2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

மர்மங்களுடன் மரணித்த ‘ரபியா’

Johnsan Bastiampillai   / 2021 செப்டெம்பர் 20 , பி.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இளங்கோ பாரதி

ilangobharathy727@gmail.com

 

 

பெண்ணைப் போற்றுகின்ற பெருமை கொண்டது பாரத நாடு. பல மொழிகள், பன்மைத்துவ கலாசார பாரம்பரியங்களைக் கொண்டு விளங்கும் அந்நாட்டில், பெண்ணைச் சிதைக்கின்ற சம்பவங்களும் அவ்வப்போது இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. 

இந்தியாவில் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்ட பல சந்தர்ப்பங்களைச் செய்திகள் வாயிலாக அறிந்திருக்கிறோம். இக்குற்றங்கள் தொடர்பாகவும் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் தொடர்பாகவும், நாம் தெரிந்து கொண்டிருக்கிறோம். 

சட்டங்கள் எவ்வளவுதான் இறுக்கமானவையாக இருந்தாலும், அவற்றிற்கு வழங்கப்படும் தண்டனைகள் எவ்வளவுதான் கொடூரமைானவையாக இருந்தாலும், இப்பாலியல் வன்முறைகள் இன்னும் அகன்ற பாடாக இல்லை. 

சமீபத்தில் இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் இடம்பெற்ற ஒரு சம்பவம், மனித நேயம் கொண்ட அனைவரது கண்களிலிருந்தும் கண்ணீரை வரவழைத்து விடும் கொடூரம் நிறைந்தது. 

இந்நிலைக்கு ஆளானவர் ஒரு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்  என்பதும் சட்டத்தின் காவலர்களாக விளங்கும் பாதுகாப்புத் தரப்பினருக்கே, பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளதென்பது, சமூகத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுடெல்லி, சங்க விஹார் பகுதியைச் சேர்ந்தவர் ராபியா ஷைஃபி (ஷபியா). 21 வயதான இவர் நான்கு மாதங்களுக்கு முன்புதான், புதுடெல்லி லஜ்பத் நகர் மாவட்ட மாஜிஸ்திரேட் அலுவலகத்தில் சிவில்  பாதுகாப்பு அதிகாரியாக பணியில் இணைந்துள்ளார். இந்நிலையில் ஓகஸ்ட் மாதம் 26ஆம் திகதி, பணிக்கு சென்ற ரபியா வீடு திரும்பவில்லை.

 சம்பவதினத்தன்று ராபியா வீட்டுக்கு வராததால், குடும்பத்தார் இரவு 10 மணி அளவில், ராபியாவின் அலுவலக நண்பர் ஒருவரைத் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். இதன்போது அழைப்பு பதிவு செய்யவில்லை என்பதை ஆரம்பத்தில் உறுதி செய்த அவர், ‘ஒரு வழக்கு சம்பந்தமாக, ராபியா உயரதிகாரியுடன் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார். விரைவில் வீடு திரும்பிவிடுவார். அச்சம் கொள்ளத் தேவையில்லை’ என ஆறுதல் கூறியுள்ளார். 

ஆனால், அடுத்த நாள் காலை வீட்டுக்கு வந்த இரண்டு பொலிஸார், ராபியாவின் உடலை அடையாளம் காட்டுமாறு கேட்டுள்ளனர். என்ன நடந்தது? எனத் தெரியாமல் அடையாளம் காட்டச் சென்றவர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. 

அங்கு ராபியாவின் உடல் சிதைக்கப்பட்டிருந்தது. அவளின் வாய் வழியாகச் சென்ற கத்தி கழுத்து வழியாக வெளியே எடுக்கப்பட்டிருக்கிறது. அவளின் மார்பகங்கள் அறுத்து வீசப்பட்டிருக்கின்றன.  பிறப்புறுப்பு குத்திக் கீறப்பட்டுள்ளது. கழுத்து கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்டு தொங்கும் நிலையில்; நெஞ்சில் ஆழமான துளையிட்ட ஓட்டை. உடல் முழுவதும் ஐம்பதுக்கும் மேற்பட்ட வெட்டுக்கள்;  குத்தப்பட்ட காயங்கள். அவள் இறப்பதற்கு சற்று முன்பு, நான்கு பேருக்கும் அதிகமானோர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளமைக்கான தடயங்களும் காணப்படுள்ளன. 

இந்நிலையில், விசாரணைகள் தீவிரமடையவே நிஜாமுதீன் (25) என்பவர், “ராபியாவை நான் தான் கொன்றேன்” என, பொலிஸில் சரணடைந்துள்ளார். அப்போது, “ராபியாவும் நானும் காதலித்து வந்தோம். சமீபத்தில், வீட்டுக்குத் தெரியாமல், திருமணமும் செய்துகொண்டோம். காதலி தான் முக்கியம் என்று அவளைக் கரம் பிடித்தேன். என்னுடைய வீட்டாரைக்கூட மறந்து விட்டு, அவளது நலன்தான் முக்கியம் என்று அவளுடன் இருந்தேன். அரசாங்க பணியில் சேர்ந்தாள்; எங்கள் வாழ்க்கை நன்றாகவே இருந்தது.

 சில வாரங்களாக, அவளது நடவடிக்கைகளில் மாற்றங்கள் தெரிந்தது. பேச்சிலும் நடவடிக்கையிலும் மாற்றம் ஏற்படவே, எனது சந்தேகத்தை அவளிடம் கேட்டேன். எங்கள் இருவருக்குள்ளும் மோதல் வெடித்தது. அவளுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பது தெரிந்தது. அதை விட்டுவிடச்சொல்லி பலமுறை சொன்னேன்; அவள் கேட்கவில்லை. அவளைக் கொலை செய்ய முடிவெடுத்தேன். ஓகஸ்ட் 26ஆம் திகதியன்று, வேலை முடிந்து திரும்பிக் கொண்டிருந்த அவளை ஃபரிதாபாத்தின் சூரஜ்குண்ட் பகுதிக்கு அழைத்துச் சென்றேன். 

அங்கேயும் எங்களுக்குள் சண்டை வந்தது; வார்த்தை மோதல்கள் அதிகரித்தது. கோபம் அதிகரிக்கவே அவளை நான் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டேன்” என்று கூறியுள்ளார். இக்கொலை பற்றி விவரித்த போது, நிஜாமுதீன் முகம் உக்கிரமாக இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

எனினும், நிஜாமுதீன் கூறுவதை மறுத்துள்ள அப்பெண்ணின் குடும்பத்தினர், திருமணம் செய்துகொண்டதாகக் கூறுகின்றனர். எங்கள் மகள் ஒருபோதும் அப்படிச் செய்பவள் அல்ல. இது திட்டமிட்ட கொலை. எங்கள்   மகளை வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்று, தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து விட்டு, பின்னர் கத்தியால் குத்தி கொலை செய்திருப்பதாகவும், அதை மறைக்கவே, தங்கள் மகள் மீது நிஜாமுதீன் அபாண்டமாக குற்றம் சுமத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.

 நிஜாமுதீனுக்கும் சபியாவுக்கும் திருமணம் ஆனதாகக் கூறும் பொலிஸார், அது சம்பந்தமான ஆவணத்தை இதுவரை வெளியிடவில்லை. ஒருவேளை திருமணம் நடந்தது உண்மை என்றால் கூட, காதலித்த பெண்ணின் மார்பை அறுக்கும் அளவுக்கா ஒருவன் துணிவான் என கேள்வி எழுப்பியுள்ளனர். 

இது இவ்வாறு இருக்க, ராபியாவின் தந்தை கூறும் விடயம் வேறு திசைக்கு அழைத்துச் செல்கின்றது.  “என் மகள் ஒருமுறை, தான் பணியாற்றும் அலுவலகத்தில், ஒரு ரகசிய அறை இருப்பதாகவும் அதில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இப்படி, அந்த அறைக்கு இலஞ்சப் பணமாக தினமும் 4 இலட்சம் வரை வரும் காட்சியை தான் கண்டதாகவும் கூறினார். இந்த நிலையில்தான், அவர் மர்மமான முறையில் இறந்துபோயுள்ளார்” எனக் கூறியுள்ளார். திருமண உறவு, ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் இரகசியப் பணவறை, காவல்துறையின் அலட்சியம் போன்றவை, இந்த வழக்கின் மர்மத்தை மேலும் அதிகரித்துள்ளது.

 “எங்கள் மகளின் மார்பகங்கள் அறுக்கப்பட்டுள்ளன. அவளின் உடலில் அடித்துத் துன்புறுத்தியதற்கான காயங்கள் ஏராளமாக உள்ளன. அதேபோல், அவளுடைய அந்தரங்க உறுப்பும் காமுகர்களால் சிதைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் காவல்துறையினர், குற்றவாளி நிஜாமுதீன் மட்டும்தான். அவர் சரணடைந்துவிட்டார் என்கின்றனர். 

இக் கொலையில் தொடர்புடைய பல குற்றவாளிகள் இன்னும் வெளியில் சுதந்திரமாக இருக்கின்றனர். எனவே, காவல்துறையினர் முறையாக விசாரணை மேற்கொண்டு உண்மைக் குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும்"  என வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில், இக் கொலை தொடர்பாக நியாயமான முறையில் விசாரித்து, கொலையின் உண்மைப் பின்னணியை வெளிக்கொண்டு வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் நீதிகேட்டு போராடி வருகின்றனர். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அச்சமூட்டும் அளவுக்கு அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. 

இவற்றைத் தடுப்பதற்கு ஆரம்பக்கல்வி முதலே, பெண்கள் சமத்துவம், மரியாதை, பெண்கள் வெறும் உடல் அல்ல என்பது பற்றி குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும். பாலியல் குற்றவாளிகளைத் தண்டிப்பதோடு மட்டுமல்லாமல் பாலியல் குற்றவாளிகளை மனசாட்சியில்லாமல் காப்பாற்ற முயற்சிப்பதும், வெட்கமில்லாமல் பொதுவெளியில் ஆதரிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படவேண்டும். அப்பொழுதுதான் குற்றங்கள் குறையும் என்பது பகிரங்கமான உண்மை ஆகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .