2021 செப்டெம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை

நிகழ்ச்சிகளை முன்னெடுக்கும் போது பாதுகாப்பு ஏற்பாடுகளை பின்பற்றுமாறு வேண்டுகோள்

S.Sekar   / 2021 ஜூலை 13 , பி.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் கொவிட்-19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் போது பின்பற்றப்பட வேண்டிய பரிபூரண கொவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் பாதுகாப்பு வழிகாட்டல்களை நிகழ்வு முகாமைத்துவ சம்மேளனம் (EMA) வெளியிட்டுள்ளதுடன், சகல துறைசார் பங்காளர்களையும் இந்த விதிமுறைகளை கடுமையாக பின்பற்றுமாறும் கோரியுள்ளது.

தொடர்ச்சியாக 14 மாதங்களாக இந்தத் துறை மூடப்பட்டுள்ள நிலையில், பெருமளவு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து, தற்போது மீள ஆரம்பிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் ஏற்பாடு செய்யப்படும் சகல நிகழ்வுகளும் உரிய பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்ற இடம்பெறுவதை உறுதி செய்யும் வகையில் குறிப்புகள் EMA இன் கையேட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பின்பற்றுவதனூடாக, எதிர்காலத்தில் இந்தத் துறையில் முடக்கல்கள் இடம்பெறுவதை தவிர்த்துக் கொள்ள முடியும்.

நிகழ்வு முகாமைத்துவ நிறுவனங்கள், டிஜிட்டல் புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் திருமண திட்டமிடும் நிறுவனங்கள், திருமண திட்டமிடுவோர், சாதனங்கள் வாடகைக்கு வழங்கும் நிறுவனங்கள் (ஒலி கட்டமைப்புகள், ஒளியூட்டல் கட்டமைப்புகள், LED விளக்குகள் போன்றன) மேடை மற்றும் செட் வடிவமைப்புகள், தளபாடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வாடகைக்கு வழங்கும் நிறுவனங்கள் மற்றும் அமைவிடங்களுக்கான டிஜிட்டல் ஆக்கபூர்வ நிறுவனங்கள், மலர்சாலைகள், இசைக் கலைஞர்கள், தச்சர்கள், நிகழ்வு உதவிச் சேவைகள், மகிழ்விப்போர், நாட்டியக் கலைஞர்கள், கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள், ஏற்பாட்டாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் துறைசார் பல தரப்பினரை பிரதிநிதித்துவப்படுத்தி EMA செயற்படுகின்றது. தேசிய பொருளாதாரத்துக்கு மொத்தமாக 30 பில்லியன் ரூபாய்க்கு அதிகமான தொகையை இந்தத் துறை பங்களிப்பு செய்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

EMA தலைவர் ரொஷான் விஜேரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “தொடர்ச்சியாக பல மாதங்களாக எமது அங்கத்தவர்களுக்கு வருமானமீட்டக்கூடிய வழிமுறைகள் முடக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் அவர்களுக்கு இயங்குவதற்கான அனுமதியை வழங்கியுள்ளமை தொடர்பில் அரசாங்கத்துக்கு நாம் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கான அனுமதியை நாம் வரவேற்கும் அதேவேளை, முறையான பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி இவை முன்னெடுக்கப்படுகின்றமையை உறுதி செய்ய வேண்டும், அதனூடாக நிகழ்வுகளில் கொவிட்-19 தொற்றுப் பரவலைத் தவிர்க்கக்கூடியதாக இருக்கும்.” என்றார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், “நிகழ்வுகள் முன்னர் அனுமதிக்கப்பட்ட போது, இந்த பாதுகாப்பு பரிந்துரைகள் பின்பற்றப்படாமையை கண்டதையிட்டு நாம் மிகவும் அதிருப்தியடைகின்றோம். அவ்வாறான கவனயீனமான செயற்பாடுகள் எதிர்காலத்திலும் தொடருமாயின், கொவிட்-19 தொற்றாளர்கள் பதிவாகும் எண்ணிக்கை அதிகரித்து, மற்றுமொரு முடக்க நிலைக்கு முகங்கொடுக்க நேரிடும். அது எமது துறையின் நிலைத்திருப்பை முற்றாக நிரந்தரமாக அழித்துவிடும். இந்தத் துறையில் பணியாற்றுவோர் மற்றும் அவர்களின் குடும்பத்தாரின் நலன் கருதி இது நிகழ்வதை அனுமதிக்க முடியாது. எனவே துறைசார்ந்த பங்காளர்கள் அனைவரும் இந்த பரிந்துரைகளை பின்பற்றுமாறு நாம் அழைப்பதுடன், எவ்விதமான தவிர்ப்புகளையும் மேற்கொள்ள வேண்டாமெனவும் கோருகின்றோம்.” என்றார்.

“உட்கட்டமைப்பு, சாதனங்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்திக்காக நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் பல நிறுவனங்கள் பெருவாரியான முதலீடுகளை மேற்கொண்டுள்ளன. சாதாரணமாக வியாபாரமொன்றுக்கு தலா ரூ. 1.0 மில்லியன் முதல் ரூ. 800 மில்லியன் வரையில் அமைந்துள்ளது. இவை தற்போது மூடப்பட வேண்டிய ஆபத்தான நிலையை எதிர்கொண்டுள்ளன. சம்பளம் வழங்குவதற்கும், நிதிக் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன. உதவிகளின்றி, திவாலாகும் நிலைக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையை எதிர்கொண்டுள்ளன. இதன் காரணமாக சுமார் 130,000 நேரடி மற்றும் 600,000 மறைமுக தொழில் வாய்ப்புகள் பாதிக்கப்படும் என்பதுடன், அவற்றில் தங்கியிருக்கும் குடும்பங்கள் மற்றும் மக்களையும் பாதிக்கும்.” என  EMA உப தலைவர் சஜித் கொடிகார தெரிவித்தார்.

வியாபார சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை செயற்பாடுகளுக்கு நிகழ்வுகள் மிகவும் அத்தியாவசியமானவை – உயர்ந்தளவு கூட்டாண்மை நிகழ்வுகள் என்பது ஆரோக்கியமான பொருளாதாரத்துடன் தொடர்புபட்டவையாக அமைந்துள்ளன.

EMA பொருளாளர் நிஷான் வாசலதந்திரி கருத்துத் தெரிவிக்கையில், “MICE மற்றும் நிகழ்வுகளின் அமைவிடசார் சுற்றுலா சேவைகளுக்காக கவனத்தில் கொள்ளப்படும் நாடாக இலங்கையை திகழச் செய்வதில் இந்தத் துறை முக்கிய பங்காற்றுகின்றது. விஞ்ஞான ரீதியான பொறிமுறையினூடாக, சுகாதார நெருக்கடி நிலையை நாம் கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்து, இந்தத் துறையை நிலைபேறான வகையில் முன்நோக்கி கொண்டு செல்வதற்கு பணியாற்றக்கூடியதாக இருக்கும்.” என்றார்.

EMA கையேட்டில் “பாதுகாப்பான நிகழ்வு தூதுவர்கள்” நியமிப்பது தொடர்பிலும் பிரேரிக்கப்பட்டுள்ளதுடன், வழிகாட்டல்களை பின்பற்றாமை தொடர்பில் அறிக்கையிடும் பணிகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தி, இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்க சம்மேளனம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

EMA சட்ட ஆலோசகர் ஜெரி ஜயசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “பொது மக்களுக்கு துரித கதியில் தடுப்பூசிகளை வழங்கும் அரசாங்கத்தின் பணியை பாராட்டி நாம் வரவேற்பதுடன், இந்தத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்க நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கோருகின்றோம். மீட்சியில் அர்த்தமுள்ள வாய்ப்பை கொண்டிருப்பதற்கு, இயலுமானவரை துரிதமாக 60% தடுப்பூசி வழங்கலை பூர்த்தி செய்ய வேண்டும்.” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .