2025 டிசெம்பர் 08, திங்கட்கிழமை

“சின்மயி மன்னிப்பு கேட்க வேண்டும்”

S.Renuka   / 2025 டிசெம்பர் 07 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு படத்தில் பாடிவிட்டு அந்தப் படத்தின் வியாபாரத்தில் இடையூறு செய்வது போல் நடந்து கொண்ட பாடகி சின்மயி, அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இயக்குநர் பேரரசு காட்டமாக தெரிவித்தார்.

கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ரெட் லேபில்’. இதன் கதையினை பொன்.பார்த்திபன் எழுதியிருக்கிறார். லெனின், அஸ்மின், ஆர்.வி.உதயகுமார், முனிஷ்காந்த், தருண், கெவின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதன் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினரும் மற்றும் திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் இயக்குநர் பேரரசு பேசும் போது, “கதாநாயகன் லெனினைப் பார்த்தால் புதியவர் போலத் தெரியவில்லை. அனுபவசாலி போலத் தெரிகிறார். கதாநாயகி அஸ்மினுக்கும் அவருக்கும் உள்ள ஜோடிப் பொருத்தம் நன்றாக உள்ளது. கமல் -ஸ்ரீதேவி , ரஜினி - ஸ்ரீபிரியா போல இந்த லெனின் - அஸ்மின் ஜோடியும் நன்றாக இருக்கிறது. இந்த ஜோடி தொடர்ந்து நடிக்க வேண்டும்.


ஒரு காலத்தில் கதை , கதாசிரியருக்கு முக்கியத்துவம் இருந்தது. கதையை வைத்துக்கொண்டு பிறகுதான் கதாநாயகர்களைத் தேடுவார்கள். ஸ்ரீதர், கே.பாலச்சந்தர், டி.ராஜேந்தர், பாக்யராஜ் போன்ற இயக்குநர்களுக்குப் பிறகு கதை திரைக்கதை வசனம் என்று முழுமையாக அவர்களே பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.

பிறகு கதை என்ன என்பதை விட, யார் கதாநாயகன் என்ற காலம் வந்தது. கதாநாயகர்கள் கதையை முடிவு செய்யும்படி ஆனது. இப்போது கதையை தயாரிப்பாளர் முடிவு செய்வதில்லை. கதாநாயகன் தான் முடிவு செய்வார். ஆனால் இந்தத் தயாரிப்பாளர் கதையைத் தேர்ந்தெடுத்ததற்குப் பாராட்டுகிறேன். அது படத்தின் மீது நம்பிக்கை தரும் ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் இது முறையாக எடுக்கப்பட்ட படமாகத் தோன்றுகிறது.
தயாரிப்பாளருக்குக் கதை பிடித்துவிட்டால் நம்பி ஒப்புக்கொண்ட பிறகு, இயக்குநரைத் தொந்தரவு செய்யக்கூடாது. அது சித்திரவதையாக மாறிவிடும். இயக்குநர் சுதந்திரமாக இருந்தால் தான் அந்தப் படைப்பு சரியாக வரும்.

இந்தப் படத்தில் பாடியுள்ள சின்மயி ஏன் இங்கே வரவில்லை? இயக்குநர் யார் என்று தெரிந்துதான் பாட்டு பாடினாரா? இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டி இருக்கிறது. சின்மயி ஒரு படத்தில் பாடிவிட்டு அந்தப் படத்தின் வியாபாரத்தில் இடையூறு செய்வது போல் அவர் நடந்து கொண்டிருக்கிறார். தெரியாமல் பாடிவிட்டேன் என்கிறார், வருத்தம் தெரிவிக்கிறார். ஒரு படத்தில் பாடல் பாடும் போது என்ன சூழல்? என்ன வரிகள் என்பதைத் தெரிந்து கொண்டு தான் பாட வேண்டும். எல்லாமும் பாடி முடித்த பிறகு வியாபாரத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்துவது போல் நடந்து கொள்ளக் கூடாது.

ஒரு படத்தின் கேப்டன் இயக்குநர் தான். இயக்குநர் யார் என்று தெரியவில்லை என்று சொல்வதெல்லாம் தவறானதாகும். சின்மயி இப்படிச் சொல்வது அந்த இயக்குநருக்கு மட்டும் அவமானம் அல்ல. ஒவ்வொரு இயக்குநருக்கும் அவமானம். அதற்காக சின்மயி மன்னிப்பு கேட்க வேண்டும்.

இன்று ஒரு படம் எடுப்பது என்றால் உயிர் போகிற விஷயமாக இருக்கிறது. எவ்வளவு சிரமப்பட்டு படம் எடுக்கிறார்கள். ஆனால் சுலபமாக இப்படி இடையூறு செய்கிறார்கள். 

எஸ்.ஜானகி, பி.சுசீலா போன்ற பாடகிகள் எவ்வளவு பெரிய பாடகிகள். இந்தத் திரையுலகில் அவர்கள் எல்லாவிதமான பாடல்களையும் பாடினார்கள். அப்போதெல்லாம் இப்படியா நடந்தது?

குறிப்பாக இயக்குநரை, தயாரிப்பாளரை அவமானப்படுத்த யாருக்கும் உரிமை கிடையாது. பாடி முடித்து விமர்சனம் செய்வது, தொந்தரவு தருவது தவறானதாகும்” என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X