2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மன்னார் புதை குழி வழக்கு: ஜூன் மாதத்திற்கு ஒத்திவைப்பு

Kanagaraj   / 2014 மே 09 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதை குழி தொடர்பான வழக்கு ஜூன் மாதம் 9 ஆம் திகதிக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மன்;னார், மாந்தை திருக்கேதீஸ்வரம்  பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதை குழி தொடர்பான வழக்கு விசாரனை மன்னார் நீதிமன்றத்தில் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் இன்று(9) விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

காணாமல் போன கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக 5 சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் இன்று  ஆஜராகியிருந்தனர்.

கொழும்பில் இருந்து வருகை தந்த சட்டத்தரணிகளான ஆர்.ராஜகுலேந்திரன்,ஆ.நிரஞ்சன் மற்றும் மன்னார் மாவட்ட சட்டத்தரணிகளான பிரிமூஸ் சிறாய்வா,ரி.வினோதன்,எஸ்.லோகு ஆகிய 5 சட்டத்தரணிகளுமே மன்றில் ஆஜராகியிருந்தனர்.

இந்த சட்டத்தரணிகள் காணாமல் போன மற்றும் கடத்தப்பட்ட உறவினர்களின் கோரிக்கைகளை மன்றில் முன்வைத்தனர்.

குறித்த புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடாத்தப்பட்டு அவை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும்,குறித்த புதைகுழி தோண்டப்பட்ட பகுதியில் கடந்த காலங்களில் கிணறு ஒன்று காணப்பட்டுள்ளது. குறித்த கிணறு தற்போது மூடப்பட்டு அடையாளம் தெரியாத வகையில் உள்ளது என்றும் நீதிமன்றில் தெரிவித்தனர்.

குறித்த கிணறும் தோண்டப்பட வேண்டும் என்று சட்டத்தரணிகள் மன்றில் கோரிநின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் உடனடியாக விசாரனைகளை செய்து மன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளதோடு அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பிலும் அவை தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்தும் மன்றில் அறிக்கை சமர்பிபிக்குமாறு உரிய அதிகாரிகளை நீதவான் பணித்தார்.

அத்துடன் புதைகுழி தோண்டப்பட்ட போது அங்கு பிரசன்னமாகியிருந்த விசேட குற்றப்புலனாய்வுப்பிரிவு அதிகாரியையும் மன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X