2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

’நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் யோசனைக்கு துரோகி முத்திரை’

Editorial   / 2019 பெப்ரவரி 15 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன் 

அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், மஹிந்த ராஜபக்ஷவால் சர்வகட்சிக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பிலேயே தற்போதும் கலந்துரையாடப்படுகின்றதெனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்காக அதனைக் கொண்டுவந்துள்ள இவ்வேளையில், அந்த யோசனைக்குத் துரோகி முத்திரை குத்துகின்றனர் என்றும் ஆதங்கப்பட்டார். 

மஹிந்தவின் சர்வகட்சி யோசனையை அன்று, நல்லதெனக் கூறியவர்களே, இன்று, அந்த யோசனைக்குத் துரோகி முத்திரை குத்துகின்றனர் எனத் தெரிவித்த பிரதமர், அதிகாரத்தைப் பகர்வதற்கான எந்தவொரு யோசனையையும், ஐக்கிய தேசியக் கட்சி இதுவரையிலும் முன்வைக்கவில்லை என்றும் கூறினார்.  

மஹிந்தவின் காலத்தில் கொண்டுவரப்பட்ட சர்வகட்சி யோசனைத் தொடர்பிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேசிக்கொண்டிருக்கின்றதெனத் தெரிவித்த பிரதமர், அதனை சகலரும் புரிந்துகொள்ளவேண்டுமென வினயமாகக் கேட்டுக்கொண்டார்.  

வடமாகாணத்தில் பல பிரதேசங்களில் பல்வேறான அபிவிருத்தித் திட்டங்களை, தாங்கள் முன்னெடுத்துவருகின்றோம். அவைத் தொடர்பில் ஆராய்வதற்கே, வட பகுதிக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளோமெனத் தெரிவித்த பிரதமர் ரணில், வடபகுதி மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது என்றும் இதன்போது தெரிவித்தார்.  

வடக்கில், புதிய, புதிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில், தங்களுடைய இந்த விஜயத்தின் போது ஆராயப்படுமெனத் தெரிவித்த அவர், அமைச்சர்கள் பலரை அழைத்துவந்துள்ளேன். அவர்களின் ஊடாக, பல்வேறான பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைக் காணமுடியுமென்றார்.  

வடக்குக்கு, மூன்று நாள்கள் விஐயம் மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சர்கள் அடங்கிய குழுவினர், யாழ்ப்பாணத்துக்கு நேற்று வருகை தந்திருந்தனர். இதன்போது, யாழில் பல்வேறு இடங்களுக்கும் சென்று, பல்வேறு நிகழ்வுகளிலும் அவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.  

இந்த விஜயத்தின் முதலாவது நிகழ்வாக, கோப்பாய் பிரதேச செயலக கட்டடத்தை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்திருந்தார். அதன் பின்னர், அங்கு நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

வடக்குக்குப் பல தடவைகள் வருகை தந்துள்ளேன். இங்குள்ள பலருடனும் நல்ல உறவு எனக்கிருக்கிறது. கதிரவேலுப்பிள்ளை முதல் தர்மலிங்கம் என பலருடன் கோப்பாய் பிரதேசத்துக்கும் வந்திருக்கின்றேன் என ஞாபகமூட்டிய அவர், தர்மலிங்கத்தின் மகனான நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனும் இவ்விடத்தில் இருக்கின்றார். இவ்வாறு இங்கு வந்து கட்டடத்தைத் திறந்து வைப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.  

மக்களுடைய பல்வேறு பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு பிரதேச செயலகங்கள் முன்னின்று செயற்படுகின்றன. இந்தப் பிரதேச செயலகங்கள், போர்க் காலத்திலும் போருக்குப் பின்னரான காலத்திலும் சரியான முறையில் செயற்படவில்லை. ஆகையால், அதனைச் சரியான முறையில் செயற்படுத்துவது அவசியமானதாகும் என்றார்.  

ஏற்கெனவே, ஆறு பிரதேச செயலகங்களுக்கான புதியக் கட்டடங்கள் அமைக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன. அதேபோன்று இன்னும் பல பிரதேச செயலகங்களுக்கும் புதிய கட்டடங்கள் அமைக்கப்பட்டு அவற்றையும் திறந்து வைக்க இருக்கின்றோம்” என்றார்.  

“வட மாகாணத்தில், பல பிரதேசங்களில் பல்வேறான அபிவிருத்தி நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். அதேநேரம், இந்த அபிவிருத்திகளில் உள்ள குறைபாடுகள், புதிய, புதிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக, நாங்கள் வட பகுதிக்கு விஐயத்தை மேற்கொண்டிருக்கின்றோம்” என்றார்.  

இங்குள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், தேவைகள் தொடர்பில் தாங்கள் நன்கறிந்துள்ளோம். இந்த விடயங்கள் தொடர்பில் உங்களது பிரதிநிதிகள் அடிக்கடி எங்களுக்குத் தொல்லை கொடுக்கின்றனர் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஆகவேதான், அவற்றைத் தீர்த்து வைப்பதற்காக, பல அமைச்சர்களை அழைத்து வந்திருக்கின்றேன். ஆகையால் பல பிரச்சினைகளுக்குத் தீர்வைக்காண முடியுமென்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.  

இந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் தானாக எதனையும் இங்கு செய்யவில்லை. இங்குள்ள உங்களது பிரதிநிதிகளுடன் கலந்துபேசியே இங்கு பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இவ்வாறு நாம் செய்கின்ற அனைத்து நடவடிக்கைகளும் இந்த அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகின்றதெனத் தெரிவித்த பிரதமர், ஆகவேதான், வடக்கு மக்களுக்கு அர்ப்பணிப்புடன் நாங்கள் செயலாற்றுகிறோம் எனக் கூறிக் கொள்கிறோம் என்றார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X