- சுப்பிரமணியம் பாஸ்கரன்
வவுனியாவில் வைத்து வெள்ளை வானில் கடத்தப்பட்ட எனது கணவருக்கு மரணச்சான்றிதழ் எடுக்கும்படி சிலர் நேரில் வருகை தந்தும் தொலைபேசியில் அழைப்பினை ஏற்படுத்தியும் வற்புறுத்துவதாக காணாமற்போன பா.நவரட்ணத்தின் மனைவி, காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் நேற்று சனிக்கிழமை (05) சாட்சியமளித்தார்.
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலக பிரிவில் காணாமற்போனோர் தொடர்பில் அவர்களது உறவினர்கள் காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக பிரதேச செயலகத்தில் வைத்து நேற்று சனிக்கிழமை (05) சாட்சியமளித்தனர்.
இதன்போதே குறித்த பெண் காணாமற்போன தனது கணவன் தொடர்பில் சாட்சியமளித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
'இறுதி யுத்தக் காலப்பகுதியில் பிரசவித்திற்காக தான், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், கணவன் வன்னியில் இருந்ததாகவும். பின்னர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்தவேளை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
பொலிஸார், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய வேளை, நீதிமன்றம் தனது கணவனைப் பிணையில் விடுவித்திருந்ததாகவும் மறுநாள் அதிகாலை 3 மணியளவில் வவுனியாவில் தாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு ஆயுதங்களுடன் வெள்ளை வானில் வந்த 6 பேர், தனது கணவனை பிடித்துச் சென்றதாகத் தெரிவித்தார்.
அதன்பின்னர் தனது கணவன் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தங்களது வீட்டிற்கு வந்த சிலர், கணவனுக்கு மரணச்சான்றிதழ் எடுக்கும்படி கூறிச் சென்றதாகத் தெரிவித்தார்.
மேலும், கடந்த இரு தினங்களுக்கு முன்னரும் கொழும்பிலிருந்து வந்த 011 என்று தொடங்கும் தொலைபேசி இலக்கத்தின் மூலம், மரணச்சான்றிதழினை எடுக்கும்படி மீண்டும் வற்புறுத்தியதாகவும் தெரிவித்தார்.
இருந்தும், தனக்கு தனது கணவன் உயிருடன் இருப்பதாக நம்புவதாகவும், ஆகையால் மரணச்சான்றிதழ் எடுக்கமாட்டேன் என கண்ணீர் முடிவுரையாக்கி முடித்துக்கொண்டார்.
நேற்றை சாட்சியமளிக்கும் நடவடிக்கையில், 60 பேர் அழைக்கப்பட்டிருந்ததுடன், அவர்களில் 25 பேர் மட்டும் தமது சாட்சியங்களைப் பதிவு செய்திருந்தனர்.
மேலும், 100 இற்கும் மேற்பட்டவர்கள் சாட்சியமளிப்பதற்கு புதிததாகப் பதிவு செய்ததாக ஆணைக்குழுவினர் தெரிவித்தனர்.
மேலும், இந்தச் சாட்சியமளிப்பின் போது, இறுதி யுத்தத்தின் போது விடுதலைப்புலிகளின் பக்கமிருந்து இராணுவத்தினர் பக்கம் வருவதற்கு உங்களை யாரும் தடுத்தார்களா, குண்டுகள் பொதுமக்கள் உள்ள பகுதியினை நோக்கி அடிக்கப்பட்டனவா, தற்போது இராணுவம் உங்கள் வீடுகளிற்கு அருகில் இருப்பதினால் உங்களுக்குப் பிரச்சினைகள் இல்லையா போன்ற வித்தியாசமான கேள்விகளையும் ஆணைக்குழுவினர் வினாவினர்.
சாட்சியமளித்தவர்களில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணமாற்போனோர் தொடர்பாகவும், விடுதலைப்புலிகள் பிடித்துச் சென்றதாகவும் தெரிவித்திருந்தனர்.