2025 ஜூலை 21, திங்கட்கிழமை

ராஜிதவின் கருத்துக்கு கூட்டமைப்பு வரவேற்பு

Menaka Mookandi   / 2014 மே 14 , பி.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்தேகம் காரணமாக தயக்கம் காட்டுகின்றது. எனவே குறித்த சந்தேகத்தை போக்குவதற்கு அரசாங்கமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுக்களை நடத்த வேண்டும் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்த கருத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

இது தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விடுத்துள்ள அறிக்கையில் மேலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான தெரிவுக் குழுவில் இணைந்துகொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயக்கம் காட்டி வருகின்றது. அரசாங்கத்தில் நம்பகத்தன்மை இல்லாமையே அதற்கான முதல் காரணமாக அமைகின்றது.

அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தொடர்ந்தும் அசமந்தப் போக்குடன் செயற்பட்டு வருகின்றது. ஆனால் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள அரசாங்கம் முனைகின்றது.

ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கின்ற பிரச்சினைகளுக்கு நிறந்தரத் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கும் இந்த அரசு முனைப்புக்களை மேற்கொள்ளவில்லை.

இந்த நிலையில் அரசியல் தீர்வு குறித்து இணக்கப்பாடு ஒன்றுக்கு வருவதற்கு அரசாங்கத்தினால் நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த தெரிவுக்குழுவில் பங்கேற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை பங்கெடுக்கவில்லை.

தொடர்ச்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அரசிடம் முன்வைக்கின்ற எந்த விடையங்கள் தொடர்பிலும் ஆராயப்படவில்லை. இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் இணைந்து கொள்வதாக இருந்தால் கூட்டமைப்பின் சந்தேகங்கள் போக்கப்பட வேண்டும் என மீன்பிடி மற்றும் நீரியல்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்த கருத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது' என அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X