2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மஹிந்தவின் மீள்வருகையை தடுக்க மைத்திரி எடுக்கும் முயற்சி

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2017 ஜூலை 19 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய அரசாங்கம் என்ற பெயரில், ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து அமைத்துக் கொண்டிருக்கும் அரசாங்கத்துக்கான ஒப்பந்தம் காலாவதியாகும் நாள், நெருங்கி வரும் நிலையில், இந்த அரசாங்கம் நிலைத்திருக்குமா என்ற சந்தேகத்தைப் பலர் எழுப்புகின்றனர்.  

 

ஒப்பந்தம் காலாவதியாகிய உடன், தாம் அரசாங்கத்திலிருந்து பிரிந்து செல்வதாக ஸ்ரீ ல.சு.க எம்.பிக்கள் சிலர் அண்மையில் கூறியிருந்தனர். டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை பொறுத்திருக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு ஆலோசனை வழங்கியதாகவும் செய்திகள் வெளியாகின.

ஒப்பந்தம் காலாவதியாகினால் அதைச் சிலவேளை புதுப்பித்துக் கொள்ள முடியும். ஆனால், இரு கட்சிகளுக்கிடையே அடிக்கடி ஏற்படும் சில பிரச்சினைகள் காரணமாக, அது சாத்தியமாகுமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.  

முன்னைய அரசாங்கத்தின் பாரிய ஊழல்களில் ஈடுபட்டோர்களை ஐ.தே.க பாதுகாப்பதாக ஜனாதிபதி அண்மையில் அமைச்சரவைக் கூட்டத்தின் போது, குற்றம்சாட்டியதாக வெளியான செய்தியும் இரு சாராருக்குமிடையே பிணக்கு முற்றுவதையே காட்டுகிறது.  

இந்த அரசாங்கம் மாறி, மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ பதவிக்கு வர முடியுமா? முடியும்! பிரதமராகப் பதவிக்கு வர முடியும். அதற்காக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற வேண்டும் என்றில்லை. ஸ்ரீ ல.சு.க உறுப்பினர்கள் அனைவரும் மஹிந்தவின் அணியில் இணைந்து, கடந்த காலத்தைப் போல், ஐ.தே.க, எம்.பிக்கள் சிலரும் அவர்களுடன் இணைந்தால் மஹிந்த, அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னரே பிரதமராகலாம்.   

அது, போன்ற ஒருவர் பிரதமரானால், மைத்திரியின் நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரம் அவ்வளவு செல்லுபடியாகும் எனக் கூற முடியாது. அத்தோடு, அந்த நிலைமை சிறுபான்மை மக்களை வெகுவாகப் பாதிக்கும்.   

குறிப்பாக, இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில், தற்போது பலரிடம் இருக்கும் சிறிய நம்பிக்கையும் அற்றுப் போய்விடும். தம்மைத் தோற்கடிக்கச் செய்த முஸ்லிம்களிடம் சிலவேளை மஹிந்த கடுமையாகப் பழிவாங்கவும் கூடும்.   

எனவேதான், தற்போது இரு பிரதான கட்சிகளுக்கிடையே நிலவும் முறுகல் நிலை, சிறுபான்மை மக்களுக்கும் முக்கியமாகிறது. அந்த வகையில் ஊழல் தடுப்புத் தொடர்பாக, ஜனாதிபதி ஐ.தே.கவை சாடியதும் சிறுபான்மை மக்கள் பாரதூரமாக நோக்க வேண்டிய விடயமாகும்.   

மறுபுறத்தில், அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கை நேர்மையாகவும் முறையாகவும் நடைபெறுமானால் மஹிந்தவின் குடும்பம் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் வாய்ப்புகள் குறைந்து விடும்.  

 அந்த வகையிலும் ஊழல் ஒழிப்பு என்பது, ஜனநாயகத்துக்கு அத்தியாவசிய காரணி என்பது ஒரு புறமிருக்க, சிறுபான்மையினர் தமது இருப்புக்காகவும் கவனம் செலுத்த வேண்டிய ஒரு விடயமாக இருக்கிறது.  

