2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மாத்தளை, சுடுகங்கை ஸ்ரீ ஏழுமுகக் காளியம்மன் முத்தேர் பவனி

Editorial   / 2022 ஓகஸ்ட் 01 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 மாத்தளை, சுடுகங்கை அருள்மிகு ஸ்ரீ ஏழுமுகக் காளியம்மன் திருக்கோவில் ஆடிப்பூர மகோற்சவ முத்தேர் பவனி

கலாவிபூஷணம், தேசபந்து, கௌரவ கலாநிதி

ஜயகுமார் ஷான்,

ஆசிரியர்

 

‘சிவபூமி’ என்று திருமூலரால் போற்றப்பட்டதும், பஞ்ச ஈஸ்வரங்கள் அமைந்த பக்திபிரவாகம் பெருக்கெடுத்து ஓடுவதுமான இலங்காபுரியின் மத்திய ஸ்தானத்தில் சைவமும் தமிழும் இரு கண்களாய் போற்றுவதுமான மாத்தனை மாநகரின், சுடுகங்கை எனும் இயற்கை எழில்பொங்கும் நதிக்கரையில் அமர்ந்து, நாடிவரும் பக்தர்களுக்கு வேண்டும்வரம் அளிக்கும் ஸப்தலோக நாயகி அருள்மிகு ஸ்ரீ ஏழுமுகக் காளியம்மனுக்கு மங்களகரமான ஸ்வஸ்தி ஸ்ரீ சுபகிருது வருடம் ஆடி  மாதம் இரண்டாம் நாள் (2022.07.18 ஆம் திகதி திங்கட்கிழமை) பகல் 12 மணியளவில் பஞ்சம திதியும் புரட்டாதி நட்சத்திரமும் கூடிய சுபவேளையில், கொடியேற்றம் நடைப்பெற்றது.

கோவில் அமைவிடமும் தோற்றமும்

மத்திய மாகாணத்தில், மாத்தளை மாநகரில் இருந்து, இரண்டு கிலோ மீற்றர் தொலைவில், இரத்தோட்டை வழியாக செல்லும் பாதையில், என்றும் வற்றாத நதிக்கரை ஓரத்தில், களுதாவளை எனும் வரலாற்று புகழ்மிக்க புண்ணிய  இடத்தில், இராஜகோபுரத்தோடு கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கிறது ஏழுமுகக் காளியம்மன் கோவில்.

1839ஆம் ஆண்டில் தென்னிந்தியாவில் இருந்து, இலங்கைக்கு தொழிலுக்காக 1846ஆம் ஆண்டு வரை கப்பலில் எம்மக்கள் கூட்டம்கூட்டமாய் வரவழைக்கப்பட்டனர். இவ்வாறு, தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு 120 தமிழர்களை ஏற்றிவந்த ‘ஆதிலெட்சுமி’ என்ற கப்பல் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. இதில், மீதப்பட்டோர் தலைமன்னார்  கடற்கரையில் இறக்கிவிடப்பட்ட நிலையில், ஹபரண என்னும் காட்டுப்பாதை வழியாக வந்த அம்மக்களை வரவேற்ற கிராமம் ‘மாத்துளா’ எனும் தற்போதைய மாத்தளை மாநகரமாகும்.

மாத்தளை மாநகரம் சிறியதொரு மேட்டுநிலமாகவும் அதைச்சூழ மிகப்பெரிய சுற்றுவட்டத்தில் நக்கில்ஸ் என அழைக்கப்படும் தொடர்குன்றுகளையும் கொண்ட அழகிய இயற்கை எழில் கொண்ட நிலமாகும்.

வடக்கு - கிழக்கு எல்லைகளாக சுடுகங்கை ஆற்றின் கரையில், தற்காலிகமாக மடுவம் போட்டு தங்கி, குளித்து, உண்டு, உறங்கி, ஓய்வெடுப்பர். அதன்பின் அங்கிருந்து, மத்திய பகுதிகளான கண்டி, நுவரெலியா, பதுளை, மொனராகலை போன்ற மாவட்டங்களுக்கு தொழிலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகிறது.

இவ்வாறு வந்தவர்கள், தாங்கள் கொண்டு வந்த உடுதுணி மூட்டைகளில், பத்திரமாக தங்கள் இஷ்ட தெய்வங்களில் கைபிடி மண்ணையும் மிக கவனமாக பக்தியோடு சுமந்து வந்துள்ளனர். இவ்வாறு, இராமநாதபுரம் சீமையிலே, சிவகங்கையில் காவல் தெய்வமாக அருள்பாலித்த ஏழுமுக காளியம்மனின் கோவில் கைபிடி மண்ணை, பொட்டலமாக கட்டி பக்தியோடு கொண்டுவந்தவர்கள், சுடுகங்கையாற்றில் நீராடி அந்தப் பொட்டலத்தை வைத்து பக்தியோடு வழிபட்டுள்ளனர். அதுவே இன்று வானளவு உயர்ந்து மாத்தளை மண்ணுக்கு அருட்கடாட்சத்தைப் பெற்றுத்தந்துள்ளது.

மூர்த்தி, தலம், தீர்த்தம்

கோவிலின் கருவறையில் கம்பீரத்தோற்றத்தோடு நின்ற நிலையில், நாடிவரும் பக்தர்களுக்கு துயரை நீக்கி இன்பம் தருகிறாள் அன்னை ஏழுமுகக்காளி. பரிவார மூர்த்திகளாக பிள்ளையார், முருகன், விஷ்னு, சோமாஸ்கந்தர், துர்க்கை, லக்ஷ்மி, நவக்கிரங்கள் காணப்படுகின்றன. மேலும், கோவிலின் தீர்த்தமாக சுடுகங்கை காணப்படுகின்றது.

மகோற்சவ கிரியாகால நிகழ்வுகள்

2022.07.17 முதல் 2022.08.02 வரை தினமும்

காலை 8.30 மணிக்கு 108 சங்காபிஷேகம்; 10.30 மணிக்கு ஸ்தம்ப பூஜை; 11.30 மணிக்கு வசந்த மண்டப பூஜை சுவாமி உள்வீதி வெளிவீதி உலாவும்; 12.30 மணிக்கு மகேஸ்வர பூஜையும் நடைபெறும். மாலை 05 மணிக்கு சாயரட்சை பூஜையும் மாலை 06.00 மணிக்கு ஸ்தம்ப பூஜை; மாலை 06.30 மணிக்கு வசந்த மண்டப பூஜை திருவீதி உலாவும் வெளிவீதி உலாவும் இடம்பெறும்.

2022.07.31 - ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு பறவைக்காவடியும் முற்பகல் 11 மணிக்கு தீமிதிப்பு, மாலை 05.00 மணிக்கு திருச்சூரக திருவேட்டைத் திருவிழாவும் நடைபெறும்.

2022.08.01 - திங்கட்கிழமை அதிகாலை 3.00 மணிக்கு மூல விக்கிரக அம்மனுக்கு 108 சங்காபிஷேகமும் அதைத் தொடர்ந்து அதிகாலை 04.00 மணிக்கு விக்கிரக அம்மனுக்கு 1008 சகஸ்கர சங்காபிஷேகமும் காலை 06.30 மணிமுதல் 8.00 மணிவரை ருது சோபன நிகழ்வும் வசந்த மண்டப பூஜையும் இடம்பெறும்.

முற்பகல் 11 மணிக்கு இரதோற்சவம் - மூத்தேர் பவனி: இரத்தோட்டை வழியாக மாத்தளை நகருக்குச் சென்று, பிரதான வீதி, இராஜ வீதி வழியாக மந்தண்டாவளை வழிப்பிள்ளையார் ஆலயம் சென்று கோவிலை வந்தடையும்.

2022.08.02 செவ்வாய்க்கிழமை: முற்பகல் 11 மணிக்கு தீர்தோற்சவம்; இரவு 8.00 மணிக்கு கொடியிறக்கம் இடம்பெறும்.

2022.08.03.புதன்கிழமை – சண்டேஸ்வரி உற்சவம், மாலை 6.00 மணிக்கு பூங்காவனத் திருவிழா

2022.08.04 வியாழக்கிழமை – மாலை 7 மணிக்கு ஸ்ரீவைரவர் பூஜை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .