2011-02-23 11.50pm
கட்டுகஸ்தோட்டை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்ஹின்ன படகொல்லாதெனிய ஜமாலியா முஸ்லிம் வித்தியாலயம் சமீபத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இன்னும் பாடசாலையை ஆய்வு செய்யாததால் பாடசாலையை ஆரம்பிக்க முடியாதுள்ளதாக பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
இப் பாடசாலையில் ஆரம்ப பிரிவு முதல் உயர்தரம் வரை வகுப்புகள் நடைபெறுவதாகவும் 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் ஏனைய பாடசாலைகள் செவ்வாய்க்கிழமை (16) அன்று திறக்கப்பட்டாலும், இப் பாடசாலையை திறக்க முடியாதுள்ளதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மண் சரிவு ஏற்பட்டு சுமார் 20 நாட்கள் ஆகின்ற நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இது தொடர்பாக தெரிவிக்கப்பட்ட போதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குறித்த பாடசாலையில் பல பாதுகாப்பான கட்டிடங்கள் இருப்பதால், கட்டிடங்களை ஆய்வு செய்து பொருத்தமான கட்டிடங்கள் ஒதுக்கப்பட்டால் பாடசாலையை திறக்க முடியும் எனவும் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
பாடசாலையை திறக்கும் வரை மாணவர்களை வேறு பாடசாலைக்கு அனுப்புமாறு கூறப்பட்டாலும் , அருகிலுள்ள பாடசாலைக்கு செல்ல இவ் விடத்தில் இருந்து மூன்று கிலோமீட்டருக்கு அதிகமாக பயணிக்க வேண்டியுள்ளதுடன், 400 மாணவர்கள் ஒரே நேரத்தில் பயணிப்பது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
இது தொடர்பாக, பாடசாலை அதிபர் த ஏ.எம். இக்ராமை தொடர்பு கொண்டபோது, “ திங்கட்கிழமை (15) நடைபெற்ற கூட்டத்தில் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் அதிகாரிகள் பாடசாலையை ஆய்வு செய்து பரிந்துரை வழங்கும் வரை பாடசாலையை திறக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதாகக் கூறினார். அதன்படி, மற்ற பாடசாலைகள் திறக்கப்படும் 16 ஆம் திகதி இப்பாடசாலை திறக்கப்படாது ” என்றும் அவர் கூறினார்.
மொஹொமட் ஆஸிக்
