2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

'முஸ்லிம் தலைமைகள் ஒரு வலுவான நிலைப்பாட்டை எடுக்கத்தவறி வருகின்றன'

Kogilavani   / 2014 ஜூன் 24 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

'முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் தலைமைகள் ஒரு வலுவான நிலைப்பாட்டை எடுக்கத்தவறி வருகின்றன' என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் செவ்வாய்க்;கிழமை (24) தெரிவித்தார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளையும்,

இனவெறித்தாக்குதல்களையும் வன்மையாக கண்டித்து வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ் அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'பேருவளை, அளுத்கம நகரங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவெறியாட்டமும் அதனைத்;தொடர்ந்து மத்துகம, பெலிவத்தை, பதுளை, தெஹிவளை ஆகிய இடங்களுக்கு பரவிய முஸ்லிம்களின் கடைகளுக்கு தீ வைப்புச்சம்பவங்களும், தாக்குதல் மற்றும் சூறையாடல் நடவடிக்கைகளும் நாம் ஒரு ஜனநாயக நாட்டில் தான் வாழ்கின்றோமா? என்ற கேள்வியை எழுப்புவதுடன், ஆழ்ந்த மனக்கவலையளிப்பதாகவும் கண்டிக்கப்பட வேண்டியவையாகவும் அமைந்துள்ளன.

மேலும், நடைபெற்ற சம்பவங்களுக்கு பொலிஸாரின் மறைமுகமான ஆதரவும் இருந்ததா? என்ற கேள்வியையும் எழுப்புவது தவிர்க்க முடியாததொன்றாகின்றது.

பதட்டமான சூழ்நிலை நிலவும்போது வன்முறையைத் தூண்டத்தக்க ஒரு பேரணிக்கு பொலிஸார் ஏன் அனுமதி வழங்கினர்? முஸ்லிம்களின் கடைகள் தீக்கிரையாக்கப்பட்டபோது பொலிஸாரிடம் துப்பாக்கி இல்லாததால் அவர்களால் அதனைத் தடுக்க முடியவில்லை என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

ஒரு கடுமையான வன்முறை நிலவும் சூழலில் துப்பாக்கி இல்லாத பொலிஸார் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டமை என்பது நம்பக்கூடிய நடவடிக்கையாகத் தெரியவில்லை.

கடந்த வியாழன் அன்று குருத்துவத்த ரஜமகா விகாரையின் பிரதம குருவும், அவரின் சாரதியும் சில முஸ்லிம் இளைஞர்களுடன் தகராறு ஒன்றில் ஈடுபட்டனர்.

அதையடுத்து அவர் கொல்லப்பட்டுவிட்டதாகவும், அவரின் கை துண்டிக்கப்பட்டு விட்டதாகவும் வதந்திகள் பரப்பப்பட்டு அங்கு ஒரு பதட்டமான சூழல் நிலவியது.

அதையடுத்து அளுத்கம நகரில் பொது பல சேனாவினால் ஒரு எதிர்ப்புப்போராட்டம் நடத்தப்பட்டது. வெளியிடங்களிலிருந்து பேருந்துகளில் ஏற்றி வரப்பட்டு இறக்கி விடப்பட்டவர்களே அதில் கலந்து கொண்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய பொதுபல சேனாவின் பொதுச்செயலர் ஞான சார தேரர் வன்முறைகளைத் தூண்டும் வகையில் ஆற்றிய உரையைத் தொடர்ந்து, ஊர்வலமாகச் சென்ற கூட்டத்தினர் தர்க்கா நகரில் தமது வெறியாட்டத்தை ஆரம்பித்தனர் என்றும் அதில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட கடைகளும் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களும் எரியூட்டப்பட்டுள்ளன என்றும் செய்திகள் தெரிவித்தன.

இந்த நிலையில் அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உட்பட மூன்று முஸ்லிம்கள் உயிரிழந்துள்ளனர்.

முஸ்லிம் மக்கள் ஓடிச்சென்று நான்கு பள்ளிவாசல்களில் தஞ்சமடைந்தபோதும், அங்கு வைத்தும் அவர்கள் தாக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவை பொலிஸார் பார்த்திருக்கவே இடம்பெற்றன என்று முஸ்லிம் மக்கள் தெரிவிக்கின்றனர். இதில் எண்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்தக்கலவரங்கள் பேருவளை, மத்துகம, வெலியத்த, பதுளை, தெஹிவளை ஆகிய பகுதிகளுக்கும் பரவி வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

முஸ்லிம் ஒருவருக்குச்சொந்தமான கால்நடை பண்ணையில் புகுந்த வன்முறையாளர்கள் அதன் காவலாளியை கொடூரமாகத்தாக்கியதுடன், இன்னொருவரை படுகாயப்படுத்தினர். இறந்த நால்வரில் ஒருவர் முஸ்லிம்களுக்குச் சொந்தமான நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஒரு தமிழர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவும்போது வன்முறையைத் தூண்டத்தக்க ஒரு பேரணிக்கு பொலிஸார் ஏன் அனுமதி வழங்கினர்? என்பது தான் இங்கு எழும் முதல் கேள்வி.

பொதுபல சேனாவினால் திட்டமிட்ட முறையில் பொலிஸாரின் அனுரணையுடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு இன விரோத வன்முறை என்பதை தெளிவாகப்புரிந்துகொள்ள முடிகிறது.

எனினும் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களோ உறுப்பினர்களோ, இச்சம்பவங்கள் தொடர்பாக எந்தவித வலுவான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

அது மட்டுமன்றி கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கிய போதிலும், களுத்துறைச்சம்பவங்களுக்கு எதிராக அங்கு ஒரு கண்டனத்தீர்மானம் நிறைவேற்ற அனுமதிக்கப்படவில்லை.

முஸ்லிம் மக்கள் மீதான இன ஒடுக்குமுறை, இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக முஸ்லிம் தலைமைகள் ஒரு வலுவான நிலைப்பாட்டை எடுக்கத்தவறி வருகின்றன.

தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் இரண்டாம் தரப்பிரஜைகளாக்கி, இன மத தனித்துவங்களை அழித்து, எமது உரிமைகளை அழிப்பதை நோக்கியே சிங்கள பேரினவாத சக்திகள் அரசின் முழுமையான ஆதரவுடன் ஒவ்வொரு நகர்வையும் மேற்கொண்டு வருகின்றன.

ஒடுக்கப்படும் சிறுபான்மை மக்கள் என்ற வகையில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஐக்கியப்பட்டு ஒரே அணியாக நின்று சிங்களப்பேரினவாத சக்திகளுக்கு எதிராகப்போராட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.

ஆனால் சில முஸ்லிம் தலைமைகள் முஸ்லிம்களுக்கு பேரினவாத சக்திகளால் இழைக்கப்படும் அநீதிகளைப்பூசி மெழுகி மறைத்து ஒரு சமரசப்போக்கை கையாளும் அதேவேளையில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகளை வலுவாக்குவதில் அக்கறை காட்டி வருகின்றனர்.

ஒடுக்கப்படும் சிறுபான்மையினராகிய தமிழ், முஸ்லிம் மக்கள் ஐக்கியப்பட்டு எமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக குரலெழுப்ப வேண்டும். இன்று ஆட்சியாளர்களும், சிங்களப்பேரினவாதிகளும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இழைக்கும் அநீதிகளைக் கண்டிப்பதுடன் தமிழ் மக்களாகிய நாமும், முஸ்லிம் மக்களுடன் கரம் கோர்க்கின்றோம்' என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறோம். என்று  அவர் கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X