2025 ஜூலை 21, திங்கட்கிழமை

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அடக்குமுறைகள்: சிவாஜிலிங்கம்

Kogilavani   / 2014 மே 19 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எம்.றொசாந்த்


'முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தன்று வடக்கு, கிழக்கு மாகாணத்தில் மிகப்பெரிய அடக்கு முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன' என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (18) மாலை 6.30 மணியளவில் நல்லூரில் இடம்பெற்ற வழிபாட்டின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'போரிலே இதுவரை காலமும் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கும் வீர மரணமடைந்தவர்களுக்கும் நாங்கள் நினைவஞ்சலி செலுத்துகின்ற இந்த நிகழ்வை தேவாலயத்திலும் ஆலயத்திலும் அனுஷ்டித்தோம்.

இராணுவ ஆட்சியினுடைய ஒட்டுமொத்த வடிவமாக யாழ்ப்பாண குடாநாடு இன்று (18) காட்சியளித்து. அதேபோல, வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும்  மிகப்பெரிய அடக்கு முறை கட்டவிழ்த்து விடப்பட்டு இருந்தன. 

திருகோணமலை காளி கோவிலில் பொங்கல் பொங்கிய சிங்கள பெண்மணி தாக்கப்பட்டுள்ளார். எவ்வளவு கேவலமாக எமது மக்களை அவர்கள் நடத்த முற்படுகிறார்கள் என்பதற்கு இது ஒன்றே போதும். கோவில்களில் சிங்களவர்கள் கூட வழிபட முடியாத ஒரு நிலைமை காணப்பட்டது.

எத்தனை தடைகள் வந்த போதிலும் அத்தனை தடைகளை மீறி கொல்லப்பட்ட அத்தனை இலட்சக்கணக்கான தமிழ் மக்களுக்கும் வீர மரணமடைந்தவர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறோம்' என மேலும் தெரிவித்தார்.

மக்களின் உணர்வுகளை மழுங்கடிக்க முடியாது  - சிறிதரன்

'மக்களுடைய உணர்வுகளை எந்தக் காலத்திலும் மழுங்கடிக்க முடியாது. ஜனநாயகம் பேசுகின்றவர்கள் யுத்த வெற்றியை கொண்டாடுகின்றவர்கள் முதலில் மனித உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும்' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நேற்று (18) மாலை 5.30 மணியளவில் பெரிய கோவில் தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டின் பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இராணுவ காவலரண்கள் இராணுவ முனைப்புக்களுக்கு மத்தியில் மக்கள் தமது மன எண்ணங்களை பகிர்ந்து கொள்ள முடியாதவாறு யுத்த பிரதேசம் போல வடமாகாணம் இன்று (நேற்று) காட்சியளிக்கின்றது.

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்து 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களுக்காக  தங்களுடைய உணர்வுகளைகூட வெளிப்படுத்த முடியாத அளவுக்கு தமிழ் மக்களுக்கு இலங்கை என்னும் ஜனநாயக நாட்டில் அனுமதி இல்லை என்ற செய்தி தமிழ் மக்களை பொருத்தவரை அவர்களுடைய மனங்களை மிகப்புண்படுத்தியுள்ளது.

இருந்தாலும் பல இடங்களில் மக்கள் முள்ளிவாய்க்கால் வணக்கங்களை செலுத்தியுள்ளார்கள்.

ஆகவே மக்களுடைய உணர்வுகளை எந்தக் காலத்திலும் மழுங்கடிக்க முடியாது. இங்கு நடப்பதைப் பார்த்தால் நாங்களும் சிங்கள மக்களும் சேர்ந்து வாழ முடியாது என்று மிக வெளிப்படையாக தெரிகிறது.

ஏனென்றால் இராணுவம் எங்களை அடக்கிக்கொண்டு இருக்கின்றபோது தமிழர்கள் வேறு நாடு சிங்களவர்கள் வேறு நாடு என்று தான் உணரமுடியும்.

எங்களுடைய உறவுகளை, எங்கள் வீரர்களை நாங்கள் இந்த நாளில் நினைவு கொள்கிறோம். எங்கள் நினைவுகள் தொடரும் நாங்கள் தொடர்ந்து அவர்களுக்காக பிரார்த்திப்போம்' என மேலும் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X