நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளில் உள்ள 262 குவாரிகள் தொடர்பில் நடவடிக்கை

2011-02-23 11.50pm


"டித்வா" சூறாவளியைத் தொடர்ந்து நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காணப்படும் 262 குவாரிகளில் (கற்சுரங்கம்) மறு அறிவியல் கணக்கெடுப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் (GSMB) அறிவித்துள்ளது.

அதிக ஆபத்துள்ள இடங்களில் அமைந்துள்ள குவாரிகள் தொடர்பில் கவனம் செலுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் தீபானி வீரகோன், நிலச்சரிவு ஏற்படக்கூடியதாக அடையாளம் காணப்பட்ட குவாரிகளுக்கான உரிமங்கள் உடனடியாக நிறுத்தி வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இதுவரை, மாத்தளை மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள இரண்டு குவாரிகளின் செயற்பாடுகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மதிப்பாய்வு செய்யப்படும் குவாரிகளில் 127 குவாரிகள் கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் உள்ளதுடன், 135 குவாரிகள் கேகாலை மற்றும் இரத்தினபுரியில் அமைந்துள்ளன.

எதிர்காலத்தில் குவாரி நடவடிக்கைகளுக்காக அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் கடுமையான நடைமுறைகளைச் செயல்படுத்தவும், தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் (NBRO) பரிந்துரைகளைப் பின்பற்றுவதை கட்டாயமாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் குவாரி அமைந்துள்ள பகுதிகளில் நிலச்சரிவு தொடர்பான ஆபத்துகளை மேலும் தடுப்பதற்கும் இந்த நடவடிக்கை மிகவும் முக்கியமானது என்று தீபானி வீரகோன் சுட்டிக்காட்டியுள்ளார்.