2025 ஜூலை 19, சனிக்கிழமை

“மேல் உலகத்தில் இருந்து சம்பந்தன் நிச்சயம்  கண்ணீர் வடிப்பார்”

R.Tharaniya   / 2025 ஜூலை 17 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

முருகானந்தன் தவம்

தமிழ்த் தேசத்தின் அடையாளமாக சர்வதேசத்தினால் பார்க்கப்பட்டவரும்  தமிழ்த் தேசிய பெருந்தலைவரும் இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் முன்னாள் தலைவருமான  இரா.சம்பந்தன் காலமாகி கடந்த 30 ஆம் திகதி ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில்,

அவரை தமிழ்த் தேசமோ அவரின் கட்சியினரோ  நினைவு கூரவில்லை என்ற விடயம் சில சம்பந்தன் விசுவாசிகளினால் முன்வைக்கப்பட்ட நிலையில், திருகோணமலை மாவட்ட எம்.பி. குகதாசன். யாழ். மாவட்ட எம்.பி. சிறீதரன் ஆகியோரினால் அவசர அவசரமாக சிறிய நினைவஞ்சலி நிகழ்வுகள் அதன் பின்னர் நடத்தப்பட்டன.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிறுவுனர் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 48 ஆவது  ஆண்டு நினைவு தினம் கூட, அண்மையில் மிக சிறப்பாக தமிழரசுக் கட்சியினராலும், தமிழ் மக்களினாலும் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில்,

அதே தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்து காலமான இரா.சம்பந்தனின் முதலாம் வருட நினைவு தினம் தமிழரசுக் கட்சியினாலோ தமிழ் மக்களினாலோ நினைவு கூரப்படாமல் மறக்கப்பட்டமை  சம்பந்தனின் தலைமைத்துவம் தொடர்பான பல்வேறு கேள்விகளையும் விமர்சனங்களையும் தோற்றுவித்துள்ளது.

5 பெப்ரவரி 1933இல் பிறந்து 1977 ஜூலை 21ஆம் திகதி நடந்த  பாராளுமன்றத்  தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் திருகோணமலைத் தொகுதியில் போட்டியிட்டு 15,144 வாக்குகள் பெற்று வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினரானது முதல்  30 ஜூன்  2024 வரை தமிழர்  அரசியலில் தவிர்க்க முடியாதவராக தமிழர் தலைவராக விளங்கிய சம்பந்தனின் மரணத்திற்குப் பின்னர் அவருக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இதற்கு முன்னரான எந்தவொரு தமிழ் அரசியல் தலைவருக்கும் ஏற்பட்டிருக்கவில்லை 

சம்பந்தன் காலமாகி கடந்த 30-06-2025 ஒரு வருடம் நிறைவடைந்த  நிலையில்,  அவரை தமிழினமும் அவரின் உயிர் மூச்சான இலங்கை தமிழரசுக் கட்சியின் அதன் தற்போதைய தலைவர்களும் முற்றாக மறந்து விட்டதுதான், வெறுத்து விட்டது தான் காலக்கொடுமை.

சம்பந்தன்  மரணித்து ஒரு வருடத்திற்குள் அவரை அனைத்து தரப்பினரும் முற்றாகவே மறந்து விட்டனர். வெறுத்து விட்டனர். எந்தவொரு இடத்திலும் அவரின் முதலாம் ஆண்டு நினைவாக எந்தவொரு நிகழ்வுகளும் இடம்பெறவில்லை.

எந்தவொரு ஊடகத்திலும் ஒரு சிறு ஆக்கமாவது அவரைபற்றிய  பிரசுரமாகவில்லை. அவரின் கட்சியினர் கூட நினைவஞ்சலிகளை நடத்தவில்லை. இது தமிழர்களின் மறைந்த எந்தவொரு தலைவருக்கும் ஏற்படாத துர்ப்பாக்கியம். அவமானம், புறக்கணிப்பு.

சம்பந்தனை அவரது கட்சியினரே நினைவு கூர வில்லையென விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவரின் திருகோணமலை மாவட்டத்தின் தற்போதைய எம்.பி.யுமான குகதாசன், சம்பந்தனின் முதல் வருட நினைவு தினம் வந்து, ஒரு வாரத்தின் பின்னர் அவசர அவசரமாக ஒரு சிறிய நினைவு நிகழ்வை ஒருவருக்கும் தெரியாமல் நடத்தி முடித்துள்ளார்.

ஆனால், அதே குகதாசன் முன்னாள் எம்.பி.,  தங்கதுரையின் 28ஆவது ஆண்டு நினைவு தினத்தைக் கடந்த 5ஆம் திகதி  சிறப்பாக நினைவு கூர்ந்திருந்தார்.
தங்கதுரையை மறக்காத குகதாசன் தனக்கு அரசியல் வாழ்வுதந்த சம்பந்தனை மறந்து விட்டார். குகதாசன் மட்டுமல்ல, அவரின் தமிழரசுக் கட்சியின் கூட,   சம்பந்தனை மறந்து விட்டனர். சம்பந்தனை நினைக்கக் கூட, அவர்கள் விரும்பவில்லை.

தமிழினத்தின் பெரும் தலைவரெனக் கருதப்பட்ட சம்பந்தன், தமிழ் மக்களினாலும் அவரின் கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியினாலும்  மறக்கப்பட அல்லது நினைவுகூர விருப்பப்படாத நிலைமை ஏன் ஏற்பட்டது?

சம்பந்தன் 1977இல் பாராளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் திருகோணமலைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினரானார். 1983 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி   பாராளுமன்ற  உறுப்பினர்கள் அனைவரும்  இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தின் படி, தனி நாடு கோருவதற்கு ஆதரவளிக்க முடியாது

என பாராளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுக்க மறுத்ததுடன், 1983 கறுப்பு ஜூலை நிகழ்வுகளில் மூவாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் சிங்களக் காடையர்களினால் படுகொலை செய்யப்பட்டதற்கும், அவர்களது உடைமைகள் சேதமாக்கப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தும்  பாராளுமன்ற அமர்வுகளைப் புறக்கணித்தனர்.

3 மாதங்கள் தொடர்ந்து பாராளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றாமல் போனதால் சம்பந்தனும் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை 1983, செப்டெம்பர் 7இல் இழந்தார்

1989 பாராளுமன்றத் தேர்தலில் சம்பந்தன் ஈஎன்டிஎல்எஃப், ஈபிஆர்எல்எஃப், ரெலோ, தவிகூ கூட்டமைப்பின் வேட்பாளராகத் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டார். தோல்வியடைந்தார்.

இவ்வாறான நிலையில்,  2002இல் இலங்கை  அரசாங்கத்திற்கும்  விடுதலைப் புலிகளுக்கும் இடையில்  சமாதான ஒப்பந்தம் ஏற்பட்ட போது விடுதலைப் புலிகளினால்   ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தனை பிரபாகரன் நியமித்தார்.

அப்போது புலனாய்வு பொறுப்பாளர் பொட்டு அம்மான் உட்பட விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்கள் பலருக்கு சம்பந்தனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக அறிவிப்பதில் உடன்பாடு இருக்கவில்லை.
பலரது தெரிவும்  ஜோசப் பரராசசிங்கமாகவே இருந்தது.

ஆனால்,  பிரபாகரன், சம்பந்தன் துரோகி என்பது உங்களை விட எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால், சம்பந்தனை வெளியில் விடுவதை விட இந்தக் கூட்டமைப்பிற்குள் சம்பந்தனை இழுத்து வைத்திருப்பது தான் பொருத்தமாக இருக்கும் என  கூறியதாகத் தகவல்கள்  உண்டு.

பிரபாகரன்  கூறியது போலவே, 2009இல்  ஆயுதப் போராட்டம் மௌனிக்கும் வரை புலிகளுக்குப் பின்னால் இழுபட்டுத் திரிந்த சம்பந்தன் யுத்தம் முடிவுக்கு வந்தபோது, விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் 
என பாராளுமன்றத்தில்  முழங்கி அவர்களைத் தோற்கடித்ததற்காக 
மஹிந்த ராஜபக்‌ஷ அரசுக்கு நன்றி தெரிவித்ததுடன்,

பிரபாகரனின் கொலைப் பட்டியலில் தனது பெயர் முதலாவதாக இருந்ததாகவும் கூறி  தனது சிங்கள விசுவாசத்தை  உறுதிப்படுத்தினார்.அன்றிலிருந்து அவர் தமிழ் மக்களினால் வெறுக்கப்படுபவராக மாறினார்

அது மட்டுமல்ல, மேல் தட்டு வர்க்க அரசியலை முன்னெடுத்த அவர் தமிழ் மக்களிடம் சென்று மக்களின் வலிகளைக் கேட்டவரும் அல்ல, அதை உணர்ந்தவரும் அல்ல, தனது அரசியல் வாழ்க்கையில்  அதிக நாட்களை  கொழும்பை வாழ்விடமாகக் கொண்டு சிங்கள தேசத்தின் வாழ்க்கை முறைக்குப் பழக்கப்பட்டிருந்தார்.

அதனால் தமிழ் மக்களின் வலியும் வேதனையும் அவருக்குப் புரியாதிருந்ததுடன்,  தமிழர்களின் சுதந்திர வேட்கையையும்  ஏற்றுக்கொள்ள அவர் தயாராக இருக்கவில்லை.

சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினராக, எதிர் கட்சித் தலைவராக, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்   தலைவராக இருந்த காலங்களில் சந்தித்த ஜனாதிபதிகளில்  சந்திரிகாவிற்கு அடுத்தபடியாக ரணில் விக்ரமசிங்கவிற்கே அதிக ராஜ விசுவாசத்தைக் காட்டினார்.

ரணில் மற்றும் மைத்திரி அரசு கொண்டு வந்த ஆட்சியில் சம்பந்தன் ஒரு பங்காளியாகவே இணைந்திருந்தார். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், சம்பந்தன் ஒரு சிங்கள  அரசியல்வாதி போலவே நடந்து கொண்டார்.

அதனால்தான் சம்பந்தனின் உடலை  இறுதியாகப் பார்வையிட்டு இறுதி அஞ்சலி செலுத்துவதற்குக் கூட,   தமிழினம் தயாராக இருக்கவில்லை. சம்பந்தனின் உடல்  யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்படும் போது, வீதியின் இருமருங்கும் சம்பந்தனின் உடலுக்கு  தூவுவதற்காய் பூக்களோடு மக்கள் காத்திருக்கவில்லை.

தந்தை செல்வா கலையரங்கில் சம்பந்தனது உடலை வைத்தபோது,  மண்டபம் நிரம்பி மக்கள் அலைமோதவில்லை. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனையளிக்கப்பட்டு தடுப்பு முகாமில் மரணமடைந்த சாந்தனின் பூதவுடல் அவரது சொந்த ஊரான வல்வட்டித்துறைக்கு கொண்டுவரப்பட்டபோது, வவுனியாவில் இருந்து ஒவ்வொரு ஊரிலும் பூதவுடல் சுமந்து வந்த வாகனத்தை பல்லாயிரக்கணக்கான மக்கள் மறிந்து பூக்கள் தூவி, அஞ்சலி செலுத்தினார்கள்.

சாந்தனின் இறுதி நிகழ்வில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பங்கேற்றிருந்தார்கள் சாந்தனை கௌரவித்த தமிழினம்  சம்பந்தனை  கண்டுகொள்ளவேயில்லை.

அவரின் முதலாம் ஆண்டு நிறைவையும் தமிழ் மக்கள் நினைவு கூர விரும்பவில்லை.சிங்கக் கொடி சம்பந்தனாகவும் சிங்கள ஆட்சியாளர்களின் விசுவாசியாகவும் தமிழ் தேசிய போராட்டத்தின் விரோதியாகவும் அதனால் தமிழ் மக்களின் துரோகியாகவும் இருந்ததால் சம்பந்தனை தமிழ் மக்கள் நினைவு கூர விரும்பவில்லை.

ஆனால், தமது கட்சியின் முன்னாள் தலைவரான, வழிகாட்டியான, அரசியல் வாழ்வு கொடுத்தவரான  சம்பந்தனை நினைவு கூர, அஞ்சலி செலுத்த இலங்கை தமிழரசுக்கட்சி,அதன் தலைவர்கள் கூட  ஏன் விரும்பவில்லை என்பதே இன்றுள்ள கேள்வி.

சம்பந்தனை மறந்து விட்டனரா?, சம்பந்தனை அந்தளவுக்கு வெறுத்து விட்டனரா? அல்லது அவரை  நினைக்கக்கூட விரும்பவில்லையா? சம்பந்தனின் தவறான தீர்க்க தரிசனத்தால் கட்சிக்குள் வந்து இன்று கட்சியின் பொறுப்பை ஏற்று தமிழரசின் அழிவுக்கும் இழிவுக்கும் காரணமாக  உள்ளவர்கள் கூட சம்பந்தனை  மறந்து விட்டனர்.

இதுதான் இவர்கள் சம்பந்தனுக்கு  செலுத்திய  நன்றிக்கடன்.
 சம்பந்தனின் உயிரற்ற உடலை  உரிமை கொண்டாடி அவரின் இறப்பில் கூட அரசியல் செய்த, சம்பந்தனின்  உடல் தீயுடன் சங்கமமாகும்வரை உடன்கட்டை ஏறத் தயாரானவர்கள் போல் ஒட்டிக்கொண்டே இருந்த  வடக்கு,கிழக்கு மாகாண  தமிழரசுப் பிரகிருதிகள் கூட ஒரு வருடத்திற்குள் சம்பந்தனை தமது நினைவிலிருந்தே துடைத்தெறிந்து விட்டனர்.

மேல் உலகத்தில் தனது ஒரு வருட நிறைவில் இருக்கும் சம்பந்தன் ‘’என்னை அனைவரும் மறப்பார்கள் என்பது தெரியும் .ஆனால் இவ்வளவு விரைவாக மறப்பார்கள் என்பது தெரியாமல் போய்  விட்டதே,நான் உயிராக நேசித்த கட்சியும் நான் அரசியல்  ஊட்டி வளர்த்தவர்களும் என்னை நினைக்கக்கூட  விரும்பவில்லையே’’ என்று  நிச்சயம் 
கண்ணீர் வடிப்பார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X