2025 ஜூலை 21, திங்கட்கிழமை

முசலி மீள்குடியேற்றத்திலுள்ள தடங்கல்களை நீக்குமாறு மகஜர்

Menaka Mookandi   / 2014 மே 11 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

முசலி பிரதேச மக்களின் மீள்குடியேற்றத்தில் ஏற்பட்டுள்ள தடங்கல்களை நீக்கி பாதிப்புக்குள்ளான அம்மக்களின் மீள்குடியேற்றத்தைத் துரிதப்படுத்துமாறு கோரி மன்னார் மாவட்ட செயலாளரிடம் மகஜரொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர், மாகாணசபை உறுப்பினர், பிரதேச சபைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கையொப்பமிட்ட இந்த மகஜரை, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஹுனைஸ் பாரூக் கையளித்தார்.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரை, நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் தலைமையில் வட மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், முசலி பிரதேச சபைத் தலைவர் எஹியான், பிரதேச சபை ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்ட குழு, மன்னார் மாவட்ட செயலகத்தில் சந்தித்து, முசலி பிரதேசத்தின் மீள்குடியேற்றம் மற்றும்  அதிலுள்ள இடர்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடியது. இதன்போதே மேற்படி மகஜர் கையளிக்கப்பட்டது.

இவ்வாறு கையளிக்கப்பட்ட மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'தமிழீழ விடுதலைப் புலிகளால் கடந்த 1990ஆம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் பலவகையில் பாதிப்புகளுக்கும், புறக்கணிப்புகளுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர். யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து சமாதானத்தை ஏற்படுத்த உதவிய அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் முப்படையினருக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்த பிறகு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மிகவும் மந்தகதியில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு சர்வதேச நிறுவனங்கள், உள்ளுர் நிறுவனங்கள், அரசாங்கம் என்பன மிகவும் குறைந்தளவிலான உதவிகளைக்கூட செய்வதற்கு பல சாட்டுப்போக்குகளை காரணம் காட்டுவதை அவதானிக்க முடிகிறது.

முசலி பிரதேசத்தில் காணி அற்றவர்களுக்கு முறைப்படி பிரதேச செயலாளரினால் காணிகள் வழங்கப்பட்டுள்ளன. இக்காணிகள் படையினரால் சுவீகரிக்கப்பட்ட சிலாவத்துறை, முள்ளிக்குளம், மறிச்சுக்கட்டி போன்ற கிராமங்களுக்கான மாற்றுக் காணிகள் அல்;லது 1990இற்குப் பின்னர் பெருக்கமடைந்த குடும்பங்களுக்காகவே இக்காணிகள் உரிய முறைப்படி கையளிக்கப்பட்டிருக்கின்றன.

மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டு 3 வருடங்கள் ஆகியும் இன்னமும் முஸ்லிம் குடும்பங்கள் மரங்களுக்கு கீழும், தற்காலிக கொட்டில்களுக்குள்ளும் எந்தவித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அவர்களுக்கு உதவியும் செய்யாமல் முறையற்ற விதத்தில் பாதுகாப்புத் தரப்பினர் நடந்துகொள்வதாக மக்கள் எம்மிடம் முறையிட்டுள்ளனர்.

அந்த முறைப்பாடுகளாவன,

1. உரிய காணி அனுமதிப் பத்திரம் இருந்தும் கூட மக்கள் அவர்களின் காணிகளை துப்புரவு செய்து வீடுகளைக் கட்டச் செல்லும்போது அது பாதுகாப்புப் பிரதேசம் என்று தடை செய்தல்.

2. மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளின் அளவைக் குறைத்து எல்லை போடுமாறு மக்களை வற்புறுத்துதல்.

3. புதிய கிராமப் பெயர் அடங்கிய பெயர்ப் பலகைகளை மக்கள் வாழ்கின்ற கிராமத்தின் எல்லைக்குள் பலவந்தமாக படையினர் நட்டுள்ளமை.

4. மீள்குடியேறுகின்ற மக்கள் தங்களது நிலங்களைத் துப்புரவு செய்ய இயந்திரங்களைப் பயன்படுத்தும் போது, இயந்திர சாரதிகளைத் துப்பரவு செய்ய வேண்டாம் என்று அச்சுறுத்துதல் என முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

முசலிப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள், கடந்த கால ஜனாதிபதி, நாடாளுமன்ற, பிரதேச சபை, மாகாண சபைத் தேர்தல்களின் போது அரசாங்கத்திற்கு வாக்களித்தனர்.

அவர்களின் பிரதிநிதிகள் நாங்கள் என்ற வகையில் எங்களிடம் படையினரின் செயற்பாட்டை எதிர்த்து முறையிட்டுள்ளனர். நாங்கள் வாக்களித்த ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டினுள் இருக்கின்ற முசலி பிரதேசத்தை இப்போது ஏன் படையினர் ஆளுகின்றனர்.

மேற்படி விடயங்கள் உள்ளடங்களாகவும் முசலி மக்களின் மீள்குடியேற்றத்தில் ஏற்படுகின்ற தடங்கல்களை நீக்கி பாவப்பட்ட, பாதிப்புக்குள்ளான இம்மக்களின் மீள்குடியேற்றத்தைத் துரிதப்படுத்துமாறும், சமாதான சிவில் நிருவாகத்தை முசலியில் ஏற்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம்' என அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X