2021 ஒக்டோபர் 22, வெள்ளிக்கிழமை

ஊடகவியலாளருக்கு வட்டு. பொலிஸார் இடையூறு

Niroshini   / 2021 செப்டெம்பர் 20 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த் 

வட்டுக்கோட்டை தெற்கு - முதலி கோவில் பகுதியில், இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்க பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற ஊடகவியலாளரை, தகாத வார்த்தைகளால் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள், திட்டி, அவரின் கடமைக்கு இடையூறு விளைவித்துள்ளனர். 

இந்தச் சம்பவம், நேற்று (19) வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்றது.
 

இது குறித்து தெரியவருவதாவது, 

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் வட்டுத் தெற்கைச் சேர்ந்த ரஜீவன் என்ற பொதுமகனான இளைஞன் எப்போதும் தங்கியிருப்பார். 

அவர் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் தொடர்பைப் பேணி வருவது தொடர்பில், யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் பேச்சாளரிடம் யாழில் இருந்து இயங்கும் இணைய ஊடகம்  கடந்த வாரம் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த நிலையில், நேற்று (19) இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில், ரஜீவன் என்ற இளைஞனின் வழிநடத்தலில், வட்டுக்கோட்டை பொலிஸார் நடந்துகொள்வதாக குறித்த இணைய ஊடகம் அறிந்து கொண்ட  அந்த ஊடகத்தின் ஊடகவியலாளர், அது தொடர்பில் செய்தி சேகரிப்பதற்காக பொலிஸ் நிலையத்துக்குச் சென்றிருந்தார்.

அங்கு சென்ற  செய்தியாளரை அனுமதிக்க மறுத்த உப பொலிஸ் பரிசோதகரும்  பொலிஸ் கொன்ஸ்டபிளும்  தகாத வார்த்தைகளால் ஊடகவியலாளரிடம் கேள்வி எழுப்பியதுடன், "பொலிஸ் நிலையத்துக்குள் வந்து பாருங்கள்" எனவும் மிரட்டல் விடுத்தனர்.

அவர்கள் இருவரும் மதுபோதையில் இருந்ததை அவதானித்த ஊடகவியலாளர், பொலிஸ் ஊடகப் பேச்சாளருக்கு தொடர்பை ஏற்படுத்தி தகவலைத் தெரிவித்தார். 

இந்த அநாகரிக சம்பவம் தொடர்பில் விசாரிக்க 10 நிமிடங்கள் தமக்கு வழங்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார். எனினும் அவர் பின்னர் பதிலளிக்கவில்லை.

அதன் பின்னர், அவர் பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறி சென்றார்.

யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் விடுப்பில் சென்றுள்ள நிலையில், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் விடுப்பில் செல்வுள்ள நிலையில், தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இந்த ஊடக அடக்குமுறையை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X