Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜனவரி 23 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.ஷிவானி
படைப்புழுவால் முற்றாகப் பாதிப்பு ஏற்பட்டிருப்பின், 1 ஏக்கருக்கு 40,000 ரூபாயும் பகுதியளவில் சேதம் ஏற்பட்டிருப்பின், சதவீத அடிப்படையில் விவசாய காப்புறுதித் திட்டத்தின் ஊடாக நட்டஈடு வழங்கப்படும் என, அரசாங்கம் நேற்று அறிவித்தது.
குறித்த படைப்புழு காரணமாக, பொருளாதார ரீதியில் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க, விவசாயத்துறை வல்லுநர்கள் ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்த விவசாயம், கிராமிய பொருளாதார அபிவிருத்தி, நீரியல் வள அமைச்சர் பீ.ஹரிசன், சேனா புழுவை முற்றாக ஒழிக்க முடியாவிட்டாலும், அதனைக் கட்டுப்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
கமத்தொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில், நேற்று (22) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் பணிப்புரைக்கமைய, சோளப் பயிர்ச்செய்கைக்கு பாதிப்பை ஏற்படுத்திவரும் படைப்புழுவைக் கட்டுப்படுத்தும் வகையிலான அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விவசாயிகளை விழிப்புணர்வூட்டும் வகையில், இலட்சக்கணக்கான கையேடுகள் விநியோகிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.
விவசாயத்துறையை அழிப்பதற்காக, சேனா படைப்புழு அடங்கிய சோள விதைகளை இறக்குமதி செய்து, நாட்டுக்குள் பரவச் செய்திருப்பதாக, ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரானவர்களால் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை மறுத்த அவர், அவ்வாறு விதைகள் ஊடாகப் படைப்புழு பரவச் செய்யமுடியாதென்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
படைப்புழு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
குறித்த படைப்புழு தொடர்பில் விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக, விவசாய திணைக்களம், மகாவலி அதிகார சபை,மாகாண விவசாய திணைக்களங்கள் ஆகியன ஒன்றிணைந்து, விசேட குழு அமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது, படைப்புழு பரவுவதைத் தடுக்கும் வகையிலும் அதனைக் கட்டுப்படுத்துவதற்குமாக, 5 கிருமிநாசினிகளைத் தெரிவு செய்துள்ளதாகவும், அமைச்சர் இதன்போது கூறினார்.
இதனைத்தவிர, ஜனாதிபதி இன்று (நேற்று 22) சகல விவசாயத் திணைக்கள அதிகாரிகளையும் அழைத்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், வாராந்தம் தமக்கு அறிக்கை சமர்பிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார் என்றும் ஜனாதிபதியின் பிரத்தியேகச் செயலாளர் ஒருவரையும் இதற்கென நியமித்துள்ளார் எனவும் அமைச்சர் ஹரிசன் கூறினார்.
படைப்புழுவானது, கடந்த வருடம் (2018) செப்டெம்பர் மாதமே இலங்கையில் பரவ ஆரம்பித்தது. இதற்கு முன்னர் இந்தப் படைப்புழு, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகளிலும் ஆபிரிக்க நாடுகளிலும் காணப்பட்டது.
இந்த படைப்புழுவானது, வெப்ப காலத்தில் அதிகம் பரவும் ஒன்றாகும். சுமார் 100 கிலோமீற்றர் தூரம் காற்றின் வேகத்துடன் பறந்துசென்று, பயிர்களை அழிக்கக்கூடிய சத்திவாய்ந்தது. ஆரம்பத்தில், மேற்கு அமெரிக்காவில் இப்புழு காணப்பட்ட போதிலும், அங்கு குளிர்காலம் ஆரம்பமானதும் பின்னர் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது.
இது, சோளத்தை மட்டுமல்லாது குரக்கன், நெல், மரக்கறிகள் வகைகள் உள்ளிட்ட மேலும் பல பயிர்களைத் தாக்கக் கூடியதெனக் கூறிய விவசாய அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.எம்.டபிள்யூ.வீரகோன், அதிகளவில் சோளப் பயிரையே அது விரும்பித் தாக்கும் எனவும் கூறினார்.
படைப்புழுவை முற்றாக ஒழிப்பதற்கான கிருமிநாசினிகள், இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் இன்னும் 3 வருடங்களில், இதற்கான மாற்று கிரமிநாசினி வகைகள் கண்டுபிடிக்கப்படும் எனவும் அவர் கூறினார். அத்துடன், இலங்கையில் 80,000 ஹெக்டேயர் சோளப் பயிர் செய்கை மெற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், இதில் 50 சதவீதமானவையே தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், மொத்த உற்பத்தியில் 20 சதவீத இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
படைப்புழுவை அழிப்பதற்காக, விவசாயிகள் விஷத்தன்மை வாய்ந்த வேறு எந்த கிருமி நாசினிகளையும் பயன்படுத்துவது பொருத்தமுடையதல்ல எனத் தெரிவித்த பணிப்பாளர் நாயகம், இதனால் பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் எச்சரித்தார்.
இந்தப் புழு, அம்பாறை, அநுராதபுரம், மொனராகலை, குருநாகல் ஆகிய மாவட்டங்களிலேயே வியாபித்துள்ளதுடன், ஏனைய மாவட்டங்களுக்கும் பரவி வருகின்றதெனவும் எனவே, இதனைக் கட்டுப்படுத்த அனைத்து வேலைத்திட்டங்களும் அமைச்சு மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவர் மேலும் கூறினார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago