2021 செப்டெம்பர் 20, திங்கட்கிழமை

கிரிக்கெட் அரசியல்!

A.P.Mathan   / 2011 ஏப்ரல் 12 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

•    மப்றூக்

லங்கை தோற்று விட்டது பெரும் கவலையாக இருந்தது. உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் 274 ஓட்டங்கள் எடுத்திருந்தும் இலங்கை எப்படித் தோற்றுப் போனது என்பதற்கு அந்தப் போட்டியிலேயே மிக வெளிப்படையான பதில்களும் இருந்தன!

மிக நீண்ட நேரமாக தொலைக்காட்சி முன் உட்கார்ந்திருந்து உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியினைப் பார்த்ததால், சற்று வெளியில் வந்தேன். இலங்கை அணி ஓட்டங்கள் எடுத்துக் கொண்டிருந்த வேளைகளிலும், விக்கெட்டுகளைக் கைப்பற்றிய தருணங்களிலும் பட்டாசு வெடித்த திசைகள் அடங்கிப் போயிருந்தன. பதிலுக்கு – எல்லை ஊரான தமிழ் பகுதியில் பட்டாசுகள் வெடித்தன!

அப்படியென்றால், அந்தப் பட்டாசு வெடித்தோர் இந்தியாவின் வெற்றியைக் கொண்டாடியிருப்பார்கள் என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள். சிலவேளை, இலங்கையின் தோல்வியைக் கூட அவர்கள் கொண்டாடி இருக்கலாம் அல்லவா?

வெளிப்படையாகச் சொன்னால் இலங்கைத் தமிழ் மக்களில் ஒரு தொகையினர் இலங்கையை அந்நிய நாடொன்றாகவே பார்க்கப் பழகிவிட்டனர். இவ்வாறானதொரு மனநிலைக்குத் தமிழ் மக்களை தள்ளிவிட்டதற்கு 'சிங்களப் பெருந் தேசியவாதம்' மிகப்பெரும் காரணமாகும்.

பல்லின மக்கள் வாழும் இந்த நாட்டில் சிங்களத்துக்கும், பௌத்தத்துக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் எக்கச்சக்க முதன்மை நிலையானது – ஏனைய சமூகங்களை இயல்பாகவே ஓரங்கட்டி விட்டிருக்கிறது. இந்நிலைவரம் – 'இலங்கை: சிங்களவர்களின் நாடு' என்கிற மனப்பதிவை மற்றைய மக்களில் கணிசமானோரிடையே ஏற்படுத்தி விட்டிருக்கிறது!

இதோடு சேர்த்து, தமிழ் சமூகத்துக்குள் நிகழ்ந்த அரசியல் எழுச்சி மற்றும் ஆயுதப் போராட்டம் என்பவை – கணிசமான தமிழ் மக்கள் மத்தியில் இலங்கையை மென்மேலும் அந்நிய நாடொன்றாகவே பார்க்கும் நிலையொன்றை உருவாக்கிப் போயுள்ளது.

கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டி நிறைவடைந்தபோது தமிழ் பிரதேசங்களில் வெடித்த பட்டாசுகள் 'சிங்களம்' தோற்றுவிட்ட மகிழ்சியின் ஒலிக் குடியீடாகவும் இருந்திருக்கலாம்!

இன்னொருபுறம், இலங்கைத் தமிழ் மக்களில் பெரும் எண்ணிக்கையானோர் இந்தியாவை இன்னும் தனது சகோதரனாகவே எண்ணிக் கொண்டிருக்கின்றனர். முன்னொரு காலத்தில் இலங்கைத் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மற்றும் அரசியல் விவகாரங்களில் இந்தியா வழங்கிய எல்லைமீறிய உதவிகளை நினைத்து – இலங்கைத் தமிழர்களில் ஓர் அப்பாவித் தரப்பினர் இன்னும் அந்த உறவினைப் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.

நன்றாக யோசித்துப் பார்த்தால் புரியும், இலங்கைத் தமிழர் விவகாரத்தில் 'சிங்களப் பெருந்தேசிய வாதம்' இழைத்தவைகளுக்குச் சற்றும் குறையாதவற்றினைத்தான் இந்தியாவும் செய்து முடித்திருக்கிறது. இதன்படி பார்த்தால், சிங்களமும், பாரதமும் - இலங்கைத் தமிழர் தராசியில் சம எடைக் கற்கள்தான்!

அப்படிப் பார்த்தால், இந்தியாவின் உலகக் கிண்ண கிரிக்கெட் வெற்றியினை இலங்கைத் தமிழர்கள் கொண்டாட வேண்டிய தேவையே இல்லை! அப்படிக் கொண்டாடுவதென்பது இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு நல்ல சகுனமாகவும் அமையாது.

'இலங்கை – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளின் போது, முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் பாகிஸ்தானை வெளிப்படையாகவே ஆதரித்து பட்டாசு வெடித்துக் கொண்டாடுகின்றார்களே? அப்படியென்றால் அது என்னவாம்' என்று உங்களில் யாரேனும் கேட்கலாம்! இலங்கை முஸ்லிம்கள் பாகிஸ்தான் அணிமீது காட்டும் ஆதரவுக்கு அரசியல் பின்னணியென்று எதுவும் கிடையாது. அது மதத்தை அடிப்படையாகக் கொண்ட ஆதரவாகும். ஆனால், இந்திய அணி மீதான இலங்கைத் தமிழர்களின் ஆதரவென்பது முற்றுமுழுதான அரசியல் பின்னணிகளைக் கொண்டது. அல்லது கொண்டதாகப் பார்க்கப்படுகிறது.

'நாங்கள் திறமையை ஆதரிப்பவர்கள். அந்தவகையில் இலங்கையை விடவும் இந்திய அணி பலமானது. எனவே, நாம் - இந்திய அணியினை ஆதரித்தோம். இதில் என்ன தவறுள்ளது?' என்பது இந்திய அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் இலங்கை தமிழர் தரப்பில் சிலர் முன் வைக்கும் வாதமாகும். இது நியாயமான வாதமாகக் கூட இருக்கலாம். ஆனால், 'சிங்களத் தாய்நாட்டுப் பற்றாளர்களிடம்' இது எடுபடாது. இறுதிப் போட்டியில் இந்தியாவை ஆதரித்த அனைவரும் சிங்களப் பெருந் தேசியவாதிகளின் கணக்கில் தேசத் துரோகிகள்தான்!

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது - அலுவலகங்கள் தொடங்கி அண்டை வீடுகள் வரை, இந்தப் பிரச்சினை சூடு பிடித்திருந்தது. இந்திய அணியை ஆதரித்த தமிழர்களை சக சிங்கள அலுவலர்கள் - அந்நியர்களாகவும், தேசத் துரோகிகளாகவுமே பார்க்கத் தொடங்கினர். இது ஆரோக்கியமான சூழ்நிலையல்ல!

இலங்கையின் சிறுபான்மை சமூகங்கள் கடந்த காலங்களிலிருந்து நிறையப் பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. வன்மமாகவும், விடாப்பிடியாகவும் மேற்கொள்ளப்பட்ட அரசியல் சார்ந்த அனைத்து முனைப்புக்களும் கடைசியில் இழப்புக்களிலேயே முடிந்துள்ளன. சாணக்கியமானதும், நெளிவு சுளிவுத் தன்மையுடையதுமான அரசியல்தான் - சிறுபான்மை சமூகத்தினருக்குத் தேவையானதாகும்!

இந்தியாவோ, பாகிஸ்தானோ – தத்தமது தேச நலன்களை மீறி இலங்கைத் தமிழர்களுக்கோ, முஸ்லிம்களுக்கோ ஒருபோதும் உதவிவிடப் போவதில்லை என்பதை நாம் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்தல் வேண்டும். எனவே, உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் போன்ற சந்தர்ப்பங்களில், நமது ஆதரவினை நாம் வாழுகின்ற நாட்டுக்குத் தெரிவித்தல் என்பது சாணக்கியமான முடிவாகும். அவ்வாறு ஆதரவு காண்பிக்க முடியாதுவிட்டால், மௌனமாக இருப்பதே புத்திசாலித்தனமாகும்.

இப்படி நம்மைக் காண்பிப்பதை – சிங்களப் பெருந் தேசியத்திடம் சரணடைதல் அல்லது பணிந்து போதல் என்று அர்த்தப்படுத்தி விடுதல் கூடாது. தளம்பாமல் இருக்கும் நிறைகுடத்துக்கும், வெறுங்குடத்துக்கும் இடையிலுள்ள வித்தியாசங்களை விளங்கிக் கொள்ள முடிந்தவர்கள், அப்படி அர்த்தப்படுத்திப் பார்க்கமாட்டார்கள்!

நபரொருவர் தனக்கு விருப்பமான மதத்தை, மொழியைப் பின்பற்ற முடியும் என்று இலங்கையின் அரசியல் யாப்பில் கூறப்பட்டுள்ளது போல், தனக்கு விருப்பமான விளையாட்டு அணியொன்றினையும் ஒருவர் ஆதரிக்க முடியும்! ஆனால், இந்த நீதி, நியாயங்களை எல்லாம் உரசிப் பார்க்கும் நிலையில் நமது தேசம் இருக்கின்றதா என்பதை முதலில் கணக்குப் போட்டுப் பாருங்கள்!

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகளின் போது, குறிப்பாக கொழும்பு முஸ்லிம்களில் ஒரு பகுதினர் தமது ஆதரவினைப் பாகிஸ்தான் அணிக்குத் தெரிவிப்பது வழமை. ஆனால், இது சிங்களப் பெருந்தேசியவாதிகளுக்கு பெரும் உறுத்தலானதொரு சமாசாரமாகும்! ஒருசில முஸ்லிம் இளைஞர்களின் இந்த ஆதரவுக் கோசத்தினை வைத்துக் கொண்டு – 'தம்பிலாக்கள் தேச துரோகிகள்' என்றெல்லாம் முஸ்லிம்களின் காதுகளில் விழும் வகையில் 'சிங்களத் தேசப் பற்றாளர்களால்' வசைகள் மொழியப்பட்டன!

இதனால், முஸ்லிம் இளைஞர்களுக்கும் - சிங்களப் பெருந்தேசிய அல்லது அடிப்படைவாதிகளுக்குமிடையில் சில சந்தர்ப்பங்களில் முறுகல்களையும், கைகலப்புக்களையும் ஏற்படுத்திய சந்தர்ப்பங்களும் உள்ளன. இந்த நிலைவரம் மிகவும் ஆபத்தானது.

இவற்றையெல்லாம் அவதானித்த பின்னர் - இலங்கை முஸ்லிம்களின் சமய விவகாரங்களில் உச்ச பங்கினை வகிக்கும் 'அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைனர்' சில காலங்களுக்கு முன்னர் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தனர். அதாவது, இலங்கை கிரிக்கெட் அணியானது, வேறு நாடுகளுடன் போட்டிகளில் ஈடுபடும்போது, இலங்கை வாழ் முஸ்லிம்கள் தமது ஆதரவினை எப்போதும் - தாய் நாட்டுக்கே வழங்க வேண்டும். அவ்வாறு வழங்குவதே சிறப்பான நடவடிக்கையாகும் எனும் அர்த்தப்பட அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இப்போதெல்லாம், ஒருவரைப் பழிவாங்குவதற்கு - அவரை 'தேச துரோகி'யாகச் சித்திரித்தாலே போதுமாகும். அதுவே இன்றைய அரசியலாகவும் இருக்கிறது! புலிகள் உள்ளிட்ட தமிழ் ஆயுதப் போராட்டக் குழுக்களும் இதே – 'துரோகி', 'விசுவாசி', 'நாட்டுப் பற்றாளர்' என்கிற பதங்களினூடாகவே தமது 'அரசியலை'யும் செய்து வந்தனர் என்பதும் இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

ஆக, விளையாட்டு விடயம் - 'வினை'யாகி விடக்கூடாது!

தப்பித் தவறி, இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் இங்குள்ளோருக்கு 'சிங்கள நாட்டுப் பற்றாளர்களால்' நடக்கக் கூடாதவை எவையும் நடந்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது – 'துள்ளியோடி வந்து இந்தியா துயர் துடைக்கும்' என்று உங்களில் யாரேனும் இன்னும் நம்புகின்றீர்களா? (அப்படியான அனர்த்தங்களும் இம்முறை உலகக்கிண்ண இறுதிப்போட்டி வெற்றிக் கொண்டாட்டத்தில் சில இடங்களில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது).

தமிழ் மக்களுக்காக 'முள்ளிவாய்க்காலில்' நீளாத விரல்களா – இனி இங்கு நீண்டு விடப் போகிறது?!
•   


  Comments - 0

 • alavudeen Thursday, 14 April 2011 06:12 PM

  மதத்தாலும் இனத்தாலும் பிரிந்து ஒரு ஊரு விட்டு இன்னொரு ஊருக்கு போகமுடியாத காலம் பொய் இன்று மக்கள் நலமாக வாழுகிறார்கள். இந்த நேரத்தில் இது தேவையா? யாரு யாரை ஆதரித்தாலும் தாய் நாடுதான் முக்கியம் மேலே மொஹம்மத் ரிஸ்வி சொன்னது போல வெளிநாடுகளுக்கு போகவும் விசா பெறவும் பாஸ்போர்ட் பெறவும் இலங்கை எனது தாய் நாடு மற்றதுக்கெல்லாம் அது சிங்கள நாடா? என்ன நியாயம் இது? அனைவரும் இலங்கையர் அவ்வளவுதான்.

  Reply : 0       0

  செந்தூரன் Wednesday, 20 April 2011 07:43 PM

  உங்களது தாய்நாட்டுப் பற்று வரவேற்கத்தக்கது.
  அத்துடன்,பெரும்பான்மைக்கு விருபமில்லாததால்,விளையாட்டில் கூட எங்கள் விருப்பத்தை வெளியே சொல்லாது அடிபணிவதே ராஜதந்திரம்/நடைமுறைச்சாத்தியம் என்கிற போதனையும் பல்வேறு இடங்களில் பல்வேறு நபர்களால் கூறப்பட்டு வந்துள்ளது.
  டக்ளஸ் அவர்களின் தனது சொந்த சின்னத்தில் கூட போட்டி போட முடியாத ”நடைமுறைச்சாத்திய” அரசியலையே நினைவு படுத்துகிறது.
  அம்பிகா அமராவதி காதல் தோற்றுவிட்டது என்பதனால் இங்கு ஒருவரும் நடைமுறைச் சாத்தியமாகா காதல் செய்யாதீர் என்று கூறுவதில்லை!!!

  Reply : 0       0

  senthil Thursday, 21 April 2011 12:25 AM

  வேறு வேலை இருத்தல் பார்க்கவும். பேசி பேசி நாட்டை கெடுத்தது போதாதா . இனியாவது பிவினைவதம் பேசாமல் தங்களது வேலையே பார்க்கலாமே .. நீயும் தமிழன் நானும் தமிழன் . உனக்கு என்ன அக்கறை இருக்கிறதோ உரிமை இந்த நாட்டில் இருக்கிறதோ அது எனக்கும் இருக்கிறது தயவு செய்து .. விளையாட்டை அரசியல் ஆக்காதீர்கள் ...

  Reply : 0       0

  KoKulan Thursday, 19 May 2011 01:27 AM

  kirikkadddilum arasiyal seivathu mikavum mosamana vidayam. emmai poruthavarayil emathu thamil veerarkal kirikkaddil shathippathu kuraivu shathitha veerarkal aniyil idam perukirarkal utharanamaka murali, arnold, ponrorai kurippidalam melum niraya muslim veerarkal idam pidithu irukkinranar. athai viduthu nam arsiyal pesuvathu sariyillai.

  Reply : 0       0

  செந்தூரன் Saturday, 23 April 2011 12:05 PM

  நல்லது செந்தில்,உங்களுக்கும் எனக்கும் ஒரே உரிமை நாட்டில் இருக்கிறது என்பது உண்மை. அது சம உரிமையா என்பது தான் கேள்வி.விளையாட்டின் வெற்றியை ராணுவத்திற்கு அர்ப்பணிப்பதாகக் கூறுதனால் , விளையாட்டு வீரர்களையும் “இந்த மக்களையும்” ஊக்குவிக்க இரத்தப்பலிக்களம் முள்ளிவாய்க்காலில் வீடியோப் பாடல் எடுத்து “விளையாட்டை ஊக்குவிப்ப்பதனால், மன்னிக்கவும், ,விளையாட்டை விளையாட்டாகப் பார்க்கும் ”அந்த உயர்ந்த பக்குவம்” எனக்கு இல்லை தோழரே. மனநோயாகக்கூட இருக்கலாம்.

