2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

’உடல்களை அடக்கம் செய்வதை அனுமதித்து வர்த்தமானியை திருத்துங்கள்’

Editorial   / 2020 மே 11 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் 19 காரணமாக மரணிப்போரின் உடல்களை அடக்கம் செய்வதும் ஓர் அனுமதிக்கப்பட்ட அப்புறப்படுத்தும் முறையாக இணைத்து, 2020.04.11 வெளியிடப்பட வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்திலேயே, இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அதில் தொடர்ந்து குறிப்பிட்டுள்ள அவர், “எமது வேதநூலான புனித அல் - குர்ஆனில் 5ஆவது அத்தியாயம், 32ஆவது வசனத்தில், “எவர் ஒருவர் ஓர் ஆன்மாவை வாழ வைக்கின்றாரோ, மனிதர்கள் அனைவரையும் அவர் வாழ வைத்தவர் போன்றாகிவிடுவார்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணிக்கின்ற இலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தொடர்ச்சியாக தகனம் செய்யப்படுவதால், முஸ்லிம் சமூகம் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகியுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உடல்களைப் புதைக்கும் வழக்கம் உள்ள போதிலும், எமது நாட்டில், 2020.04.11ஆம் திகதி வெளியான வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், அடக்கம் செய்வதற்கும் தகனம் செய்வதற்கும் முடியும் என்பதனை மாற்றி, தகனம் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருப்பதால், அடக்கம் செய்வதற்கான முஸ்லிம்களின் உரிமை தடை செய்யப்பட்டுள்ளது.

“மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை இஸ்லாமிய மத சடங்குகளின் பிரகாரம் அப்புறப்படுத்துவது (அடக்குவது), உயிருடன் வாழ்கின்ற ஒவ்வொரு முஸ்லிமினதும் பொறுப்பாகும். இந்த அடிப்படையிலேதான் இஸ்லாமிய மார்க்கத்தில மரணித்த ஜனாஸாக்களினை அடக்கம் செய்வது பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே, மரணித்த முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்வது, எங்களுக்கு தடை செய்யப்பட்டதொன்றாகும். அதனாலேதான் மரணித்த உடலை குளிப்பாட்டும்போது கூட, நாங்கள் மிகக் கவனமாகவும் உணர்வுபூர்வமாகவும் அக்கடமையினை செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றோம்.

“ஒரு முஸ்லிம் மரணித்தவுடன் அவரது எலும்புகளை உடைப்பது, அவர் உயிருடன் உள்ளபோது அவ் எலும்புகளை உடைப்பதற்கு சமனாகும்” என நபி முஹம்மது (ஸல்) அலைஹி வஸல்லம் கூறினார். இந்த ஹதீஸ் உண்மையானது. மேலும், இந்த ஹதீஸில் கூறப்படுகின்ற விடயமானது முஹம்மது (நபி) அவர்களுக்கும் அவர்களது தோழர்களில் ஒருவருக்கும் கூறப்பட்டுள்ளது. ஆகையால், மரணித்த முஸ்லிம்களினது ஜனாஸாக்களை எரிப்பதற்கு எந்தவிதமான அனுமதியும் கிடையாது.

“2020.05.08 ஆம் திகதி மரணித்த 52 வயதுடைய, மோதரை பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண்ணின் ஜனாஸா எரியூட்டப்பட்டது. குறிப்பிட்ட பெண், ‘கொவிட் 19 தொற்றுநோய்க்கு உட்பட்டவர்’ என அரச அதிகாரிகள் அறிவித்திருந்தனர். ஆனால், பின்னர் உறுதிப்படுத்தப்பட்ட சான்றுகளின் பிரகாரம், குறிப்பிட்ட பெண், கொவிட்- 19 தொற்றுநோய்க்கு உட்பட்டவர் இல்லையென தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனால், குறிப்பிட்ட வைரஸ் தொற்றுக்குள்ளான முஸ்லிம்களின் தலைவிதியைப் பற்றி, முஸ்லிம் சமூகம் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது” என, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X