2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மருமகளை கட்டிப்பிடித்தே வீட்டிலிருந்து துரத்திய மாமி

Editorial   / 2021 மே 07 , பி.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மருமகள், மாமியார் சண்டைக்கு குறைவே இல்லை. கொடூரங்களும் அரங்கேராமல் இல்லை. ஆனால், இது கொஞ்சம் வித்தியாசமானது.

மருமகளை கட்டிப்பிடித்து கொரோனாவை தொற்றவைத்து அதையே காரணமாக சொல்லி அவரை வீட்டை விட்டே துரத்திய மாமியாரின் கொடுமை குறித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

தெலுங்கானாவின் ராஜன்னா சர்சில்லா மாவட்டம், திம்மாபூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால், அந்தப் பெண் தன் மருமகளையும், பேரப்பிள்ளைகளையும் அடிக்கடி கட்டிப் பிடித்தபடியே பேசி வந்திருக்கிறார். இதனால் மருமகளுக்கும் அவரது குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா வந்த மருமகளுக்கு இனி வீட்டில் இடம் கிடையாது என அவரது பெற்றோர் வீட்டுக்கு மாமியார் மருமகளை அடித்துத் துரத்தியிருக்கிறார். ஒடிஷாவில் ஒப்பந்த வேலைபார்த்து வந்த கணவனிடம் இந்தத் தகவலை சொல்லி இருக்கிறார் அந்தப் பெண்.

மனைவியை வீட்டை விட்டு துரத்திய தாயை கண்டிக்காமல் மகனும் இருந்துள்ளார். இது தொடர்பாக தற்போது பொலிஸில் அந்த மருமகள் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், “மாமியார் திடீரென பாசத்துடன் கட்டிபிடிக்கிறாரே என நினைத்தேன்.

ஆனால், அவருக்கு வந்த கொரோனா எங்களுக்கும் வர வேண்டும் என்ற கெட்ட நோக்கத்துடன்தான் இவ்வாறு அடிக்கடி செய்திருக்கிறார் என்பதை பின்னர்தான் உணர்ந்து கொண்டேன். இப்போது கொரோனாவைக் காரணம் காட்டியே வீட்டை விட்டு துரத்திவிட்டார்கள்.

இது தொடர்பாக பொலிஸில் புகார் கொடுத்துள்ளோம். மாமியார் மீது பொலிஸார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன், மாமியாரின் இந்தக் கொடூர புத்தி தொடர்பாக அந்தப் பெண் பேசும் வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவிவருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .