2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

விசாரணையாளர்களை தவறாக வழிநடத்தினாரா பிளின்?

Editorial   / 2017 மே 23 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது பாதுகாப்பு அனுமதியை, கடந்தாண்டு ஆரம்பத்தில் மீளப் புதுப்பிக்கும்போது, ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரலான மைக்கல் பிளின், தனது வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்து, பென்டகன் விசாரணையாளர்களை தவறாக வழிநடத்தியதாக, பிரதிநிதிகள் சபையின் வழிநடத்தல், அரசாங்க சீர்திருத்தக் குழுக்களின் உறுப்பினரான, ஜனநாயகக் கட்சியின் எலிஜாஹ் கம்மிங்ஸ், நேற்று  (22) வெளியிட்ட ஆவணமொன்றின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.   

தனது அனைத்து வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்களும், தனிப்பட்ட பிரஜையாக, ஐக்கிய அமெரிக்க நிறுவனங்களினாலேயே நிதியளிக்கப்பட்டதாக, பாதுகாப்பு அனுமதியை மீளப்புதுப்பிக்க விசாரணை செய்யப்படும்போது பிளின் தெரிவித்ததாக, பாதுகாப்பு அனுமதி வழங்கும் விசாரணையாளர்களின் கடந்தாண்டு மார்ச் 14ஆம் திகதி, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

இந்நிலையில், 2015ஆம் ஆண்டு டிசெம்பரில், ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்ட பிளின், இரவுணவொன்றில் பங்கேற்றதோடு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு அருகில் அமர்ந்திருந்தார். பிளினின் சுற்றுப் பயணத்துக்கான நிதியானது, ரஷ்யா டுடேயினாலேயே அளிக்கப்பட்டிருந்ததாக, பிரதிநிதிகள் சபையினால் முன்னர் வெளியிடப்பட்ட ஆவணங்களின் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. ரஷ்யா டுடேயானது, ரஷ்ய அரசின் பிரசாரக் கை என ஐக்கிய அமெரிக்க அதிகாரிகளினால் கருதப்படுகிறது.   

இந்த சந்தர்ப்பத்தில், மேற்படி விடயத்தின் மூலம், பாதுகாப்பு அனுமதியை எவ்வாறு பிளின் பெற்றார், ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பாதுகாப்பு ஆலோசகராக, பிளின் எவ்வாறு பணிக்கமர்த்தப்பட்டார் என்ற சர்ச்சைகளை அதிகரித்துள்ளது.   

இந்நிலையில், கடந்தாண்டு ஜனாதிபதித் தேர்தலில் இடம்பெற்றிருக்கக் கூடிய ரஷ்யத் தலையீடு குறித்து செனட்டின் புலனாய்வுச் செயற்குழு விசாரித்து வருகின்ற நிலையில், செனட்டின் புலனாய்வுச் செயற்குழுவின் அழைப்பாணையொன்றை, பிளின், நேற்று முன்தினம் மறுத்துள்ளார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .