2021 செப்டெம்பர் 23, வியாழக்கிழமை

’ஓய்வின்றி இருப்பதுவே எனக்கான டொனிக் - புதுமைப்பிரியை’

Princiya Dixci   / 2021 ஜூலை 17 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமதி பத்மா சோமகாந்தன் - ஒரு வருட நினைவுப்பகிர்வு

‘எழுத விரும்புகிற எல்லோருக்கும் எழுதுகோல் வசப்படுவதில்லை. ‘எனக்குச் சொந்தமான எழுதுகோல்கொண்டு, எதையும் எழுதுவேன்’ என்று கிறுக்குகிறவர்களை, எழுத்துலகம் தன் நுழைவாயிலிலேயே தடுத்து நிறுத்திவிடுகிறது. தடை அகன்று அதற்குள் நுழையவேண்டின், மானுடம் புரிந்திருப்பதும் மற்றெல்லாம் அறிந்திருப்பதும் அவசியம்.

இத்தகைமைகளை தன்னியல்பாய்க் கொண்டிருந்த ‘பத்மா அம்மையாரை’ வசப்படுத்த, உண்மையில் எழுதுகோல்தான் காத்துக் கிடந்திருக்கும்போல!’ என்று திருமதி பத்மா சோமாகந்தனுடன் பழகிய ராஜாமகள் குறிப்பிட்டிருந்தார்.

1950களில், ‘புதுமைப்பிரியை’ ஆகி, இலக்கிய சமூகத்தை பெண்கள் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தவர் திருமதி பத்மா சோமகாந்தன். 2020 வரைக்கும் புதுமைகளை உள்வாங்கி எழுத்தை ஆண்டுகொண்டு இருந்தவர். 1954இல் நடந்த சுதந்திரன் வாரப் பத்திரிகையின் சிறுகதைப்போட்டியில் முதல்பரிசு பெற்ற முற்போக்கு பெண்மணி இவர். காணும்போதெல்லாம் அந்த நாள்களைக் கதைகதையாகக் கூறக்கேட்டிருக்கிறோம்.

பெண்களெல்லாம் கண்ணீர் இழுப்பிகள் என்று எண்ணிக்கொண்டிருந்த காலத்தில் சமூகம், அரசியல், தனிமனித உணர்வுகள் எனக் கதையும் மேடைப்பேச்சுமாக இருந்த காலத்தில், தன்னால் தன்குடும்பம் எதிர்கொண்ட மனத்துயர்களையும் பகிர்ந்துள்ளார். ஒரு பெண்ணாக அதிலும் ஒரு பிராமணப் பெண்ணாக அரசியல் மேடையில் அரசியல்பேசி, சமூகக் களத்தில் அரசியலும் முற்போக்கும் எல்லோருக்கும் ஆனது; அதில் ஆண்பெண் பேதம் இல்லை எனத் துருத்திக்கொண்டு எழுந்து நின்றவர். தமிழுக்காக பெண்களுக்காக என எந்தஇடத்திலும் தன் எழுத்தாலும், பேச்சாலும் சலசலப்பை ஏற்படுத்திவிடுவார்.

சமூகத்துக்காகத் தமது நேரத்தை ஒதுக்குவதில் திருமதி பத்மா சோமகாந்தனும் திரு சோமகாந்தனும் போட்டிபோட்டுக்கொண்டு முன்னின்றவர்கள். இலக்கியத்துக்காக,  பெண்களுக்காக மகாநாடுகள், பட்டறைகள் என அவற்றை ஒழுங்கமைப்பதிலும் கொண்டு நடத்துவதிலும் வல்லவர்களாக இருந்தனர்.

அந்த வகையில், யாழ்ப்பாணத்தில் நாவலர் விழா, பாராதியார் விழா என தமிழுக்கு விழா எடுத்தபோது, சோமகாந்தன் அவர்களுடன் இணைந்து இவரும் தனது பணிகள்பற்றி கூறியிருக்கிறார். அன்றில் இருந்து அவரது இறுதிக்காலம் வரை, பொது அமைப்புகளுக்கு சந்திக்க இடம் தேவையென்றால், தனது வீட்டைப் பயன்படுத்த முழுமனதுடன் உவந்தளிப்பார்.

எந்நேரமும் உற்சாகத்துடன் வாசிப்பும் எழுத்தும் என இயங்கும் இவர், மற்றவர்களையும் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்துவதில் பின்நிற்பதில்லை. எழுத முடிந்தும் எழுத முடியாத வேலைப்பழுவில் இருக்கும் பெண்களுக்கு தலைப்பைக் கொடுத்து, “இரண்டு கிழமைக்குள் கட்டுரை வேண்டும்” எனக் கறாராக நின்று, எழுதுவித்து  பல பெண்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

கொழும்பு தமிழ் சங்கத்தில் நடக்கும் பெண்கள்தின நிகழ்வில் அதை வடிவமைத்து கொண்டு நடத்துபவர் இவராக இருப்பார். இந்த வயதிலும் பெண்ணிய கருத்துகளை செவ்வனவே உள்ளவாங்கி, அதைப் புரிந்துகொண்டு அதற்கான களங்களையும் காலங்களையும் உருவாக்கி, கருத்தியலை சமூகத்துள் கொண்டு சேர்ப்பதில் சளைக்காமல் இயங்கினார்.

இலக்கியத்தில் உலாவரும் பலருக்கு விழா எடுக்கும் கலாசாரம் இருக்கின்றபோது, அவர்கள் பெண் இல்கியவாதிகளுக்கு ஏன் எடுப்பதில்லை என்ற கேள்வியை எழுப்பி, ஒளவைக்கு தான் விழா எடுக்கவேண்டும் என மனதார இயங்கி, அதைச் செய்தும் காட்டினார். கொழும்பில் 2014இல் ஒளவைக்கு விழா எடுத்து பல தலைப்புகளில் பலரையும் ஆய்வுசெய்யவைத்து சிறப்புற நடத்தினார். 

திருமதி பத்மா  சோமகாந்தன் இலக்கியம், பெண்ணியம், ஊடகம், ஆன்மீகம் பற்றி அந்த அந்த காலத்தில் ஆழமான பார்வையைக் கொண்டிருந்தார். ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், முன்னரைவிடவும் உற்சாகத்துடன் எழுத்துலகில் பிரகாசித்தார். ஒவ்வொரு மனிதரையும் கூர்ந்து நோக்கும் பண்பும் ஆழ ஊடுருவும் அறிவும் வாய்க்கப்பெற்றவராகத் தன் கதைகளைக் கட்டுரைகளை முன்வைப்பவர் இவர். அந்த வகையில் தான் கண்ட பெண்களில் 24 பேரைப்பற்றி தொகுத்து எழுதிய நூல் ‘ஈழத்து மாண்புறு மகளிர்’. பெண்களின், இளைஞர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை முன்வைத்த கேள்விபதில் ‘நெஞ்சுக்கு நிம்மதி’ என்ற தலைப்பில் நூலாக வந்தது. ஒவ்வொரு தனிமனிதர்களையும் உற்றுநோக்கும் இவரது கூருணர்வுக்கு சான்றாக இவரது சிறுகதைத் தொகுப்புகள் உள்ளன.

இலக்கிய இணையர்களாக வலம் வந்தவர்கள் 2006இல் திரு சோமகாந்தனின் இழப்புக்குப் பின்னர் உறவுகள் குறித்த பார்வையில் போலிகளையும் வெறுமையையும் உணர்ந்தவராக மீண்டும் சமூக வெளிக்குள் தன்னை முன்னிறுத்தினார். முன்னரைவிடவும் வீறுகொண்டு எழுத்துப் பணிசெய்தார். ‘எழுத்து ஒன்றுதான் என்துயர் தீர்க்கும்’ என்றவர், தன் படைப்புகளுக்காகவும்  பத்திரிகைகளுக்காகவும் எழுதினார். எண்ணற்ற சந்திப்புகளில் கலந்துகொண்டு நல் உரையாற்றினார். ‘ஓய்வுக்குப் பின்னரும் ஓய்வின்றி இருக்கிறீர்களே!’ என்றால், ‘அதுவே எனக்கான டொனிக்’ என்று சிரிப்பார்.

திருமதி பத்மா சோமாகாந்தன், தான் அங்கம் வகித்த பல்வேறு இலக்கிய குழுக்களில் நடைபெறும் ஆதிக்க செயற்பாடுகளை மனம்நொந்து கூறுபவர் அல்ல. அந்த அந்த இடத்திலேயே அதற்குப் பதிலிறுத்து, தன்னை ஒரு தமிழ்ப்பெண் ஆளுமையாக அடையாளப்படுத்திவிடுவார். விவாதங்களின்போது தன் கருத்தை அவர் நியாயமாகப் பதிவு செய்ததை பலமுறை கண்டிருக்கிறேன். அது பலருக்கு ஒவ்வாமையைக் கொடுத்திருக்கலாம். அவரின் சொந்த விளம்பரத்துக்காகத்தான் அப்படிச் செய்கிறார் என ஒவ்வாமைக்காரர் புலம்புவதுண்டு. ஆனாலும் பெண்களுக்கான இடத்தை ஏற்படுத்துவதற்கும் அதைத் தக்கவைப்பதற்காகவும் தான் அவ்வாறு செய்ததாக அவர் கூறும்போது பெருமிதம் பொங்கும்.

1950களில் எவ்வாறு தன்னை ஒரு புதுமைப்பிரியையாக கண்டெடுத்தாரோ அதையே அவர் இறுதிவரை கடைப்பிடித்து வாழ்ந்தார். இளவயதினரிடம் வெகு இயல்பாய் தானாகவே இறங்கிவந்து பழகும் பக்குவமும் உற்சாகப்படுத்தும் பண்பும் இவரின் முத்திரையாகும். பல ஊடகங்களில் எழுத்தாளராக இயங்கிக்கொண்டிருந்தபோது, ஊடகங்களில் வேலைசெய்யும் தமிழ் பெண்களுக்கு ஓர் அமைப்பை நிறுவுவதற்கும் அதற்காகத் தனது இல்லத்தில் இடம் தந்து கூட்டங்களைக் கூட்டுவதற்கும் உதவியாக இருந்தார்.

அப்போது வேலைசெய்யும் ஊடகப்பெண்களுக்கு நேர நெருக்கடியாக இருந்தபோது தானே எல்லா பொறுப்பையும் எடுத்து தலைவராக நின்று ‘ஊடறு’ என்று பெயர் சூட்டி, அந்தப் பெயரை பேராசிரியர் சிவத்தம்பியிடம் விவாதித்து முன்னிறுத்தினார். பல கூட்டங்களை, பயிற்சிப் பட்டறைகளை, சர்வதேச பெண்கள் தினத்தை பெரு நிகழ்வுகளாக நிகழ்த்தி காட்டினார். இதற்கு உறுதுணையாக நின்ற காலம் சென்ற சாந்தி சச்சிதானந்தனும் இந்த இடத்தில் நினைவுகூரத்தக்கவர். இவ்வாறு பெண்கள் முன்னேற்றம் என்றால், முன்னிற்கு நிற்பவர் பத்மா சோமாகாந்தன் அவர்கள்.

புரட்சிக்காரராக இருந்தாலும் கால மாற்றங்கள் பலரை காலத்தோடும் சமூகத்தோடும் ஒத்தோட வைத்து புரட்சிக்கருத்துகளை நீர்த்துப்போகச் செய்துவிடும். பத்மா அம்மையாரிடம் அதைக் காணமுடியாது. இறுதிக்காலங்களில் கூட ‘என்னால் அதிகம் சிந்திக்க முடியாமல் இருக்கிறது. என்னிடம் கட்டுரை கேட்டிருக்கிறார்கள். புதிய கருத்துகள் இருந்தால் சொல்லுங்கள்...என்று கூறி ஒவ்வொரு விடயத்தையும் எப்படிப் பார்க்கலாம், எப்படிச் சிந்திக்கலாம் எனப் பல்வேறு கோணங்களையும் விவரிக்கும்படி கேட்பார். உண்மையில் அதைப்பார்த்து வியந்திருக்கிறோம். அதற்காக இறுதிக்காலங்களில் ஒருமுறை அவரைச் சந்தித்து உரையாடினோம்.

இலக்கியக்காரர், சமூகத்துக்காக இயங்கியவர்களின் வயது மூப்பின் இறுதிக்காலங்கள் எல்லோரையும் போல் உற்சாகம் அற்றவைதான். ஆனால் இவர்கள் சந்திக்கவும் கதைக்கவும் காணவும் விரும்புவது தமது இலக்கிய சொந்தங்களையே. அதற்கு இவரும் விதிவிலக்கல்ல. அதற்கு இந்தக் கொவிட்-19 பெரும் தொற்றுக்காலம் அனுமதிக்கவில்லை. அந்தத் துயர் இன்னும் உள்ளது. 2020 ஜூலை 15ஆம் திகதி அவரின் இறப்பிலும் பலராலும் பங்கேற்க முடியாது போனது. தமிழுக்கு பெண்களுக்கு என துடித்துக்கொண்டிருந்த ஒரு இதயமும் மூளையும் துடிப்பதை நிறுத்திக்கொண்டாலும் விதைத்த சிந்தனைப் பொறிகள் ஆங்காங்கே எரிந்து கொண்டிருக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .