் விளைச்சலை வியத்தகு முறையில் அதிகரித்தது உரமாகும். உர பயன்பாட்டை 60,000 தொன்னிலிருந்து 150,000 தொன்னாக அதிகரிப்பதே இதன் நோக்கமாகும்.

நெல்லில் உரப் பயன்பாட்டில் பருவத்தின் தொடக்கத்தில் பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் அடிப்படை பயன்பாடு மற்றும் அதைத்தொடர்ந்து, நைட்ரஜன் உரங்களை மேல் உரமிடுதல் ஆகியவை அடங்கும். ஒரு பயனுள்ள உர பயன்பாட்டுத் திட்டத்தில் அடித்தள பயன்பாட்டிற்கு உறுதியான நீர் வழங்கலும், மேல் உரமிடுவதற்கு நன்கு வடிகட்டிய மண்ணும் தேவை.

உரத்தை நியாயமான முறையில் பயன்படுத்துவது நெல் விளைச்சலை அதிகரிக்கும் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்தது. வுpவசாய அமைச்சு உர பரிந்துரைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஏக்கருக்கு 70 புஷல் மொத்த மகசூலைப் பெற முடியும் என்று கூறியது.

நிலையான உர விகிதங்களை இரட்டிப்பாக்குவதன் மூலம், ஏக்கருக்கு 90 அல்லது 100 புஷல் வரை மகசூல் அதிகரிக்க முடியும் என்பதையும் திட்டத்தின் சோதனைகள் வெளிப்படுத்தின.

விவசாயிகளுக்கான உர விநியோகம் 43,000 தொன்களிலிருந்து (1960-65) 70,000 தொன்களாக (1966-70) அதிகரித்து, 1968-69இல் 86,000 தொன்களாக உச்சத்தை எட்டியது. இருப்பினும், இந்த உர உள்ளீட்டு அளவு விவசாய திட்டங்களின் உண்மையான இலக்கை விட கணிசமாகக் குறைவாக இருந்தது.

1968ஆம் ஆண்டில், நெல்லுக்கான சராசரி உர நுகர்வு ஏக்கருக்கு சுமார் 115 பவுண்டுகள் ஆகும், இது பரிந்துரைக்கப்பட்ட 392 பவுண்டுகளை விட மிகவும் குறைவாகும்.

இங்கு கவனிப்புக்குள்ளாக வேண்டியது யாதெனில் செயற்கை உரங்களின் அதிகப்படியான பயன்பாடு மண்ணின் ஊட்டச்சத்துக்கள் மற்றும் கரிமப் பொருட்களைக் குறைத்து, காலப்போக்கில் மண் வளத்தைக் குறைக்க வழிவகுத்தது.

விவசாயிகள் வெளிப்புற உள்ளீடுகளை (உரங்கள், பூச்சிக்கொல்லிகள்) நம்பியிருக்கத் தொடங்கினர் மற்றும் நிலையான விவசாய நடைமுறைகள் பற்றிய பாரம்பரிய அறிவை இழந்தனர். .ரசாயனங்களின் அதிகரித்த பயன்பாடு பசுமை இல்ல வாயு வெளியேற்றம் மற்றும் மாசுபாட்டிற்கு வழிவகுத்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X