2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மோடி தலைமையிலான அரசை ஏமாற்ற முடியாது: சிவசக்தி ஆனந்தன்

Kanagaraj   / 2014 மே 26 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

மன்மோகன் சிங் அரசை ஏமாற்றியது போன்று மோடி தலைமையிலான அரசை இலங்கை அரசாங்கம் ஏமாற்ற முடியாது. அவ்வாறு ஏமாற்றினாலும் பாதிக்கப்படுவது இலங்கை அரசாங்கமே என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

அமரர் திருமதி சிவசுந்தரம் குணலட்சுமி ஞாபகர்த்தமாக லண்டனைச் சேர்ந்த தவசீலன் என்பவரால் வழங்கப்பட்ட நிதியில் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு உடையார் கட்டு மகாவித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்றது.

அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்; இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

போருக்கு முன்பும் போருக்கு பின்பும் இந்த மாவட்டத்தின் மருத்துவ சேவை என்பது பெரியதொரு சேவையாகவே பார்க்கப்படுகின்றது. இது போரால் பாதிப்படைந்த மாவட்டம். இவர்களுக்கான மருத்துவ சேவை என்பது மிக அவசியமானதே. அந்த காலத்தில் இந்த மக்களுக்காக பலர் மருத்துவ சேவையை ஆற்றியிருக்கின்றார்கள்.

இந்த நிகழ்வை கடந்த 18 ஆம் திகதி நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால் முள்ளியவாய்காலில் எமது மக்கள் கொத்து கொத்தாக இறந்த தினம் எனக் கூறி பாதுகாப்பு தரப்பால் அனுமதி மறுக்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் போராட்டத்தின் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். பலர் காயங்களுக்கு உள்ளானார்கள்.

இதனால், உங்களுக்கு கண்ணாடிகளை வழங்கி உங்கள் உறவுகள் நினைவாக ஆத்மாசாந்தி பிரார்த்தனையில் ஈடுபடலாம் எனக் கருதியிருந்தோம். அதற்கு இந்த அரசு அனுமதி தரவில்லை. இப்படிப்பட்ட அரசுடன் தான் நாம் வாழ்கின்றோம். இவர்களிடமே எமக்கான தீர்வைப்  தரும்படி போராடி வருகின்றோம். இவர்கள் தீர்வைத் தருவார்கள் என்ற நம்பிக்கை இழந்ததாலேயே வெளிநாடுகளை நம்பியுள்ளோம்.

ஐ.நாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் படிப்படியாக அரசை நெருக்குகிறது. வரும் மாதமளவில் இன்னும் நெருக்குதல்கள் அதிகரிக்கும். அண்மையில் இந்தியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக புதிய பிரதமராக பதவியேற்ற மோடியுடன் கூட்டமைப்பு பேச தயாராக இருக்கிறது. இந்த அரசாங்கம் மன்மோகன் சிங் அவர்களை ஏமாற்றிய மாதிரி மோடியை ஏமாற்ற முடியாது. மோடிக்கு இந்த அரசாங்கம் வாக்குறுதியைக் கொடுத்து விட்டு மீறுவது என்பது நடைமுறைச்சாத்தியமானதில்லை.

அப்படி மீறினாலும் ஏமாறப்போவது இலங்கை அரசாங்கமே தவிர, மோடி இல்லை. எனவே, மன்மோகன்சிங் அரசை மாதிரி மோடியை இந்த அரசு கருதிவிடமுடியாது. நாமும் ஒன்று பட்டு இந்தியாவினதும் சர்வதேசத்தினதும் துணையுடன் எமக்கான தீர்வைப் பெற முயற்சிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி. சிவமோகன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன், வடமாகாணசபை உறுப்பினர்களான வீ. கனகசுந்தரசுவாமி, மேரிகமலா குணசீலன், புதுக்குடியிருப்பு கோட்டக் கல்வி அதிகாரி சு.சோதிநாதன், ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப்பணிப்பாளர்களான ச.நாகரத்தினம், பொ.பேரின்பநாயகம், உடையார் கட்டு மகாவித்தியாலய அதிபர் வி.சிறிதரன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.பூங்கோதை, புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி ப. பரணீதரன், புதுக்குடியிருப்பு மாவட்ட வைத்திய அதிகாரி ப. சத்தியரூபன் மற்றும் மூக்குகண்ணாடி பெறும் பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X