2021 ஓகஸ்ட் 03, செவ்வாய்க்கிழமை

சிற்றியை வீழ்த்தி சம்பியனான செல்சி

Shanmugan Murugavel   / 2021 மே 30 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரில், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி சம்பியனானது.

போர்த்துக்கல்லின் போர்டோவில் இன்று அதிகாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில், இன்னொரு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றியை வீழ்த்தியே செல்சி இரண்டாவது தடவையாக சம்பியனானது.

சக முன்களவீரரான மேஸன் மெளன்ட், சிற்றியின் பின்களவீரர்களுக்கு இடையால் கொடுத்த பந்தைப் பெற்ற செல்சியின் முன்களவீரரான கை ஹவேர்ட்ஸ், சிற்றியின் கோல் காப்பாளர் எடெர்ஸனைத் தாண்டி போட்டியின் 42ஆவது நிமிடத்தில் பெற்ற கோலின் மூலமே 1-0 என்ற கோல் கணக்கில் குறித்த போட்டியை செல்சி வென்றிருந்தது.

இப்போட்டியின் ஆரம்பத்திலேயே மூன்று கோல் பெறும் வாய்ப்புகளை செல்சி உருவாக்கியிருந்தபோதும், செல்சியின் முன்களவீரரான திமோ வேர்னர் ஒன்றை மாறி உதைத்ததுடன், மற்றையதை எடெர்ஸனிடம் நேரடியாக உதைத்ததுடன், மற்றையதை கோல் கம்பத்துக்கு வெளியே செலுத்தியிருந்தார்.

இதேவேளை, மாற்று வீரராகக் களமிறங்கிய செல்சியின் முன்களவீரரான கிறிஸ்டியன் புலிசிச், கை ஹவேர்ட்ஸிடமிருந்து பெற்ற பந்தை கோல் கம்பத்துக்கு வெளியே செலுத்தியிருந்தார்.

இந்நிலையில், போட்டியின் இறுதி நிமிடங்களில் சிற்றியின் முன்களவீரரான றியாட் மஹ்ரேஸ் செலுத்திய உதையொன்றானது கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .