2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வவுனியா நகரசபை தொழிலாளர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2014 ஜூலை 02 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா நகரசபையின் அட்டவணைப்படுத்தப்படாத ஊழியர்கள் தொடர்பான பிரச்சிஇனையை எதிர்வரும் 11ஆம் திகதிக்குள் தீர்ப்பதுடன், இது தொடர்பான விசாரணைக்கு 03 பேர் கொண்ட குழுவை நியமிக்கவுள்ளதாகவும் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா நகரசபைக்கு முன்பாக நகரசபை சுத்திகரிப்பு தொழிலாளர்கள்  மூன்றாவது நாளாகவும் இன்று புதன்கிழமை (02)  12 அம்சக் கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்களுடன் ப.சத்தியலிங்கம் கலந்துரையாடியபோதே இவ்வாறு கூறினார்.  

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

'வவுனியா நகரசபைத் தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக நகரமே சுகாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினை தொடர்பாக முதலமைச்சருடன் கதைத்துள்ளேன்.

அவர் இதனை விசாரணை செய்து பிரச்சினையை தீர்ப்பதாக என்னிடம் தெரிவித்துள்ளார். அவரின் அனுமதியுடனே மூன்று பேர் கொண்ட குழு விசாரணைக்காக நியமிக்கப்படுகிறது. அந்தக் குழு எதிர்வரும் 10 நாட்களுக்குள் வவுனியா நகரசபை தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும். அதன் பின் உங்கள் நியாயமான பிரச்சினை தீர்க்கப்படும்' எனத் தெரிவித்தார்.

இவ்விடயத்தை போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியிருந்த அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவருக்கு  வடமாகாண சுகாதார அமைச்சர்  கடிதம் மூலம் உறுதிப்படுத்தி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இப்போராட்டத்தை கைவிட்டு நகரின் அத்தியாவசிய கழிவகற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் போராட்டத்தில் ஈடுபட்ட வவுனியா நகரசபை சுத்திகரிப்பு தொழிலாளர்களிடம் அவர் கோரினார். 

இந்த நிலையில்,  மக்களின் நலனை கருத்தில் கொண்டும் அமைச்சரின் கோரிக்கைக்கு இணங்கவும் தினமும் 7 பேர் 03  மணித்தியாலங்கள் முக்கியமான இடங்களில் உள்ள கழிவுகளை அகற்றுவதாகவும் தமது பிரச்சினை தீர்க்கப்படும் வரை போராட்டம் தொடரும் எனவும் அரசாங்க பொது ஊழியர் சங்க வவுனியா இணைப்பாளர் ஆர்.சித்திரன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X