  Reply : 0       0

  Abu HK Sunday, 24 April 2011 08:34 PM

  விளையாட்டு ஒரு கருவி. அது தமிழனாகவோ, முஸ்லிமாகவோ அல்லது தேசபக்தியுடையவனகவோ மாறுவது மனிதர்களை பொருத்தது... ஆனால் It is an indirect business...

  Reply : 0       0

  thiruchenduran Monday, 25 April 2011 12:32 AM

  இலங்கை என்பது ஒரு நாடு. அது நமக்கு நாடாக அறிமுகப்படுத்தப்பட்டது ஆங்கிலேயரால். (தற்போது உள்ள எல்லைகள் அவர்களால் நிர்ணயிக்கப்பட்டது)

  இலங்கையை இந்தியாவுடன் இணைத்து தந்து விட்டு சென்றிருந்தால் தாய் நாடென்று எதை அழைப்பீர்கள்?

  cricket போட்டிகள் நாடுகளுக்கு இடையிலான யுத்தமாக கருதாமல் அணிகளுக்கு இடையிலான pottiyaakave karutha vendum.

  Reply : 0       0

  செந்தூரன் Monday, 25 April 2011 01:07 AM

  ”அபு”வினது கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.அது தனி மனிதர்களைப் பொறுத்த விடயம்.ஆனால், சிலர் { முற்போக்கு வாதிகள்/ஜனநாயக வாதிகள்/ நடைமுறையாகச் சிந்திப்பவர்கள் என தம்மை அழைத்துக்கொள்ளும் சிலரும் சிறிலங்கா அரசியலாளர்களும்} இந்த விளையாட்டைப் பாவித்து தமது அரசியல் நோக்கை {ஒரே தேசம் ஒரே நாடு}புகுத்த முயல்வது தான் இங்கு பிரச்சினையை தோற்றுவித்தது.விளையாட்டில் இதே அணிச்சார்பு நிலை 25 வருடங்களுக்கு மேலாக எதுவித பிரச்சினையோ இவ்வாறான அறிவுரைக்கட்டுரைகளோ இன்றி இருந்து வந்தது.ஆனால் கடந்த 2 வருடங்களாக மட்டும்......

  Reply : 0       0

  mujahid Wednesday, 27 April 2011 05:24 PM

  இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு தமிழ் வீரரும் விளையாடவில்லை. ஆனால் இலங்கை அணியில் முரளி தரன் இருந்தார் ... ஏன் தமிழர்கள் இந்தியாவுக்கு ஆதரவு ?

  Reply : 0       0

  Mohd Rizvi Qatar Wednesday, 13 April 2011 05:03 PM

  முதலில் நாம் ஒன்றை சிந்திக்க வேண்டும் ஒரு தமிழரோ முஸ்லிமோ அல்லது சிங்களவரோ அவர் இந்தியாவுக்கோ அல்லது பாகிஸ்தானுக்கோ செல்வதானால் அவருடைய பாஸ்போட் வீசா இல்லாமல் போக முடிமா? எனவே எவ்வாறு நாம் எம்மை பெற்ற தாய்க்கு முதலில் மரியாதையும் கண்ணியமும் கொடுக்கிறோமோ அந்தளவு எமது தாய் நாட்டுக்கும் மரியாதையும் கண்ணியமும் கொடுக்க வேண்டும். எமது நாட்டில் கடந்த காலங்களில் நடந்தவையும் நிகழ்காலத்தில் நடந்து கொண்டிருப்பவையும் முழுக்க முழுக்க அரசியல் வாதிகளே காரணம். விளையாட்டு வேறு நாட்டு பற்று வேறு...

  Reply : 0       0

  joji Thursday, 28 April 2011 05:25 PM

  இலங்கை முஸ்லிம், தமிழ் மக்கள் தமது pillaigalai paakisthan அல்லது indhiya naaduhalukku விளையாட வைக்க முடியுமா , வெற்றி அல்லது தோல்வி தாய் naatirke .........

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .