2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அரசின் காட்டுமிராண்டித்தனம் காரணமாக மக்கள் சேவையை வழங்க முடியவில்லை: சி.சிவமோகன்

Menaka Mookandi   / 2014 ஜூன் 08 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

அரசின் காட்டுமிராண்டித்தனம் காரணமாக இலவச மூக்கு கண்ணாடிகள் கூட வழங்க முடியவில்லை என வட மாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 'உடையார்கட்டு பிரதேசத்தில் இனங்காணப்பட்ட கண் மற்றும் பார்வைக்கோளாறுள்ளவர்களுக்கு கடந்த 18.05.2014ஆம் திகதி, இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்குவதற்கான நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. எனினும், இராணுவம் மற்றும் பொலிஸாரின் சில செயற்பாடுகள் காரணமாக அந்நிகழ்வை ஒத்திவைக்க நேர்ந்தது.

இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்குவதற்கு உடையார்கட்டு மகா வித்தியாலய மண்டபத்தை பயன்படுத்துவதற்கு வடமாகாண கல்வி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோரிடம் முறையாக அனுமதி பெறப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்நிகழ்வானது சாதாரண சமூக சுகாதார மேம்பாடு சம்பந்தமான நிகழ்ச்சியாக இருந்தபோதிலும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் என்பதால், அதனை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. மே 18 என்றதும் சிங்கள பௌத்த பேரினவாதிகள் கிலி பிடித்து தொடை நடுங்குவது ஏனோ என்று புரியவில்லை என்று அவர் கூறினார். 

குறித்த ஏற்பாட்டை நிறுத்தி பிறிதொரு நாளில் நடத்துமாறு அப்பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி வலியுறுத்தினார். முறையான அனுமதிகள் பெறப்பட்டுள்ளன என்று எம்மால் தெரிவிக்கப்பட்டதற்கு இதனை நடத்த பாதுகாப்பு அமைச்சு அனுமதிக்காது என்ற மிரட்டலே பதிலாக கூறப்பட்டது.

முல்லை வலயக்கல்வி பணிப்பாளருடன் தொடர்பு கொண்ட பொலிஸார், நிகழ்ச்சிகான அனுமதியை இரத்து செய்யமாறு வற்புறுத்தி கோரியுள்ளதோடு, பாடசாலை அதிபரையும் கடுமையாக மிரட்டியுள்ளனர். வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் வடமாகாண கல்வி பணிப்பாளர் ஆகியோரின் எழுத்து மூலமான அனுமதியிருந்தும் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் வாய்ச்சொல்லுக்கு முல்லை வலயக்கல்வி பணிப்பாளர் கட்டுப்பட்டு அனுமதி மறுத்ததாலேயே குறித்த நிகழ்ச்சி தடைப்பட்டுள்ளது.   

இதுபோதாதென்று, நாளை நடைபெறவிருந்த நிகழ்ச்சிக்கு இன்றே உடையார்கட்டு மகாவித்தியாலயத்துக்கு முன்பாகவும், மகாவித்தியாலய சூழலிலுள்ள வீதிகள் முழுவதும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு நிகழ்ச்சிக்கு மக்களை வரவிடாமல் தடுப்பதற்கு இன்று காலையிலிருந்து தடைகள் இடப்பட்டுள்ளன.

எமது மக்களுக்கான சாதாரண ஒரு மருத்துவ பணியைக்கூட செய்ய விடாமல் சிறீலங்கா பேரினவாத அரசு தடுப்பதானது, அதன் இனவெறியினதும், அதிகார மமதையினதும் வெளிப்பாடாகும்.

இறுதிப்போரில் கொல்லப்பட்ட எமது உறவுகளை நினைவு கூறும் மே 18 என்ற புனித நாள் தனிச்சிங்கள ஆட்சியாளர்களுக்கு பாவற்காய் போல கசக்கிறது. இந்த கசப்பு மனதுடன் ஒரு நாடு ஒற்றுமையான வாழ்வு என்றெல்லாம் இந்த அரசு பேசுவது வெறும் பசப்பு வார்த்தைகளேயாகும் என்றும் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X