கடந்த நான்காம் திகதி, அமைச்சரவை கூடிய போது, ஜனாதிபதி ஐ.தே.க மீது நடத்திய தாக்குதல் இந்த அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர், அவர் தமது ஆட்சியின் பங்காளிகளான ஐ.தே.கவுக்கு எதிராக மேற்கொண்ட மிகக் கடுமையான தாக்குதலாகும்.   

ஊழல் தடுப்புக் குழுச் செயலகத்தின் பதவிக் காலத்தை நீடிப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொண்டு வந்த பிரேரணையின் போதே, இந்தப் பிரச்சினை எழுந்துள்ளது.   

அந்தச் செயலகத்தால் என்ன பயன் எனக் கேள்வி எழுப்பியுள்ள ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்காதிருப்பதைப் பற்றி கேள்வி எழுப்பியிருக்கிறார்.  

அவ்வாறு மஹிந்தவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராக, நடவடிக்கை எடுக்காதிருப்பதற்குக் காரணம், அவர்களுக்கும் ஐ.தே.க தலைவர்களுக்கும் இடையிலான புரிந்துணர்வேயாகும் என ஜனாதிபதி குற்றம் சாட்டியுள்ளார். மஹிந்தவின் குடும்பத்தினருக்கு எதிராக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அவற்றினதும் காரம் குறைந்துள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார். 

முன்னைய அரசாங்கத்தின் தலைவர்களுக்கு எதிரான பாரிய அளவிலான ஊழல்கள் தொடர்பாக, விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதில்லை என சுட்டிக் காட்டியுள்ள அவர், சட்ட மா அதிபர் திணைக்களத்தையும் பொலிஸ் திணைக்களத்தையும் தம்மிடம் ஒப்படைப்பதாக இருந்தால், மூன்று மாதங்களில் அந்தப் பாரிய ஊழல்களில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவதாகவும் சற்று ஆவேசமாக கூறியிருக்கிறார்.  

இந்த இரண்டு திணைக்களங்களும் ஐ.தே.கவைச் சேர்ந்த அமைச்சர்களின் பொறுப்பின் கீழேயே உள்ளன. எனவே, ஜனாதிபதியின் இந்தத் தாக்குதல் ஐ.தே.கவைக் குறிவைத்தே மேற்கொள்ளப்பட்டது என்பதில் சந்தேகமே இல்லை.  

கடந்த ஒக்டோபர் மாதமும் ஜனாதிபதி ஊழல் தடுப்புத் தொடர்பாகப் பெரும் சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டு இருந்தார். அதனால், அவர் தமது ஆதரவாளர்களின் விமர்சனத்துக்கே இலக்காக வேண்டியிருந்தது.   

‘அவன்ட் காட்’ மோசடி தொடர்பாக விசாரணை செய்வதற்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் முன்னாள் கடற்படை தளபதிகள் மூவரும் நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டபோது, அது தொடர்பாகத் தமது அதிருப்தியை தெரிவித்த ஜனாதிபதி, இலஞ்ச ஆணைக்குழு, இரகசியப் பொலிஸ் மற்றும் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு ஆகியன அரசியல் மயமாகியுள்ளதாகக் கூறியிருந்தார்.  

அத்தோடு, இனி முன்னாள் படைத் தளபதிகள் விசாரிக்கப்படுவதாக இருந்தால் அதைத் தமக்கு அறிவிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இதையடுத்து இலஞ்ச ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாகக் கடமையாற்றிய தில்ருக்ஷி விக்கிரமசிங்க தமது பதவியை இராஜினாமாச் செய்தார். 

 மைத்திபால சிறிசேன ஜனாதிபதியாவதற்கு பெருமளவில் உதவி செய்த சிவில் சமூக அமைப்புகள், இந்தக் கருத்துகளையிட்டு ஜனாதிபதியைக் கடுமையாகச் சாடின.   

அவரது கருத்துகளால் ஊழல் தடுப்புப் பணியில் ஈடுபட்டு இருக்கும் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், மனமுடைந்து, தமது கடமைகளைச் சரியாகச் செய்யாத நிலை உருவாகலாம் என அவர்கள் வாதிட்டனர்.   

ஊடகங்களும் ஜனாதிபதியின் கருத்தை விமர்சித்தன. இந்த நிலையில், தமது உரையினால் ஏற்பட்ட பாதிப்பைக் குறைக்க நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி நிர்ப்பந்திக்கப்பட்டார்.  

ஜனாதிபதியின் சார்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர், சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, “ஊழல் தடுப்பு நிறுவனங்கள் முன்னைய அரசாங்கத்தின் தலைவர்களின் பாரிய ஊழல்களை விட்டுவிட்டு, சிறுசிறு ஊழல் சம்பவங்களைப் பற்றி விசாரணை செய்ய முற்பட்டுள்ளதனாலேயே ஜனாதிபதி ஆத்திரம் கொண்டுள்ளார்” என்றும் பாரிய அளவிலான ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் என்பதே ஜனாதிபதியின் கருத்தாகும் என்றும் கூறியிருந்தார்.  

அதையடுத்து சிங்களப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றின் போது, ஜனாதிபதியும் இக்கருத்தையே வெளியிட்டு இருந்தார். 

ஆனால் நடைமுறையில் அவரது உரையின் தாக்கம் வேறு விதமாக அமைந்து இருந்தது. தில்ருக்ஷி விக்கிரமசிங்க இராஜினாமாச் செய்ததை அடுத்து, அப்பதவிக்கு நியமிக்கப்பட்டவர் யார் என மக்கள் கேட்குமளவுக்கு இலஞ்ச ஆணைக்குழு செயலிழந்து, ஊடக ஈர்ப்பையும் இழந்துவிட்டது.   

விக்கிரமசிங்க இருக்கும்போது, ஏறத்தாழ நாளாந்தம் முன்னாள் அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகள் அவ்வாணைக்குழுவினால் விசாரிக்கப்பட்டு வந்த போதிலும், அவர் பதவி விலகிய பின்னர், அவ்வாறான நடவடிக்கைகள் நடைபெறுவதாகத் தெரியவில்லை. 

எனவே, சிவில் சமூக அமைப்புகள் குற்றம்சாட்டியது போல், ஜனாதிபதியின் உரையினால் ஊழல் தடுப்பு இயந்திரம் ஓரளவுக்கு முடங்கியதாகவே காணப்பட்டது.  

ஆயினும், “பாரிய ஊழல்கள் தொடர்பான விசாரணைகள் எங்கே” என்றே தாம் கேட்டதாக, ஜனாதிபதி ஒக்டோபர் மாதம் நிகழ்த்திய தமது உரைக்கு விளக்கம் அளித்துள்ளார். அது உண்மையாக இருந்தால் கடந்த நான்காம் திகதி அமைச்சரவைக் கூட்டத்திலும் அவர் அதையே மீண்டும் கேட்டுள்ளார்.   

இது அவர் மட்டும் கேட்கும் கேள்வியல்ல. இந்த அரசாங்கம் பதவிக்கு வருவதற்காக வாக்களித்த மக்களில் பெரும்பாலானவர்கள் 2015 ஆம் ஆண்டு இறுதியளவில் இருந்து, இந்தக் கேள்வியை கேட்கிறார்கள்.   

சர்வாதிகாரப் போக்கைக் கொண்ட முன்னாள் அரசாங்கம் செய்ததைப் போல், நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் இருந்ததற்காக எவரையும் இழுத்துக் கொண்டு வந்து கூண்டில் அடைக்க முடியாது என்றும் அந்த விடயத்தில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் இருக்கின்றன என்றும் அப்போது அமைச்சரவைப் பேச்சாளரும் ஏனைய அமைச்சர்களும் கூறினர்.  

