2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

இராணுவத்தின் உதவியுடன் காட்டுமரங்கள் வெட்டப்படுகின்றன; முதலமைச்சரிடம் மக்கள் புகார்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 18 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எம்.றொசாந்த் 


முல்லைத்தீவில் இராணுவத்தின் உதவியுடன் பெருமளவான காட்டுமரங்கள் வெட்டப்பட்டு தென்னிலங்கைக்கு கொண்டுசெல்லப்படுவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கவனத்திற்கு  முல்லைத்தீவு மக்கள் கொண்டுவந்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு செவ்வாய்க்கிழமை (17) விஜயம் மேற்கொண்ட வடமாகாண முதலமைச்சர்  சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் அங்குள்ள மக்களின் குறைகளை  கேட்டறிந்தனர்.

குறிப்பாக பாண்டியன்குளம், துணுக்காய், மல்லாவி மற்றும் மாந்தை கிழக்கு உள்ளிட்ட பகுதி மக்களை இவர்கள் சந்தித்தனர்.  இதன்போது  மேற்படி விடயம் தொடர்பில் முதலமைச்சரின் கவனத்திற்கு  இம்மக்கள் கொண்டுவந்தனர்.

'அடிப்படை வாழ்வாதாரத் தொழிலாக விவசாயத்தை நம்பி இருக்கின்றோம். இந்நிலையில், படையினர் பெருமளவு நிலங்களையும் பண்ணைகளையும் ஆக்கிரமித்து வைத்துக்கொண்டு அவற்றில் விவசாயம் செய்வதால், அவர்களின் உற்பத்திப் பொருட்கள் சந்தையில் மிகக்குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றது.

இதனால் மிகுந்த கஷ்டப்பட்டு விவசாயம் மேற்கொள்ளும் நாங்கள், அதற்குரிய இலாபங்களை அடைந்துகொள்ள முடியாதிருக்கிறது.
அத்துடன், இந்திய வீட்டுத்திட்டம் உட்பட வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றுக்கு தேவையான மணல் மற்றும் மரம் ஆகியவற்றை  பெற்றுக்கொள்ள முடியவில்லை.

படையினரின் உதவியுடன் கனரக வாகனங்களில் பெருமளவு மணல் மற்றும் பெறுமதியான காட்டுமரங்கள் தென்னிலங்கைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

மேலும் வீதிகள், வடிகால்கள், ஏற்று நீர்ப்பாசன கால்வாய்கள் போன்றவை புனரமைக்கப்படாமல் இருக்கின்றன' என இம்மக்கள் தெரிவித்தனர்.
மேலும், வீட்டுத்திட்டங்களை வழங்குவதற்கு புள்ளி அடிப்படையிலான (குடும்பத்திலுள்ள அங்கத்தவர் எண்ணிக்கைக்கு ஏற்ப முன்னுரிமை) முறைமை கையாளப்படும் நிலையில், போரில் பிள்ளைகளை இழந்திருக்கும் அல்லது பிள்ளைகள் புலம்பெயர் தேசங்களுக்குச் சென்றிருக்கும் நிலையில் தனியாக வாழும் வயதான பெற்றோர் வீடில்லாமல் அல்லல்படும் நிலை தொடர்பாகவும் இம்மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில், மக்களுடைய முறைப்பாடுகள் தொடர்பிலும்  குறிப்பாக வாழ்வாதார மேம்பாடு தொடர்பிலும்  வெளிநாட்டுத் தூதுவர்களுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மேலும், வடமாகாணசபையால் மேற்கொள்ளும்படும் நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் தடையாகவிருப்பதாகவும்  அவர் சுட்டிக்காட்டினார்.

மக்கள் தங்கள் பிரச்சினைகளை  எழுத்து மூலமாக தனக்கு தெரியப்படுத்தும் பட்சத்தில் அப்பிரச்சினைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை நிச்சயமாக மேற்கொள்வேன் எனவும் அவர்  உறுதியளித்தார்.

இதன்போது, விவசாயம் மற்றும் கல்வி தொடர்பாக மக்கள் முன்வைத்த கோரிக்கைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும்படி உரிய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் வலியுறுத்தினார்.

இச்சந்திப்பில் வடமாகாணக் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X