2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘ஷஷியின் கடவுச்சீட்டு காணாமல் போகவில்லை’

Thipaan   / 2017 ஜூன் 01 , மு.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா திபான்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மனைவியான ஷசி வீரவன்சவால், நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை என்பன காணமற்போகவில்லை என, கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார, நேற்று (31) அறிவித்தார். 

ஷஷி வீரவன்ச, போலிப் பெயர் மற்றும் போலியான பிறந்த தினத்தைக் கொண்டு இரண்டு அடையாள அட்டைகளை எடுத்துள்ளமை தொடர்பில் குற்றஞ்சாட்டப் -பட்டிருந்ததுடன், அவற்றைக் கொண்டு இராஜதந்திர மற்றும் சாதாரண கடவுச்சீட்டுக்களை பெற்ற குற்றச்சாட்டு தொடர்பில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வழக்குத் தொடரப்பட்டது. 

ரணசிங்ககே ரண்முத்து முதியன்சலாகே ஷேஹசா உதயகாந்தி மற்றும் ரணசிங்ககே ரண்முத்து முதியன்சலாகே ஷிர்ஷா உதயகாந்தி ஆகிய பெயர்களில் இரண்டு கடவுச்சீட்டுகள் பெறப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பில் 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்ட அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். 

இது தொடர்பான வழக்கு, நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டபோது, கடந்த அமர்வில், ஷஷி வீரவன்சவால் சமர்ப்பிக்கப்பட்ட கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை என்பன காணாமற் போனதாக கூறப்பட்டிருந்தாகவும் அவை, நீதிமன்றத்திலுள்ள வழக்குப் பொருட்கள் காப்பகத்தில் இருந்தனவெனவும் நீதவான் அறிவித்தார். 

குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியால் கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை தொடர்பில், நீதிமன்றப் பதிவாளரிடம், வினவப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் எழுத்து மூலம் கோரப்படவில்லை என்றும் குறிப்பிட்ட நீதவான், அவை வழக்குப் பொருட்கள் காப்பகத்தில் இருந்தன என்றும் தற்போது நீதிமன்றப் பதிவாளரிடம் உள்ளன என்றும் அறிவித்தார். 

அத்துடன், பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்ட அதிகாரியால் நீதிமன்றத்துக்கும் நீதிமன்ற ஊழியர்களுக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். 

பின்னர், வழக்கு விசாரணை ஆரம்பமானதுடன், வழக்கின் ஏழாவது சாட்சியாளரான, ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் இந்திக குமார லியனகேவிடம், பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கேள்விகளைக் கேட்டார். 

அதன்போது, வழக்கின் முதலாவது சாட்சியமான குறியீட்டு அட்டையை (அடையாள அட்டையில் மாற்றங்கள் மேற்கொள்ளும் போது, தகவல்களைக் குறிக்கும் அட்டை) சேர்ப்பதற்கு, தாம் ஆட்சேபனை தெரிவிப்பதாகவும் அது நகல் என்றும், ஷஷி வீரவன்ச சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா கோரினார். 

அது, சான்றுப்படுத்தப்பட்ட ஆவணமாக உள்ளதாகவும் அதில் காணப்படும் விடயங்கள் வழக்குக்குத் தேவைப்படுவதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டதையடுத்து, எதிராளியின் சட்டத்தரணியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.  

கடவுச்சீட்டு, அடையாள அட்டை காணாமற்போன விடயம் தொடர்பில், இன்று (நேற்று) சட்டமா அதிபரைச் சந்திக்கவுள்ளதால், வழக்கு விசாரணையை அடுத்த தினத்தில் தொடர அனுமதிக்குமாறு, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கோரியதையடுத்து, வழக்கு விசாரணையை, ஜூன் 22ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X