2022 ஜூலை 06, புதன்கிழமை

‘இலங்கையை முஸ்லிம்கள் கைப்பற்ற வேண்டும்’

Editorial   / 2019 ஜூன் 19 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

“இலங்கையில் இஸ்லாமிய கொடி பறக்கவேண்டும்”, இலங்கை நாட்டை, முஸ்லிம்கள் கைப்பற்றவேண்டும்” என்று, தேசிய தௌஹித் ஜமா அத் அமைப்பின் தலைவரும் தற்கொலைதாரியுமான சஹ்ரான் காசிம் பிரசாரம் செய்து வந்தார் என்றும், இஸ்லாமிய அரசு என்ற அவர் கூறியது, ஐ.எஸ் அமைப்பை​யே என்று தாங்கள் கருதுவதாகவும், சூபி முஸ்லிகளின் அல் ஹஜ் அப்துல் ஜவாத் அலிம் வலியுல்லாஹ் நிதியத்தின் செயலாளர் கே.ஆர்.எம். சஹ்லான், தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார். 

ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு முன்னால், நேற்று (18) சாட்சியமளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், சஹ்ரான் என்பவர், காத்தான்குடியில் அடிப்ப​டைவாதப் பிரச்சினைகளை எழுப்பி வந்தவர் என்று கூறிய அவர், 2001ஆம் ஆண்டு, இஸ்லாம் கல்வி நிறுவனமொன்றில் அரபிய மொழியைக் கல்வி கற்று வந்த அவர், 2005ஆம் ஆண்டு ஏற்பட்ட முரண்பாட்டால், அங்கிருந்து விலக்கப்பட்டார் என்றும் பின்னர், குருநாகல் பகுதியிலுள்ள இஸ்லாமிய கல்வி நிறுவனமொன்றில் கல்வி பயின்று, மீண்டும் காத்தான்குடியிலுள்ள இஸ்லாமிய நிலையமொன்றுடன் இணைந்து பணியாற்றினார் என்றும் கூறினார்.  

2009 - 2010ஆம் ஆண்டு வரையான சில மாதங்களில், சஹ்ரான் ஜப்பான் நாட்டில் இருந்தார் என்றும் மீண்டும் காத்தான்குடிக்கு வந்த அவர், 2011ஆம் ஆண்டு தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பை ஆரம்பித்தார் என்றும்,  இதன்போது, இலங்கையிலுள்ள பிரபல ஆங்கில பத்திரையொன்றுக்கு, அப்போது கிழக்கு ஆளுநராக இருந்த அலவி மௌலானா, “கிழக்கில் ஆயுதக்குழுக்கள் செயற்படுகின்றன” என்று கூறியிருந்தார் என்று, அந்தப் பத்திரிகையின் பிரதியையும் காண்பித்தார்.  

2015ஆம் ஆண்டு, தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பு, காத்தான்குடி பிரதேச செயலத்தின் கீழ், சமூக சேவை நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது என்றும் சஹ்ரான், 2013, 2014, 2015ஆம் ஆண்டுகளில் சூபி முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட ஆரம்பித்தார் என்றும் அந்த முஸ்லிம்களை, முடிந்தவ​ரை கேவலப்படுத்தினார் என்றும் கூறினார். சூபி முஸ்லிம்கள், முஸ்லிம்கள் அல்லர் என்றும் அவர்கள் இஸ்லாம் மதத்திலிருந்து மதம் மாறியவர்கள் என்றும் அவர்களைத் திருமணம் செய்யக் கூடாது என்றும் பிரசாரம் செய்து வந்தார் என்றும் கூறினார். சூபி முஸ்லிம்களுக்கு எதிராக, சுமார் 15 சஞ்சிகைகளை, சஹ்ரான் வெளியிட்டிருந்தார் என்றும் சூபி முஸ்லிம்களின் பள்ளிகளில், வருடத்துக்கு 15 தடவைகள் வழங்கப்படும் அனைத்து இன மக்களுக்கான அன்னதானத்தில், பன்றி இறைச்சியின் கலப்படம் உண்டு என்றும் அதை யாரும் சாப்பிடக் கூடாது என்று அவர் பிரசாரம் செய்ததாகவும் அவர் கூறினார்.  

இதையடுத்தே, 2013, 2014ஆம் ஆண்டு காலப்பகுதியில், சஹ்ரானுக்கு எதிராக 11 முறைப்பாடுகளை, சூபி முஸ்லிம்கள் சார்பில் செய்துள்ளதாகவும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்திலேயே, இது தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார். சஹ்ரானின் சூபி முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடு குறித்து, 2015ஆம் ஆண்டு மேஜர் ஜெனரல் லால் பெரேராவுக்கு தாங்கள் தெரியப்படுத்தியதாகவும் அவர் சஹ்ரானை கண்டித்திருந்த போதிலும், சஹ்ரான், மேஜர் ஜெனரலையும் விமர்சித்து பிரசாரம் செய்தார் என்று அவர் கூறினார்.  

2015ஆம் ஆண்டு, இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவே அவர் செயற்பட்டார் என்றும் 2017ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் ​தேர்தலின் போது, சில அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து, சூபி முஸ்லிம்களுக்கு எதிரான உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டார் என்றும் அவர் கூறினார். சூபிகளின் சமய அனுஷ்டானங்களுக்கு நிதியுதவி, அரசாங்கத்தின் நிதியுதவி போன்ற எதுவும் வழங்கப்படக்கூடாது என்பதே, அந்த ஒப்பந்தத்தில் உள்ளடங்கியிருந்தது எனக் கூறிய அவர், அந்த ஒப்பந்தத்தில், தேசிய ஜனநாயகக் கட்சியின் ஷாபிக், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் எம்.எஃப்.எம். ஷிப்லி பாரூக், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஹிஸ்புல்லாஹ், ஐக்கிய தேசியக் கட்சியின் ஏ.எல்.எம் ரூபி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அப்துல் றஹ்மான் ஆகியோர் கைச்சாத்திட்டிருந்தனர் என்றும் கூறினார். 

2016ஆம் ஆண்டு டிசெம்பர் மாத கிறிஸ்மஸுக்கு முன்னர், கிறிஸ்மஸ் பண்டிகைக் கொண்டாடப்படக் கூடாது எனப் பிரசாரம் செய்து, மட்டக்களப்பிலுள்ள பல தேவாலயங்களின் அருட்தந்தையர்களுக்கு அவர் வழங்கினார் என்றும் அவர் கூறினார்.  

9.12.2016, 2.3.2017, 17.2.2017 ஆகிய மூன்று தினங்களில், சஹ்ரான் தேசப்பற்றுக்கு எதிராக பிரசாரம் செய்ய ஆரம்பித்தார் என்று கூறிய அவர், இதன்போது, முஸ்லிம் அல்லாதோரைக் கொல்ல வேண்டும் என்று, காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் பகிரங்கமாகப் பேசினார் என்றும் கூறினார். அத்தோடு, “தேசப்பற்று என்பது இஸ்லாமிய ஆட்சிக்கு பாதிப்பானது”, “தாய் நாட்டை நேசிப்பவன் முஸ்லிம் அல்ல”, இலங்கை தேசியக் கொடியை ஏற்றுவது, இஸ்லாமிய ஆட்சியைப் பாதிக்கும்”, “இலங்கையில் இஸ்லாமிய கொடி பறக்கவேண்டும்”, இலங்கை நாட்டை, முஸ்லிம்கள் கைப்பற்றவேண்டும்” என்று அவர் பிரசாரம் செய்து வந்தார் என்றும் இதில், இஸ்லாமிய அரசு என்ற அவர் கூறியது, ஐ.எஸ் அமைப்பை​யே என்று தாங்கள் கருதுவதாகவும் கூறினார்.  

இதையடுத்து, 10.03.2017 அன்றே, சஹ்ரான் குழுவினரால், காத்தான்குடியில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது என்றும், சஹ்ரானால், சூபி முஸ்லிம்களின் வீடுகள் உடைக்கப்பட்டு, வாள்வெட்டுகளும் இடம்பெற்றது என்றும் கூறிய அவர், இச்சம்வத்தின் பின்னர், 4 பேர் கைது செய்யப்பட்டனர் என்றும் கூறினார்.  

இந்நிலையில், சஹ்ரானின் இந்தச் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி, பிரதமர், விஜேதாச ராபக்ஷ, சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோருக்கு, தாங்கள் கடிதம் மூலம் தெரியப்படுத்தியதாகவும் எனினும், இது தொடர்பில் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்ற ஒரு பதில் கடிதம் பிரதமர் அலுவலத்தில் இருந்தும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அரசாங்க அதிபர் காரியலாயத்திலிருந்து நான்கு கடிதங்களும் கிடைத்ததாக அவர் மேலும் கூறினார். அத்தோடு, இது குறித்து. 27.03.2017 அன்று, கொழும்புக்கு வந்து, பொலிஸ்மா அதிபருக்கும் முறைப்பாடு செய்ததாக அவர் கூறினார். மேலும், அப்போது, பயங்கரவாத விசாரணைப்பிரிவில் இருந்த நாலக்க டீ சில்வாவுக்கும் இது குறித்து அறியப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.  

எனினும், 10.03.2017 தாக்குதலுக்கு பின்னர், சஹ்ரான் தலைமறைவாகிவிட்டார் எனக் கூறிய அவர், சஹ்ரான் போன்றே, அவரது நண்பர் நியாஸும் செயற்பட்டு வந்தார் என்றும் பின்னர், சாய்ந்தமருது தற்கொலைகுண்டுத் தாக்குதலில் அவர் பலியாகிவிட்டார் என்று தான் அறிந்ததாகவும் அவர் கூறினார். இதேவேளை, சூபி முஸ்லிம்கள், முஸ்லிம்கள் அல்லர் என, அகில இலங்கை ஜமாஇய்யதுல் உலமா சபை தீர்ப்பளித்துவிட்டது என, நியாஸ் பேஸ்புக்கில் பதிவிட்டார் என்றும் இது, 1979ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் திகதி, காத்தான்குடி மெளலவி ஒருவரால், புத்தகமொன்றில் எழுதி வெளியிடப்பட்டிருந்தது என்றும் அவர் கூறினார்.  

இந்தத் தீர்ப்பு, இன்னும் அமுலிலேயே உள்ளது என்றும் அந்தப் புத்தகத்தின் 20ஆவது பக்கத்தில், இஸ்லாத்திலிருந்து வற்புறுத்தல் இன்றி விலகிச்செல்வோர் கொலை செய்யப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்ப்டுள்ளதாக அவர் கூறினார். எனவே, 40 வருடங்களாக, இந்த முறை அமுலிலேயே உள்ளது என்றும் அவர் கூறினார்.  

காத்தான்குடி ​பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி எம்.பி. கஸ்தூரியாராச்சி

2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி, காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக தான் கடமையேற்ற போது, காத்தான்குடி மிகுந்த அமைதியாகவே இருந்து என்று, காத்தான்குடி ​பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி எம்.பி. கஸ்தூரியாராச்சி தெரிவித்தார். 

காத்தான்குடியில், பெற்றோல் குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், சஹ்ரான், றில்வான், ஆமி மொகைதீன் 13 பேருக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது என்றும் எனினும், இந்த மூவரும் கைது செய்யப்படவில்லை என்றும் அவர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கின் பல விசாரணைகளுக்கு அவர்கள் ​ஆஜராகியிருக்கவில்லை என்றும் அவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர் என்றும் தெரிவித்தார்.  

சஹ்ரானுக்கு எதிராக, எந்தவொரு முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை என்று தெரிவித்த அவர், ஆனால், ஒவ்வொரு வெள்ளிகிழமைகளில், ஜும்மா தொழுகை முடிவடைந்த பின்னர், குழு மோதல் ஏற்பட்டு வந்ததாகவும் கூறினார்.  

இந்த மூவருக்கு எதிராக, அப்போது பிடிவிறாந்து எதுவும் பிறப்பிக்கப்பட்டிருக்கவில்லை என்றும் சஹ்ரான் எங்கு இருக்கின்றார் என்பது தொடர்பாக தெரிந்து கொள்ள முடியாது இருந்தது என்றும் கூறிய அவர், கிராம சேவகர் ஊடாக தகவல்களைப் பெற்று தேடியபோதும், அவர் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.  

150 வீடுகளுக்கு, சஹ்ரான் குழுவினர் தீ வைத்த விடயம் தொடர்பாக முறைப்பாடு எதுவுமே கிடைக்கவில்லை என்றும், சஹ்ரான் தப்பிச் சென்ற பின்னர், காத்தான்குடியில் அமைதி நிலவியதாகவும் ​தெரிவித்தார்.  

சஹ்ரான் ஏனைய மதங்களுக்கு எதிராக செயற்படுகின்றார் என்று தெரிவிக்கப்பட்டது என்றும் ஆனால், அவர் பயங்கரவாதி என்று தனக்குத் தெரியாது என்றும் கூறிய பொறுப்பதிகாரி, ஆமி மொகைதீன் என்பவர், இராணுவத்தில் கடமையாற்றி இருந்தார் என்றும் கூறினார்.

பால​முனையில் வீடொன்றில் மோட்டார் சைக்கிள் வெடிப்பு குறித்து சாட்சியமளித்த அவர், விசாரணைகளின் பின்னர், அதுவொரு குண்டுவெடிப்பு என்று அறிந்துகொண்டதாகவும் அந்த குண்டில் எத்தகைய இரசாயனங்கள் கலந்திருந்தது என்பதுத் தொடர்பான பகுப்பாய்வு அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார். இந்த குண்டுவெடிப்பிலும் அந்த 13 பேரே சம்பந்தப்பட்டிருந்தனர் என்றும் மொஹமட் சஹ்ரான் என்பவர், இந்தச் சம்பவத்தின் பின்னர் கைது செய்யப்பட்டார் என்றும் அவர் கூறினார்.  

அத்துடன், பயங்கரவாதம் பற்றி சஹ்ரான் பேசி வருகின்றார் என்று கூறப்பட்டதேத் தவிர, அது பற்றி எந்தவொரு முறைப்பாடும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார் இதன்பின்னர், சுமார் 30 மணித்தியாளங்கள், ஊடகவியலாளர்கள் அனைவரும் தெரிவுக்குழு அறையிலிருந்து வெளியேற்றப்பட்டு, அவரிடம் சாட்சியம் பெறப்பட்டிருந்தது.  

காத்தான்குடி ​பொலிஸ்நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி ஆரியபந்து வெதகெதர 

காத்தான்குடி பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி ஆரியபந்து வெதகெதர சாட்சியமளிக்கையில், 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி முதல் 2017ஆம் ஆண்டு ஜுலை மாதம் 28ஆம் திகதி வரை காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றியதாகவும் இதன்போது, சஹ்ரானின் பயங்கரவாத குழு தொடர்பாக தனக்கு எந்தவொரு முறைப்பாடும் கிடைத்திருக்கவில்லை என்றும் ஆனால், 9 தொடக்கம் 12 இஸ்லாமிய குழுக்கள், காத்தான்குடியில் இயங்கி வந்ததாகவும் கூறினார். இந்த அனைத்து குழுக்களுக்கு இடையிலும் அடிக்கடி கருத்து மோதல்கள் ஏற்படும் என்றும் இதுவே அக்காலத்தில் பெரிய பிரச்சினையாக இருந்தது என்றும் அவர் கூறினார்.  

மரபு ரீதியாக இஸ்லாத்தைக் கடைபிடிப்போர், சஹ்ரானின் கொள்கைகளுக்கு கடுமையான எதிர்ப்பு தெரவித்து வந்தனர் என்றும் பாடசாலை அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் சஹ்ரான் நுழைந்து பிரச்சினை செய்தமை, முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவின் மரபு வழி இஸ்லாம் குறித்தான கூட்டத்தில் பிரச்சினை செய்தமை போன்ற பல கேள்விகளுக்கு, தெரியாது என்றும் ஞாபகம் இல்லை என்றும் பதிலளித்திருந்தார்.  

2017ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது, சஹ்ரான் என்ன செய்தார் என்று வினவப்பட்டபோது, தனக்கு தெரியாது என்றே அவர் பதிலளித்தார். எனினும், தேர்தல் காலங்களில், அங்குள்ள இஸ்லாமிய குழுக்களுடன் பேசி, அரசியல் தலைவர்கள் வாக்குகள் சேகரித்தமை மாத்திரமே தனக்கு தெரியும் என்றும் கூறினார்.  

பொலிஸாரின் அனுமதியுடன், ஒலிபெருக்கிக​ளைப் பயன்படுத்தி, ஏனைய பிரிவுகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தாரா என வினவப்பட்டபோது, ஒலிபெருக்கிகளில் விரிவுரைகள், சொற்பொலிவுகள் பற்றி கூறுவதற்கே அனுமதி வழங்கப்பட்டது என்று அவர் கூறினார்.  

அல்ஹாஜ் கலீல் மௌலவி என்பவர், காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில், சஹ்ரான் பற்றி முறைப்பாடு செய்துள்ளாரா என்று கேட்டபோது, தான் பதவியில் இருந்தபோது, இவ்வாறு முறைப்பாடு கிடைக்கவில்லை என்று கூறினார்.  

தனது மதக்கொள்கை பற்றி பிரசாரம் செய்வதற்கு, சஹ்ரானால் முன்வைக்கப்பட்ட 4 கோரிக்கைக் கடிதங்களை தான் நிராகரித்ததகாகவும் மதப்பிரச்சினை ஏற்படும் என்பதாலேயே தான் அதை நிராகரித்ததாகவும் கூறினார். அத்துடன், சஹ்ரான், பொலிஸாருடன் இணைந்து செயற்பட்டார் என்று, முன்னாள் ஆளுநர் அசாத் சாலி முன்வைத்த குற்றச்சாட்டை இதன்​போது அவர் நிராகரித்தார். அத்துடன், சஹ்ரான் பற்றி தேடுவதற்கு முனைந்த போது, தனக்கு இடமாற்றம் கிடைக்கவில்லை என்றும் சாதாரணமாக மூன்று வருடங்களில் பின்னர் வருடாந்த இடமாற்றமே தனக்கு கிடைத்ததாகவும் அவர் மேலும் கூறினார். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது, சஹ்ரான் என்ன செய்தார் என்பது பற்றி தனக்குத் தெரியாது என்றும் ஆனால், சில அரசியல் குழுக்களுடன் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டிருந்தார் என்றும் கூறினார். ஆமி மொகைதீன் பற்றி சாட்சியமளித்த அவர், இராணுவத்துக்கும் அவருக்கும் என்ன தொடர்பு இருந்தது என்பது பற்றி தனக்கு தெரியாது என்றும் எனினும், அவர், மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக் உடனயே முன்னர் இருந்தார் என்றும்  கூறினார்.   (படப்பிடிப்பு; சமீர விரசேகர)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .