2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வவுனியா பிரதேச அபிவிருத்திகுழு கூட்டம்

Kanagaraj   / 2014 ஜூலை 05 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

இந்திய வீட்டுத்திட்டத்தில் கிடைக்கப்பெற்ற வீடுகள் மற்றும் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியோரின் வீட்டுத்திட்ட பிரச்சினைகள் தொடர்பில் வவுனியா பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் சனிக்கிழமை (05) வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
குறிப்பாக யுத்தத்தால் முற்றாக பாதிக்கப்பட்ட வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமங்கள் தொடர்பில் இதன்போது அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது.

எதிர்வரும் காலங்களில் வவுனியா மாவட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலமாக 1000 வீடுகளும் இந்திய வீட்டுத்திட்டத்தின் ஊடாக 1000 வீடுகளுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவை கிடைக்கும் பட்சத்தில் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும்இவ் விபரங்களை உடனடியாக கிராம சேவகர்கள் பிரதேச செயலளாருக்கு ஒப்படைக்குமாறும் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுர்தீன் தெரிவித்துள்ளார்.

இதே வேளை, சிதம்பரபுரம் நலன்புரி நிலையத்தில் வசிக்கும் மக்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருந்ததுடன் அவர்களுக்கு காணிகள் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையும் இதன்போது முன்வைக்கப்பட்டிருந்தது.

இதற்கு தீர்வாக அப் பகுதி கிராம சேவகர் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் அதன் பிரகாரம் தற்போது நலன்புரி நிலையம் உள்ள இடத்திலேயே அம் மக்களுக்கு காணிகளை வழங்க பிரதேச அபிவிருத்தி குழுவில் அனுமதி வழங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்போது வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான உனைஸ் பாரூக், சிவசக்தி ஆனந்தன், முத்தலிபாபா பாரூக், வட மாகாண சபை உறுப்பினர்களான எம். தியாகராஜா, எஸ். ஜெயதிலக, வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, திணைக்கள தலைவர்கள் மற்றும் கிராம சேவகர்கள், கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர்கள் உட்பட் பலர்  கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X