2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

”கணவருடன் உடலுறவுக்கு மறுப்பது சித்ரவதை” : நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Editorial   / 2025 ஜூலை 20 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மராட்டிய மாநிலம் புனேயை சேர்ந்த ஒருவருக்கு கடந்த 2013-ம் ஆண்டு ஒருவருக்கு  திருமணம் நடந்தது. எனினும் அடுத்த ஆண்டு கணவன், மனைவி பிரிந்து தனியாக வசிக்க தொடங்கினர். 2015-ம் ஆண்டு பெண்ணின் கணவர் விவாகரத்து கேட்டு புனே குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், மனைவி தன்னை பல வகைகளில் சித்ரவதை செய்வதாக கூறியிருந்தார்.

வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம் கணவருக்கு பெண்ணிடம் இருந்து விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. இதை எதிர்த்து பெண் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அந்த மனுவில், "கணவரின் பெற்றோர் தான் தன்னை கொடுமைப்படுத்துகின்றனர். எனினும் நான் எனது கணவரை நேசிக்கிறேன். அவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன். இதனால் குடும்ப நல நீதிமன்றம் வழங்கிய விவாகரத்தை ரத்து செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார். மேலும் நாங்கள் ஒன்றுசேர்ந்து வாழும் காலம் கனியும் வரை கணவர் பராமரிப்பு தொகையாக மாதந்தோறும் ரூ.1 லட்சம் தர உத்தரவிட வேண்டும்" எனவும் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ரேவதி மோகிதே, நீலா கோகலே அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனைவியின் குற்றச்சாட்டுக்கு உயர்நீதிமன்றத்தில் பதிலளித்த கணவர், "எனது மனைவி என்னுடன் உறவு கொள்ள மறுக்கிறார், நான் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்படுகிறார். குடும்பத்தினர், நண்பர்கள், சக ஊழியர்கள் முன்னிலையில் என்னை அவமானப்படுத்தி துன்புறுத்துகிறார். இவ்வாறு பல வகைகளில் தன்னை சித்ரவதை செய்கிறார். மேலும் அவர் தான் என்னை கைவிட்டு விட்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றார். எனவே குடும்ப நல நீதிமன்ற  தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும்" என்று கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், புனே குடும்ப நல நீதிமன்றத்தின் விவாகரத்து உத்தரவை ரத்து செய்ய மறுத்தனர். மேலும் பெண்ணின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இது தொடர்பாக நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், "கணவருடன் உறவுக்கு மறுப்பது, வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்படுவது சித்ரவதையாக தான் கருத முடியும். மனுதாரரான பெண் கணவரின் சக ஊழியர்கள் மத்தியில் நடந்து கொண்ட விதம் அவருக்கு நிச்சயம் மனவேதனையை ஏற்படுத்தி இருக்கும். மேலும் அவரது நண்பர்கள் முன்னிலையில் ஆணுக்கு அவமானம் விளைவிப்பதும் அவருக்கு இழைக்கும் கொடுமை.

கணவரின் மாற்றுத்திறனாளி சகோதரியிடம் அக்கறையின்மை மற்றும் அலட்சிய நடத்தை அவருக்கும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் வேதனையை ஏற்படுத்தும். எனவே இந்த தம்பதியரின் திருமண உறவை குடும்ப நலக்கோர்ட்டு ரத்து செய்வதை உறுதி செய்கிறோம்" என்று கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X