உண்மைதான்! ஆனால், இரண்டரை ஆண்டுகள் கழிந்தும் தேர்தலுக்கு முன்னர் கூறப்பட்டது போல், முன்னாள் அரசாங்கத்தின் தலைவர்கள் பலருக்கு எதிராகப் பாதூரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவில்லை.   

அவ்வாறான குற்றச்சாட்டுகளின் பேரில் மஹிந்த ராஜபக்ஷவோ அல்லது அவரது குடும்பத்தினரோ விசாரிக்கப்படவில்லை.  

கடந்த ஜனாதிபதித்தேர்தலுக்கு முன்னரும் அதையடுத்தும் ஐ.தே.க, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவான ஸ்ரீ ல.சு.கவினர் மஹிந்தவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எதிராக பல நூறு கோடி ரூபாய் கொள்ளையடித்ததாக குற்றம்சாட்டினர்.

அதிவேக வீதிகளை அமைக்கும்போது, கிலோ மீற்றருக்குப் பல நூறு கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாக அவர்கள் மேடைகள் தோறும் கூறி வந்தனர்.   

மஹிந்தவின் குடும்பம் வெளிநாடுகளில் 18 பில்லியன் டொலர் பணத்தைப் பதுக்கியிருப்பதாக 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அப்போதைய வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர ஊடகவியலாளர்களிடம் கூறினார்.   

அதேவேளை, மஹிந்தவின் மகன் நாமல், துபாய் வங்கிகளில் பல நூறு கோடி ரூபாய் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பதாக அக்காலத்திலேயே நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்கள் கூறினர்.  

அது மட்டுமல்லாது மஹிந்தவின் குடும்பத்தினரிடம் ஹெலிகொப்டர்கள், வெளிநாடுகளில் மாளிகைகள் மற்றும் தோட்டங்கள் இருப்பதாகவும் நாட்டு மக்களின் பணத்தைக் கொள்ளையடித்தே அவர்கள் அவற்றை வாங்கியிருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டது.   

ஆனால், பதவிக்கு வந்த இரண்டரை ஆண்டுகள் முடிவடைந்த போதிலும் அவற்றில் எதையும் நிருபிக்க அரசாங்கத்தின் தலைவர்களாலும் மக்கள் விடுதலை முன்னணியினாலும் முடியாமல் போய்விட்டது.   

அவர்கள் மஹிந்தவைப் பற்றி பொய் கூறினார்கள் என்பது அதன் அர்த்தம் அல்ல. அக் காலத்தில் பல நூறு கோடி ரூபாய் அரச பணம் கொள்ளையடிக்கப்பட்டது என்பதை நம்பலாம்; ஆனால், அதை நிரூபிக்க வேண்டும்.   

அந்தப் பொறுப்பு புதிய அரசாங்கத்தையே சாரும். அவர்கள் அந்தப் பொறுப்பை நிறைவேற்றவில்லை. அதைப் பற்றிக் கூறித்தான் ஜனாதிபதி இப்போது குறைபட்டுக் கொள்கிறார்.  

இப்போதைய அவரது அக்கறை புரிந்து கொள்ளக் கூடியதே. அரசாங்கத்தின் இருப்பு ஆட்டம் காண்பதாகவும் தெரிகிறது. 

தேசிய அரசாங்கத்துக்கான இரண்டு வருட கால ஒப்பந்தம் முடிவடைந்தவுடன் அரசாங்கத்திலிருந்து பிரிந்து செல்ல வேண்டும் என மைத்திரிக்கு ஆதரவான ஸ்ரீ ல.சு.க உறுப்பினர்கள் சிலர் கூறுவதாக கூறப்படுகிறது.   

ஆரம்பத்தில் இருந்தே, அளவுக்கு அதிகமாக வேலை நிறுத்தம் போன்றவற்றுக்கு இடமளித்ததன் பயனாக, சகல துறைகளிலும் போராட்டங்கள் காணப்படுகின்றன. 

அவற்றின் பின்னால் மஹிந்தவின் ஆட்கள் இருப்பதாகவும் தெரிகிறது. ‘சைட்டம்’ போராட்டம் அதற்குச் சிறந்த உதாரணமாகும்.  

இந்தப் பதற்ற நிலை, அரசியல் நிலைமை மீது தாக்கத்தை ஏற்படுத்தி, ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டால் மஹிந்தவின் ஆட்கள் தம்மை பழிவாங்குவார்கள் என்பது மைத்திரிக்குத் தெரியும்.   

தற்செயலாக மஹிந்த மீண்டும் பதவிக்கு வந்தால், அவர்கள் ஐ.தே.கவை தொடவும் மாட்டார்கள் என்று ஜனாதிபதி மேற்படி சர்ச்சைக்குரிய அமைச்சரவைக் கூட்டத்தின் போது கூறியதற்குக் காரணம் அதுவே. 

இந்த நிலையில் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தின் மூலமாக, மஹிந்த தலைதூக்குவதைத் தடுக்க, ஜனாதிபதி நினைக்கிறார் என்றால் அது புரிந்து கொள்ளக் கூடியதே. 

ஏனெனில், அது மைத்திரி தற்பாதுகாப்புக்காக எடுக்கும் நடவடிக்கையாகும். ஆனால், அவரால் அந்த ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாமல் இருக்கிறது.   

ஒரு புறம் உயர் படை அதிகாரிகள் ஊழல்களில் சம்பந்தப்பட்டு இருப்பதனால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால், மஹிந்த படையினரை தமக்கு எதிராகத் தூண்டுவார் என ஜனாதிபதி பயப்படுகிறார். அதுதான் ‘எவன் காட்’ வழக்கின் போது நடந்தது.   
அந்த வழக்குக்காக கோட்டாபய ராஜபக்ஷவும் மூன்று கடற்படைத் தளபதிகளும் விசாரிக்கப்ட்டு வருகிறார்கள். அதனால் படையினர் அதிருப்தியடைந்திருப்பதாக நினைத்துத்தான் மைத்திரி, ஒக்டோபர் மாதம் ஊழல் விசாரணைகளில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களைச் சாடினார்.  

மறுபுறம் இந்த விசாரணைகளை முன்னெடுக்காமல் மஹிந்தவின் அரசியல் பயணத்தை தடுக்கவும் மைத்திரியால் முடியாது.

 அடிமட்ட ஸ்ரீ ல.சு.க உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் மஹிந்தவுடனேயே இருக்கிறார்கள். எனவே, அவரை அவர் செய்திருக்கக் கூடிய ஊழல்களைக் கொண்டே அடக்க வேண்டியிருக்கிறது.   

அதற்கு மைத்திரியின் சகாக்களிலும் பலர் விரும்புவதில்லை. அதற்கு இன்னமும் அவர்களின் மனதில் உள்ள ‘மஹிந்த பக்தி’ மட்டுமல்லாது மஹிந்த மீண்டும் வருவார் என்று அவர் மீது இன்னமும் இருக்கும் பயமும் காரணமாக உள்ளன.  

ஆரம்பத்தில் மைத்திரி கடும் போக்கைக் கடைப்பிடிக்காததால் அரச இயந்திரத்தில் செயற்படும் மஹிந்த அதரவாளர்களான அரச அதிகாரிகள், இந்த ஊழல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல இருக்கும் மற்றொரு தடையாகும்.  

இந்தத் தடைகளைத் தாண்டி மைத்திரி ஊழல் தடுப்புப் பொறியில் மஹிந்தவின் ஆட்களை சிக்க வைத்தால், சிலவேளை மஹிந்தவின் அரசியல் பயணத்தில் மாற்றம் ஏற்படும்.  

அந்தப் போராட்டத்தில் மைத்திரி வெற்றி பெறுவது அவரது இருப்புக்கு மட்டுமல்லாது சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்கும் சாதகமானதாகும்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X