2021 ஒக்டோபர் 22, வெள்ளிக்கிழமை

கொரோனா வைரஸ் தாக்கமும் தொழிற்றுறைகளுக்கு மூடுவிழாவும்

அனுதினன் சுதந்திரநாதன்   / 2020 ஜூன் 29 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸின் தாக்க அளவானது, இலங்கையில் குறைவாக உள்ளநிலையில், இறுக்கமான கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு, முழுமையாக இயங்குவதற்கான செயற்பாடுகளை, இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.  

மார்ச் மாதம் 15ஆம் திகதி முழுமையாக முடக்கப்பட்ட இலங்கையின் தொழிற்றுறையானது, ஜூன் 15ஆம் திகதி முதல், முழுமையாகச் செயற்பட ஆரம்பித்து இருக்கிறது. ஆனால், கடந்த வாரங்களில் வீதிகளில் பயணிக்கின்ற நீங்கள் வீதிக்கொரு கடை மூடப்பட்டு இருப்பதையும் அவை மீளத் திறக்கப்பட வாய்ப்பில்லை என்பதையும் அறிந்திருப்பீர்கள்.

நீங்கள் வாங்குகின்ற பொருள்களில், சில வர்த்தகக் குறியீடு கொண்ட பொருள்கள், காணாமல் போயிருப்பதை அவதானித்து இருப்பீர்கள்.

இப்படியாக, நமது அன்றாட வாழ்விலேயே, இப்படியாகக் கண்ணுக்குத் தெரிந்த தொழிற்றுறைப் பாதிப்புகளைப் பார்க்கின்ற நாம், நமக்குத் தெரியாமல் நடக்கின்ற தொழிற்றுறைப் பாதிப்புகள் தொடர்பிலும், அவற்றிலிருந்து வணிகங்கள் எவ்வாறு விடுபட்டுக்கொள்ள முடியும் என்பதையும் அறிவது, மிக முக்கியமானதாக இருக்கிறது.  

ஜூன் 15ஆம் திகதிக்குப் பிறகு, நாடு மீண்டும் வழமைக்குத் திரும்பி இருந்தாலும், கொரோனா வைரஸின் அச்சம், இன்னும் முழுமையாக நீங்கிவிடாத சூழ்நிலையே காணப்படுகிறது. இதனால், நிதி ரீதியான பிரச்சினைகளைத் தனிநபரோ, நிறுவனங்கள் மட்டுமல்லாமல் முழு நாடுமே எதிர்நோக்கி உள்ளது.

உலக வங்கியின் கணிப்பின்படி, இந்தக் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக, உலக பொருளாதாரம் இன்னும் மோசமான நிலைக்குச் செல்லுமென கணிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், இந்த நிலையிலிருந்து மீள்வதற்கு, 2022ஆம் ஆண்டு கூட ஆகலாம் எனக் கணிப்பிட்டு இருக்கிறார்கள்.

எனவே, எதிர்வரும் காலமானது, நமக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகுக்கும் சவாலான ஒன்றாகும். எனவே, இத்தகைய நிலைக்கு, எம்மையும்  தயார்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.  

அப்படியாயின், குறுங்காலம், நடுத்தரகாலம் ஆகியவற்றின் அடிப்படைகளின் பிரகாரம், வணிகங்கள் தங்களை எப்படித் தயார்படுத்திக்கொண்டு, இந்த இடரான காலத்தில், தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியுமென்பதைப் பார்க்க வேண்டும்.

அதிலும், குறிப்பாகப் புதிதாகத் தொடங்கப்பட்ட சிறியதும் நடுத்தரமானதுமான வணிகங்கள் என அழைக்கப்படும் Small & Medium Enterprises நிறுவனங்களின் நிலைமையே மிக அதிகமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாக இருக்கின்றன.

இவை, தற்போது சமூகப் பொறுப்புடன் செயற்பட்டு, தங்கள் தொழிலாளர்களுக்கு நன்மை செய்யவேண்டி இருப்பதுடன், தம்மையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

காரணம், இந்தப் பொருளாதார நெருக்கடிநிலை முடிவுக்கு வருகின்றபோது, யாரெல்லாம் தக்கனபிழைத்து இருக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் மிகையான சந்தை வாய்ப்புகள் கிடைப்பதுடன், மிகப்பாரிய வளர்ச்சியையும் காண முடியும். ஆனால், அதற்கு அவர்கள் தக்கனபிழைத்து இருப்பது, மிகமிக அவசியமாகும். 

புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளல்   

இந்தக் கொரோனா வைரஸ் காலமானது, வணிகங்களுக்குப் பாதகமாக அமைந்துள்ளபோதிலும், புதிய வணிக வாய்ப்புகளை ஏற்படுத்தத் தவறவில்லை.

எனவே, சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு இருக்கக்கூடிய, மிக இலகுவாக இசைவாக்கம் அடையக்கூடிய பலத்தைக் கொண்டு, தங்களுடைய வணிகத்தை மாற்றி அமைப்பதன் மூலம் அல்லது, தற்காலிகமாக உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் வணிகங்கள், தங்களுடைய இருப்பை உறுதிசெய்துகொள்ள முடியும்.

வணிகம் ஒன்று, தனித்துத் தன்னுடைய இருப்பை உறுதிசெய்து கொள்ளுகின்றபோது, அதில் தங்கியிருக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படுவதை, நாம் மறந்துவிடக்கூடாது.  

உதாரணமாக, இந்தக் கொரோனா வைரஸ் காலத்தில், சுகாதாரம், கல்வி, தொழில்நுட்பம், விவசாயம் ஆகிய துறைகள் சார்ந்து, அதிகளவிலான வாய்ப்புகளை உருவாகி இருக்கிறது.

எனவே, சிறிய, நடுத்தர வணிகங்கள், இந்தத் துறைகளில், ஏதேனுமொரு சேவையை, உற்பத்தியைச் செய்ய முடியுமானதாக இருப்பின், தங்களைக் குறுகியதும் நடுத்தரமான காலத்துக்குத் தற்பாதுகாத்துக்கொள்ள முடியும். 

நிதியியல் தேவைகளைப் பூர்த்திசெய்ய முயற்சித்தல்  

தற்போதைய நிலையில், வணிகங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரும் பிரச்சினையாக, நிதியியல் சார்ந்த தேவைகள் இருக்கின்றன. குறிப்பாக, நாளாந்த செயற்பாடுகளை மேற்கொள்ளவே, வணிகங்களுக்குப் போதுமான நிதி இல்லாத நிலையில், வங்கிகளிலும் நிதி நிறுவனங்களிலும் தங்கியிருக்க வேண்டியதாக இருக்கிறது. வருமானம் என்கிற ஒன்று இல்லாததன் விளைவாக, இந்த மோசமான நிலையை, வணிகங்கள் எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.  

தற்போதைய நிலையில், இலங்கை மத்திய வங்கி, மிகப்பாரிய அளவிலான நிதியை, கடந்த மூன்று, நான்கு மாதங்களில், வணிக வங்கிகளின் மூலமாக, வணிகங்களுக்கு வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் வெளியான தரவுகளின் பிரகாரம், இதற்காகச் சுமார் 120 பில்லியன் இலங்கை ரூபாயை அச்சடித்து பணப்புழக்கத்துக்கு வழங்கி இருக்கிறது. அதுமட்டுமல்லாது, சுமார் 120 பில்லியன் ரூபாயை நிதி நெருக்கடியில் உள்ள சுமார் 14,000 வணிகங்களுக்கு வழங்க முடிவு செய்த்திருக்கிறது.

இலங்கை தொழில் திணைக்களத்தில், இதுவரை 86,000 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  அதில் 10%க்கும் அதிகமான நிறுவனங்களுக்கே, இந்த உதவி வழங்கப்பட இருக்கிறது. அப்படியாயின், உங்களின் வணிகத்துக்கு, இத்தகைய நிதித் தேவைகளைப் பெற்றுக்கொள்ள, என்ன செய்ய வேண்டுமென்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

உண்மையில், நிதித் தேவைகளைச் சரிவர மக்களுக்குக் கொண்டுசென்று சேர்க்கவேண்டிய அரச பொறிமுறையில், மிகப்பெரும் குறைபாடுகள் இருக்கின்றன.  

பெரும்பாலான சமயங்களில், இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் வணிகங்களுக்கு, இத்தகைய நிதி சென்றடைவதில்லை.

ஆனால், விமர்சனங்களைத் தாண்டி, தங்களுடைய வணிகங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும் தற்காத்துக் கொள்ளவும், முயற்சியாளர்கள் இன்னமும் விரைவாகச் செயற்பட வேண்டியது அவசியமாகிறது. 

அரசாங்கத்தின் உதவிகள் வருமெனக் காத்திருப்பது, ‘இலவு காத்த கிளியின் கதை’ ஆகிவிடும். அதனால், வணிக வங்கிகளின் மூலமாக, உங்களுடைய நிதியியல் தேவைகளைப் பூர்த்தி செய்ய முயற்சிக்க வேண்டும்.

தற்போது, இலங்கை வங்கி உட்பட, அரச வங்கிகள் வழங்கும் ஒற்றை இலக்க அடிப்படையிலான வட்டி வீதத்திலான கடன்களைப் பெறவும் என்ன செய்ய வேண்டுமென்பதை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

இதன்மூலமாகவே வணிகங்கள், தம்முடைய வணிக முயற்சியை வெற்றிகரமாகவும் மிக சிறப்பாகவும், இந்த இடர் காலத்தில் தக்க வைத்துக்கொண்டு செயற்பட முடியும். 

தொழிலார்களின் நலனில் சமூக அக்கறையுடன் செயற்படல் 

வணிகங்களின் நாளைய நாள் நிச்சயமற்றதாக இருக்கின்றபோது, அந்த வணிகத்தைச் சார்ந்ததாக இருக்கும் தொழிலாளர் நிலை, எப்படியானது எனச் சிந்தித்துப் பார்த்தல் வேண்டும். 

ஒருவேளை தங்களுடைய தொழிலை இழந்துவிட்டால், அடுத்து தொழிற்றுறை புதிய தொழிலாளர்களை உள்வாங்கிக்கொள்ள தயாராகாத நிலையில், அந்தத் தொழிலாளரின் எதிர்காலம், என்ன ஆகுமென்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.  

இதனால்தான், இலங்கை தொழில் திணைக்களம், தான் நடத்திய ஆய்வுகளின் பிரகாரம், வணிகங்கள் தொழிலாளர்களைச் சமூக அக்கறையுடன் தக்கவைத்து கொள்ளவும் மாற்று பொறிமுறைகளைக் கையாளவும் பரிந்துரை செய்கிறது.

உதாரணமாக, கொரோனா வைரஸ் காலத்தில், ஒரு தொழிலாளியிடம் இருந்து 100%மான பங்களிப்பைப் பெறமுடியாதபோதும், அவருக்கான ஊதியத்தை, நிறுவனம் வழங்க வேண்டியதாக அமைந்திருக்கும்.  

இதனால், குறித்த காலத்துக்குப் பின்னர், குறித்த வணிக நிறுவனம் அந்தத் தொழிலாளியைப் பணிநீக்கம் செய்ய முடிவெடுத்தாலும், ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இத்தகைய சந்தர்ப்பங்களில், குறித்த தொழிலாளியைப் பணிநீக்கம் செய்வதைவிட, அவர்கள் தொழிற்றுறைக்குப் பங்களிப்புச் செய்யாத காலப்பகுதியை, தற்போது வணிகம் இயங்கும் சூழ்நிலையில், எப்படிப் பெற்றுக்கொள்ள முடியுமென்பதைக் கவனத்தில் கொண்டு, செயற்பட வேண்டியது அவசியமாகிறது.

இதனூடாக, தொழிலாளரின் தொழில்களும் பாதுகாக்கப்படுவதுடன், வணிகத்தின் முன்னேற்றமும் உறுதி செய்யப்படுகிறது என,  தொழில் திணைக்களம் பரிந்துரை செய்கிறது.  

இதுபோல, வணிகங்கள் தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்வதை விட, மிகப் பொருத்தமான முறையில், யாருமே பாதிக்கப்படாத வகையில், சம்பளக் குறைப்பையோ, ஊழியர்கள் பகுதி நேரமாகத் தங்களுடைய ஊழிய இழப்பை ஈடு செய்வதற்கான வழிவகைகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதும்  அவசியமாகிறது.  

இத்தகைய நடவடிக்கைகளின் மூலமாக, வணிகங்கள் தங்களுடைய இருப்பை உறுதிசெய்து கொள்வதுடன், சமூகப் பொறுப்புடன் தான் சார்ந்திருக்கும் ஊழியர்களின் தொழில்நிலையையும் உறுதி செய்ய முடியும்.  

போட்டித் தன்மைமிக்க இந்தச் சூழலில், புதிய வாய்ப்புகள், நிதியியல் தேவைகள், தொழிலாளர் நலனில் சமநிலைத் தன்மை ஆகியவற்றைக் கொண்டிருப்பது மிகப்பெரும் சவாலான ஒன்றாகும்.

ஆனால், அந்தச் சவாலைச் சரிவர நிறைவேற்றுவதன் மூலமாகவே, வணிக ரீதியிலும் சரி, சமூக ரீதியிலும் சரி, வணிகங்கள் தக்கனபிழைக்கவும் வெற்றியைப் பெறவும் முடியும்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X