2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஜாக்குலினிடம் 5 மணி நேர விசாரணை

Freelancer   / 2021 ஓகஸ்ட் 31 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


200 கோடி இந்திய ரூபாய்க்கும் அதிகமான பண மோசடி வழக்கை விசாரித்து வரும் இந்தியாவின் நிதிக் குற்ற விசாரணை பிரிவு, இலங்கையில் பிறந்த பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை விசாரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகாரிகள் ஜாக்குலின் பெர்னாண்டஸை ஏறக்குறைய 5 மணி நேரம் விசாரித்து அவரது அறிக்கைகளை பதிவு செய்தனர் என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அகில இந்திய அளவில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்கள், சினிமா பிரபலங்களுடன் நட்பு இருப்பதாக கூறி கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர், தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட பலரை ஏமாற்றி பணம் மோசடி செய்து இருப்பதாக முறைப்பாடுகள் உள்ளன. 

கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுக பிளவுபட்டிருந்தபோது இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக டி.டி.வி. தினகரன் தரப்புக்காக தேர்தல் ஆணையத்துக்கு இலஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி குற்றவியல் பிரிவு, டி.டி.வி.தினகரன், அவருடைய நண்பர் மல்லிகார்ஜுன், தரகர் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரை கைது செய்தனர்.

சுகேஷ் சந்திரசேகர் மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் நெருங்கிய நண்பர்கள் என்பதால் அதிகாரிகள், ஜாக்குலின் பெர்னாண்டஸை விசாரித்துள்ளனர்.

ஜாக்குலின் பெர்னாண்டஸ், சுகேஷ் சந்திரசேகரின் மனைவி லீனா பால் மூலம் சந்திரசேகரை அடையாளம் கண்டதாகவும், சுகேஷ் சந்திரசேகரும் தன்னிடம் பணம் மோசடி செய்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து டெல்லி அமலாக்கத்துறை உயர் அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரித்து பெங்களூருவில் உள்ள சுகேஷ் சந்திரசேகரின் வீடு, சென்னையை அடுத்த கானத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பங்களா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 

இந்த சோதனையில் கணக்கில் வராத 2 கிலோ தங்கம், ரூ.82 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 16 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் அவரது பங்களாவுக்கும் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .