2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: முன்னிலையில் நியூசிலாந்து

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 21 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் நேற்றைய மூன்றாம் நாள் முடிவில் நியூசிலாந்து முன்னிலையில் காணப்படுகின்றது.

நேற்றைய மூன்றாம் நாளை தமது முதலாவது இனிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களுடன் ஆரம்பித்த இந்தியா ஆரம்பத்திலேயே அணித்தலைவர் விராட் கோலியை 44 ஓட்டங்களுடனேயே கைல் ஜேமிஸனிடம் இழந்தது.

தொடர்ந்து வர்ந்த றிஷப் பண்டும் விரைவாகவே ஜேமிஸனிடம் விக்கெட்டைப் பறிகொடுத்து நடையைக் கட்டினார். சிறிது நேரத்தின் பின்னர் அஜின்கியா ரஹானேயும் 49 ஓட்டங்களுடன் நீல் வக்னரிடம் வீழ்ந்தார்.

இதையடுத்து இரவீந்திர ஜடேஜாவும், இரவிச்சந்திரன் அஷ்வினும் இனிங்ஸை நகர்த்திய நிலையில் 22 ஓட்டங்களுடன் டிம் செளதியிடம் அஷ்வின் வீழ்ந்தார். பின்னர் இஷாந்த் ஷர்மா, ஜஸ்பிரிட் பும்ராவும் அடுத்தடுத்து ஜேமிஸனிடம் வீழ்ந்ததோடு, 15 ஓட்டங்களோடு ஜடேஜாவும் ட்ரெண்ட் போல்டிடம் வீழ்ந்தனர்.

அந்தவகையில், தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 217 ஓட்டங்களை இந்தியா பெற்றது. பந்துவீச்சில், ஜேமிஸன் 5, வக்னர் 2, போல்ட் 2, செளதி ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தனர்.

இந்நிலையில், பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய நியூசிலாந்து, டொம் லேதம், டெவோன் கொன்வே மூலம் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றது.

பின்னர் 30 ஓட்டங்களுடன் அஷ்வினிடம் லேதம் வீழ்ந்திருந்தார். பின்னர் கொன்வே, அணித்தலைவர் கேன் வில்லியம்ஸனின் இணைப்பில் இனிங்ஸை நியூசிலாந்து நகர்த்திச் சென்ற நிலையில், 54 ஓட்டங்களுடன் இஷாந்த் ஷர்மாவிடம் கொன்வே வீழ்ந்திருந்தார்.

இந்நிலையில், நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தபோது 2 விக்கெட்டுகளை இழந்து தமது முதலாவது இனிங்ஸில் 101 ஓட்டங்களை நியூசிலாந்து பெற்றுள்ளது. களத்தில், வில்லியம்ஸன் 12, றொஸ் டெய்லர் ஓட்டமெதுவும் பெறாமலுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .